Published : 18 Nov 2018 02:34 PM
Last Updated : 18 Nov 2018 02:34 PM

5 மாநிலத் தேர்தல் எதிரொலி: 10 நாட்களில் ரூ.400 கோடிக்குத் தேர்தல் நிதி பத்திரங்கள் விற்பனை: ஆர்டிஐ மூலம் தகவல்

அக்டோபர் மாதத்தில் 10 நாட்களில் ரூ.400 கோடி மதிப்புள்ள தேர்தல் பத்திரங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன என்று தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் மனுவில் கேட்கப்பட்ட கேள்விக்கு எஸ்பிஐ வங்கி பதில் அளித்துள்ளது.

கடந்த ஜூலை மாதம் ரூ.32 கோடிக்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், அக்டோபரில் 10 நாட்களில் ரூ.400 கோடியாக உயர்ந்துள்ளது.

அரசியல் கட்சிகள் நன்கொடை பெறுவதில் வெளிப்படைத் தன்மையை உருவாக்க வேண்டும் என்ற முயற்சியின் ஒரு பகுதியாக, அரசியல் கட்சிகள் ரொக்கமாக நன்கொடைகளைப் பெறுவதற்குப் பதிலாக, தேர்தல் நிதி பத்திரங்களாகப் பெறும் முறையை மத்திய அரசு கடந்த ஜனவரியில் அறிமுகப்படுத்தியது.

அதன்படி, அரசியல் கட்சிக்கு நன்கொடை அளிக்க விரும்புவோர், வங்கிகளில் பணம் செலுத்தி, தேர்தல் நிதி பத்திரத்தைப் பெற்றுக்கொண்டு, தாம் விரும்பும் அரசியல் கட்சிக்கு அளிக்கலாம். இதன்படி 5-வது கட்டமாகத் தேர்தல் நிதிப் பத்திரங்கள் கடந்த அக்டோபர் 1-ம் தேதி முதல் 10ம் தேதி வரை நாடு முழுவதும் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட எஸ்பிஐ வங்கிக் கிளைகளில் மட்டும் விற்பனை செய்யப்பட்டன. தேர்தல் நிதிப் பத்திரங்களை விற்பனை செய்ய எஸ்பிஐ வங்கிக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூலை மாதம் ரூ32 கோடிக்குத் தேர்தல் நிதிப் பத்திரங்கள் விற்பனையான நிலையில், அக்டோபரில் 10 நாட்களில் ரூ.400 கோடிக்கு விற்பனையாகியுள்ளன என்று ஆர்டிஐ மனுவில் எஸ்பிஐ வங்கி தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், தெலங்கானா, மிசோரம் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் நிதிப் பத்திரங்கள் விற்பனை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

குறைந்த மதிப்பிலான தேர்தல் நிதிப் பத்திரங்களை பெரும்பாலும் யாரும் வாங்கவில்லை என்றும், அதிகபட்சமாக ரூ.ஒரு கோடிக்கு மதிப்புள்ள தேர்தல் நிதிப் பத்திரங்களை வாங்கியுள்ளதாகவும் ஆர்டிஐ தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி கடந்த அக்டோபர் 1-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை ரூ.401.73 கோடி மதிப்புள்ள தேர்தல் நிதிப் பத்திரங்கள் விற்பனையாகியுள்ளன. அதிகபட்சமாக மும்பையில் மட்டும் ரூ.150.70 கோடிக்குத் தேர்தல் நிதிப் பத்திரங்கள் விற்பனையாகியுள்ளன.

2-வது அதிகபட்சமாக கொல்கத்தாவில் ரூ.62.60 கோடிக்குத் தேர்தல் நிதிப் பத்திரங்கள் விற்பனையாகியுள்ளன.

கடந்த 4 முறை விற்பனை செய்யப்பட்ட தேர்தல் நிதிப் பத்திரங்களில் மார்ச் மாதம் ரூ.222 கோடிக்கும், ஏப்ரல் மாதம் ரூ.114.90 கோடிக்கும், மே மாதம் ரூ.101 கோடிக்கும், ஜூலை மாதம் ரூ32 கோடிக்கும் விற்பனையானது. ஆனால், அக்டோபர் மாதத்தில் மட்டும் ரூ.401 கோடிக்கு விற்பனையாகியுள்ளது.

அக்டோபர் மாதத்தில் ரூ.ஆயிரம் மதிப்புள்ள தேர்தல் நிதிப் பத்திரங்கள் 0.6 சதவீதமும், ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள பத்திரங்கள் 2.6 சதவீதமும், ரூ.ஒரு லட்சம் மதிப்புள்ள தேர்தல் நிதிப் பத்திரங்கள் 5.7 சதவீதமும், ரூ.10 லட்சம் மதிப்புள்ள பத்திரங்கள் 41.6 சதவீதமும், ரூ.ஒரு கோடி மதிப்புள்ள தேர்தல் நிதிப் பத்திரங்கள் 49.3 சதவீதமும் விற்பனையாகின என்று எஸ்பிஐ வங்கி தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x