Last Updated : 28 Nov, 2018 09:44 AM

 

Published : 28 Nov 2018 09:44 AM
Last Updated : 28 Nov 2018 09:44 AM

தமிழகத்தின் கடும் எதிர்ப்புக்கு இடையே மேகேதாட்டுவில் கர்நாடகா அணை கட்ட மத்திய அரசு அனுமதி: டிசம்பர் 6-ல் முதல்வர் குமாரசாமி முக்கிய ஆலோசனை

கர்நாடகாவில் காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டுவில் புதிய அணை கட்ட கர்நாடக அரசு தாக்கல் செய்த திட்ட வரைவு அறிக்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்த இந்த திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ள நிலையில், ஆலோசனை கூட்டத்துக்கு கர்நாடக முதல்வர் குமாரசாமி அழைப்பு விடுத்துள்ளார்.

கர்நாடக மாநிலம் ராம்நகர் மாவட்டத்தில் உள்ள கனகபுரா அருகே மேகேதாட்டு என்ற இடத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்ட அந்த மாநில அரசு நீண்டகாலமாக திட்டமிட்டு வருகிறது. கடந்த 2013-ம் ஆண்டு அப்போதைய முதல்வர் சித்தராமையா, 'மேகேதாட்டுவில் ரூ.5,912 கோடி செலவில் 66 டிஎம்சி கொள்ளளவு கொண்ட புதிய அணை கட்டப்படும். இதன்மூலம் பெங்களூரு, மைசூரு, மாண்டியா ஆகிய மாவட்டங்களின் குடிநீர் தேவை பூர்த்தி செய்ய கூட்டுகுடிநீர் திட்டமும், மின்சார தேவையை பூர்த்தி செய்ய நீர்மின் உற்பத்தி நிலையமும் அமைக்கப்படும்' என அறிவித்தார்.

இதற்கு அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா கடும் எதிர்ப்பு தெரிவித்து, கர்நாடகாவுக்கு அனுமதி அளிக்கக் கூடாது என மத்திய அரசை வலியறுத்தினார். மேலும் உச்ச நீதிமன்றத்திலும் முறையிட்டார். இருப்பினும் கர்நாடக அரசு காவிரி நீர்ப்பாசன கழக அதிகாரிகள், நீர்வளத் துறை நிபுணர்கள் மூலம் மேகேதாட்டுவில் அணை கட்டுவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து வந்தது.

காவிரி நீர்ப்பாசன கழக நிபுணர் குழு உருவாக்கிய மேகேதாட்டு திட்ட வரைவு அறிக்கையை கர்நாடக அமைச்சரவை விவாதித்து கடந்த ஆண்டு பிப்ரவரியில் அனுமதி அளித்தது. இதையடுத்து கர்நாடக அரசு கடந்த ஆண்டு அக்டோபரில் மத்திய அரசின் அனுமதி கோரி தொடக்கநிலை திட்ட வரைவு அறிக்கையை அனுப்பியது.

கர்நாடக முதல்வர் குமாரசாமி, நீர்வளத்துறை அமைச்சர் டி.கே.சிவகுமார், கர்நாடகாவை சேர்ந்த மத்திய அமைச்சர்கள் சதானந்த கவுடா, மறைந்த அனந்த்குமார் ஆகியோர் அவ்வப்போது பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து கர்நாடக அரசுக்கு அனுமதி அளிக்குமாறு வலியுறுத்தினர். அதே நேரத்தில் இந்த திட்டத்துக்கு அனுமதி அளிக்கக் கூடாது என பிரதமரிடம் தமிழக முதல்வர் பழனிசாமி வலியுறுத்தினார்.

விரிவான திட்ட வரைவு அறிக்கை

இந்நிலையில், கர்நாடகா தாக்கல் செய்த தொடக்கநிலை திட்ட வரைவு அறிக்கையை மத்திய நீர்வளத்துறை, சுற்றுச்சூழல் மற்றும் சுற்றுலாத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். சுற்றுச்சூழல் துறை ஒப்புதல் வழங்கியதைத் தொடர்ந்து மத்திய நீர் ஆணையத்தின் பார்வைக்காக அனுப்பி வைத்தனர். இதை பரிசீலித்த மத்திய நீர் ஆணையம், மேகேதாட்டு தொடக்க நிலை திட்ட வரைவு அறிக்கைக்கு நேற்று முன்தினம் அனுமதி அளித்தது.

இதுகுறித்து கர்நாடக அரசுக்கு நேற்று எழுதியுள்ள கடிதத்தில், ‘காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டுவில் அணை கட்டுவதற்கான தொடக்கநிலை திட்ட வரைவு அறிக்கை ஏற்கப்படுகிறது. அங்கு புதிய அணை கட்டுவதற்கான சாத்தியக்கூறுகளை அனைத்து மட்டத்திலும் ஆராய்ந்து விரிவான திட்ட அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். இந்த திட்டத்தை நிறைவேற்றும் அதேவேளையில் உச்ச நீதிமன்ற உத்தரவின்படி காவிரியில் தமிழகத்துக்கு வழங்கப்படும் நீரின் அளவை குறைக்கக் கூடாது' என குறிப்பிட்டுள்ளது. மேலும், மேகேதாட்டுவில் கர்நாடக அரசு அணை கட்டுவது தொடர்பாக தமிழகம்,கேரளா, புதுச்சேரி மாநில அரசுகள் தங்கள் கருத்தை தெரிவிக்க வேண்டும் என்றும் மத்திய நீர் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.

அவசரம் காட்டும் கர்நாடகா

மத்திய அரசின் அனுமதியைடுத்து, விரைவில் அணையை கட்டிவிட வேண்டும் என கர்நாடக முதல்வர் குமாரசாமி முடிவு செய்துள்ளார். மேகேதாட்டு திட்டம் குறித்து ஆலோசிக்க, வரும் 6-ம் தேதி உயர்நிலை ஆலோசனை கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார். பெங்களூருவில் உள்ள தலைமைச் செயலகத்தில் நடக்கும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்குமாறு முன்னாள் பிரதமர் தேவகவுடா, கர்நாடக முன்னாள் முதல்வர்கள், முன்னாள் நீர்வளத்துறை அமைச்சர்கள், காவிரி நீர்ப்பாசன கழக அதிகாரிகள், நீர்வளத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் டி.கே.சிவக்குமார் கூறும்போது, ‘‘மேகேதாட்டுவில் புதிய அணை கட்ட மத்திய அரசு அனுமதி அளித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த திட்டத்தை தமிழகம் ஏன் எதிர்க்கிறது என தெரியவில்லை. இந்த விவகாரத்தில் தமிழகத்துடன் சண்டையிட விரும்பவில்லை. தமிழக முதல்வருடன் பேச்சுவார்த்தை நடத்த கர்நாடக முதல்வர் குமாரசாமி அனுமதி கேட்டுள்ளார். இந்த திட்டத்தின் மூலம் தமிழகத்துக்கு செல்லும் காவிரி நீர் தடைபடாது.டிசம்பர் 6-ம் தேதி நடக்கும் ஆலோசனைக் கூட்டத்தில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவு எடுக்கப்படும்’’ என்றார்.

பிரதமருக்கு முதல்வர் கடிதம்

பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் பழனிசாமி நேற்று எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

மேகேதாட்டுவில் புதிய அணை கட்டும் கர்நாடக அரசின் சாத்தியக்கூறு அறிக்கையை தமிழக அரசு ஏற்காது என்று மத்திய அரசுக்கு ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டுவிட்டது. கர்நாடக அரசு கூறுவதுபோல குடிநீருக்காக மட்டுமின்றி, அந்த மாநிலத்தின் சாகுபடி பரப்பை அதிகரிக்கவும் இத்திட்டத்தை முன்மொழிகிறது. இது, காவிரி நதிநீர் தீர்ப்பாயத்தின் இறுதி தீர்ப்பு மற்றும் உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை அப்பட்டமாக மீறுவதாகும். தமிழக அரசின் நியாயமான எதிர்ப்பை கருத்தில் கொள்ளாமல், மேகேதாட்டு அணைக்கான திட்ட அறிக்கையை தயாரிக்க கர்நாடக அரசுக்கு மத்திய நீர்வள ஆணையம் அனுமதி அளித்துள்ளது. இது தமிழக மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், காவிரி நீரை நம்பியுள்ள லட்சக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் இது பாதிக்கும். எனவே, மேகேதாட்டு திட்டத்துக்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க காவிரி நீராவாரி நிகாம் நிறுவனத்துக்கு அளித்த அனுமதியை கைவிடும்படி மத்திய நீர்வள ஆதாரத் துறைக்கு உடனடியாக உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x