

ஆந்திர மாநிலத்தில் குறைந்த விலைக்கு உணவு வழங்கும் திட்டமான என்.டி.ஆர் உணவகம் திட்டத்தை, முதற்கட்டமாக திருப்பதி உட்பட 4 நகரங்களில் அமல்படுத்த ஆந்திர அரசு திட்டமிட்டுள்ளது.
தமிழகத்தின் ‘அம்மா உணவக திட்ட’த்தைப் போன்று ஆந்திர மாநிலத்திலும் செயல்படுத்த, அந்த மாநிலத்தின் பொது விநியோகத்துறை அமைச்சர் பரிடால சுனிதா தலைமையில் ஒரு குழு தமிழத்தில் ஆய்வு மேற்கொண்டு ஆந்திர அரசிடம் அறிக்கை தாக்கல் செய்தது.
இதனை தொடர்ந்து, ஆந்திர மாநிலத்தில் முதற்கட்டமாக திருப்பதியில் 5 இடங்கள், விசாகப்பட்டினத்தில் 15, குண்டூரில் 10 அனந்தபூரில் 5 இடங்கள் என மொத்தம் 35 இடங்களில் ‘என்.டி.ஆர் கேண்டீன்’ எனும் பெயரில் இத்திட்டம் தொடங்கப்பட உள்ளது. இத்திட்டம் மூலம் தினமும் 3 லட்சம் பேருக்கு காலை சிற்றுண்டி, மதிய உணவு, இரவு சிற்றுண்டி போன்றவை வழங்கப்பட உள்ளன. இதனால் மாநில அரசுக்கு ஆண்டிற்கு கூடுதலாக ரூ. 160 கோடி நிதிச்சுமை ஏற்படும்.
காலை சிற்றுண்டியாக பூரி, உப்புமா, இட்லி ஆகியவை விநியோகிக்க முடிவு செய்துள்ளது. இவை தலா ரூ. 5 க்கு வழங்கப்படும்.
மதியம், சாம்பார் சாதம், புளியோதரை, தயிர் சாதம் ஆகியவை ரூ. 7க்கு வழங்க ஆலோசனை நடக்கிறது. இரவில் சப்பாத்தி வழங்கப்பட உள்ளது.