

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த 5 நாட்களில் 6-வது முறையாக நேற்று இரவு பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது.
ஜம்மு- காஷ்மீரின் எல்லையோர மாவட்டமான பூஞ்ச் மற்றும் சில பகுதிகளை குறிவைத்து, பாகிஸ்தான் ராணுவம் கடந்த சில தினங்களாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில் நேற்று இரவு மீண்டும் ஹமிர்ப்பூர் அருகே பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியது.
"பூஞ்ச் மாவட்டத்தின் ஹமிர்ப்பூரில் உள்ள இந்திய நிலைகள் மீது இரவு 9 மணி முதல் பாகிஸ்தான் ராணுவத்தினர் தானியங்கி ஆயுதங்கள் மற்றும் கைத்துப்பாக்கிகளை கொண்டு தாக்குதல் நடத்தினர். இந்தியத் தரப்பில் இதற்கு பதில் கொடுத்தது. இதில் யாருக்கும் சேதம் எதுவும் ஏற்படவில்லை" என்று ராணுவ செய்தித் தொடர்பாளர் மணிஷ் மேத்தா தெரிவித்தார்.
கடந்த 5 நாட்களில் 6-வது முறையாக நேற்று இரவு பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் இந்திய எல்லையில் தாக்குதல் நடத்தியுள்ளது.
முன்னதாக கடந்த வெள்ளிக்கிழமை அன்று, இருத்தரப்பிலான அமைதி பேச்சு நடவடிக்கையை இரு நாட்டு ராணுவ அதிகாரிகளும் மேற்கொண்டனர். இதில், எல்லையில் சுமுகமான சூழலை ஏற்படுத்தவதற்காக இருதரப்பிலும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது.
எல்லையில் தற்போது நிலவும் பதற்றம், ஜம்மு- காஷ்மீரில் நாளை நடைபெற இருக்கும் சுதந்திர தின விழாவை சீர்குலைக்கக் கூடும் என்பதால் இந்திய ராணுவ வீரர்கள் அனைவரும் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.