Last Updated : 26 Aug, 2014 10:29 AM

 

Published : 26 Aug 2014 10:29 AM
Last Updated : 26 Aug 2014 10:29 AM

கர்நாடகாவில் 2 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி: பாஜக கோட்டை தகர்ந்ததால் எடியூரப்பா வருத்தம்

கர்நாடகாவில் நடைபெற்ற சட்டசபை இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி 2 தொகுதிகளில் அமோக வெற்றி பெற்றுள்ளது. பாஜகவின் கோட்டையாக கருதப்பட்ட பெல்லாரியிலும் அக்கட்சி படுதோல்வி அடைந்ததால் அக்கட்சியின் தேசிய துணை தலைவர் எடியூரப்பா வருத்தமடைந்துள்ளார்.

ஷிகாரிபுரா, பெல்லாரி ஊரகம், சிக்கோடி ஆகிய 3 சட்டசபை தொகுதிகளின் எம்எல்ஏக்களான எடியூரப்பா, ராமுலு, பிரகாஷ் ஹூக்கேரி ஆகியோர் கடந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். இதனால் காலியாக உள்ள 3 தொகுதிகளுக்கும் கடந்த 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்ற‌து.

முன்னாள் பிரதமர் தேவே கவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி இத்தேர்தலை புறக்கணித்ததால் காங்கிரஸும் பாஜகவும் நேருக்கு நேர் மோதின. எனவே இந்தத் தேர்தல் முடிவுகள் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.

காங்கிரஸ் வசமானது பெல்லாரி

பெல்காம் மாவட்டம் சிக்கோடி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் பிரகாஷ் ஹூக்கேரியின் மகன் கணேஷ் ஹூக்கேரி, பாஜக வேட்பாளர் கவாடிமத்தை 31,820 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். கணேஷுக்கு 94,636 வாக்குகள் கிடைத்தன.

இதேபோல, பாஜகவின் கோட்டையாகவும், ரெட்டி சகோதரர்களின் சொந்த தொகுதியாகவும் இருந்த‌ பெல்லாரி ஊரகத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட என்.ஒய்.கோபாலகிருஷ்ணா 33 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளர் ஓபலேஷை தோற்கடித்தார். என்.ஒய்.கோபால கிருஷ்ணாவுக்கு 83,906 வாக்குகள் கிடைத்தன. இதன்மூலம் பாஜகவின் கோட்டையாகக் கருதப்பட்ட பெல்லாரி, காங்கிரஸ் வசமானதால் அக்கட்சி அதிர்ச்சி அடைந்துள்ளது.

எடியூரப்பா மகன் 'ஆறுதல்' வெற்றி

முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் கோட்டையான‌ ஷிமோகா மாவட்டம் ஷிகாரிப்புரா தொகுதியில் அவரது மகன் ராகவேந்திரா போட்டியிட்டார். அவரை வீழ்த்துவ‌தற்காக காங்கிரஸ் கட்சி, மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியுடன் கூட்டணி அமைத்தது.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தத் தொகுதியில் பாஜக வேட்பாளர் ராகவேந்திரா, காங்கிரஸ் வேட்பாளர் வீரப்பாவை விட 6,430 வாக்குகள் அதிகமாக பெற்று வெற்றிப்பெற்றார்.

தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தேசிய துணைத் தலைவர் எடியூரப்பா, “மக்களவையில் எங்களுக்கு கிடைத்த வெற்றியை இடைத்தேர்தலில் தக்க வைக்க முடியாமல் போனது வருத்தம் அளிக்கிறது. காங்கிரஸின் அதிகார பலத்தை மீறி ஷிகாரிப்புரா தொகுதியில் எனது மகன் வெற்றிப்பெற்றிருப்பது ஆறுதலாக உள்ளது''என்றார்.

கடந்த மக்களவைத் தேர்தலில் 28 இடங்களைக் கொண்ட கர்நாடகாவில் பாஜக 17 இடங்களை கைப்பற்றியது. காங்கிரஸ் 9 இடங்களிம் மட்டுமே வெற்றிபெற்றது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x