

மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவையில் இன்று, மராத்தா சமுதாயத்தினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 16 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் தீர்மானம் ஏக மனதாக நிறைவேற்றப்பட்டது.
மராத்தா சமுதாயத்தினர் இடஒதுக்கீடு கோரி நீண்டகாலமாக போராடி வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இடஒதுக்கீடு கோரி அவர்கள் நடத்திய போராட்டங்களில் வன்முறை சம்பவங்கள் நடந்தன.
இதையடுத்த, மராத்தா சமுதாயத்தினரின் கல்வி, சமூக மற்றும் பொருளாதார நிலை குறித்து பிற்படுத்தப்பட்டோர் கமிஷன் ஆய்வு செய்து மகாராஷ்டிர அரசிடம் அறிக்கை சமர்பித்தது. சில தினங்களுக்கு முன்பு, மகாராஷ்டிர மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணை குழு, தனது அறிக்கையை மாநில தலைமை செயலாளரிடம் அறிக்கையை அளித்தது.
இதையடுத்து மராத்தா சமுதாயத்தினருக்கு 16 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் என மாநில அரசு அறிவித்தது. அதற்கான தீ்ர்மானம் அம்மாநில சட்டப்பேரவையில் இன்று ஏக மனதாக நிறைவேற்றப்பட்டது. பாஜக, சிவசேனா உள்ளிட்ட கட்சிகள் இந்த தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தன.
இதுபோலவே தங்கர் சமூகத்தினரும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு கோரி வருகின்றனர். இதுகுறித்தும் அம்மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையக்குழு ஆய்வு செய்து வருகிறது.