‘‘பாகிஸ்தான் உத்தரவுப்படி செயல்படும் காஷ்மீர் கட்சிகள்’’ - பாஜக பொதுச்செயலாளர் பேச்சால் சர்ச்சை

‘‘பாகிஸ்தான் உத்தரவுப்படி செயல்படும் காஷ்மீர் கட்சிகள்’’ - பாஜக பொதுச்செயலாளர் பேச்சால் சர்ச்சை
Updated on
1 min read

பாகிஸ்தானிடம் இருந்து உத்தரவு பெற்று காஷ்மீரில் மாநில கட்சிகள் செயல்படுவதாக பாஜக கூறியுள்ள புகாருக்கு தேசிய மாநாட்டுக் கட்சியின் துணைத் தலைவர் ஓமர் அப்துல்லா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீரில், பாஜக மற்றும் பிடிபி எனப்படும் மக்கள் ஜனநாயக கட்சிகள் கூட்டணியாக  ஆட்சி செய்தன. ஆனால், கடந்த மாதம் முதல்வர் மெகபூபா முப்தி தலைமையிலான பிடிபி கட்சிக்கு அளித்துவந்த ஆதரவை பாஜக வாபஸ் பெற்றது. இதையடுத்து, கடந்த ஜூன் மாதம் 19-ம் தேதியில் இருந்து ஜம்மு காஷ்மீரில் ஆளுநர் ஆட்சி நடந்து வருகிறது. சட்டப்பேரவையை ஆளுநர் முடக்கி வைத்திருந்தார். ஆளுநரின்  6 மாத ஆட்சிக் காலம் டிசம்பர் 18-ம் தேதியோடு முடிவடைய உள்ளது.

இந்தநிலையில், பிடிபி கட்சி, எதிர்க்கட்சிகளான, தேசிய மாநாட்டுக் கட்சி மற்றும் காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைக்க உரிமை கோரியது. மற்றொரு பக்கம் மக்கள் மாநாட்டுக் கட்சி பாஜக ஆதரவுடன், மற்ற கட்சிகளின் துணையுடனும் ஆட்சி அமைக்க உரிமை கோரியது. இதனால் குதிரை பேரத்துக்கு வழிவக்கும் எனக் கூறி சட்டப்பேரவையைக் கலைத்து ஆளுநர் நேற்று இரவு அறிவிப்பு வெளியிட்டார்.

இதுகுறித்து பாஜக பொதுச்செயலாளர் ராம் மாதவ் கூறுகையில் ஜம்மு - காஷ்மீரில் கடந்த மாதம் நடந்த உள்ளாட்சி தேர்தலை மக்கள் ஜனநாயக கட்சி, தேசிய மாநாட்டுக் கட்சி போன்றவை புறக்கணித்தன. பாகிஸ்தான் உளவு அமைப்பு உள்ளிட்டவற்றின் உத்தரவை பெற்றே அவர்கள் இந்த புறக்கணிப்பு முடிவை எடுத்தனர்.

இப்போது இருகட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என பாகிஸ்தானில் இருந்து உத்தரவு வந்துள்ளது. இதை ஏற்ற இரு மாநில கட்சிகளும் இணைந்து ஆட்சியமைக்க முயலுகின்றன’’ எனக் கூறியிருந்தார்.

இதற்கு தேசிய மாநாட்டுக் கட்சியின் துணைத் தலைவர் உமர் அப்துல்லா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் ‘‘உங்களிடம் ரா, என்ஐஏ, ஐபி என பல உளவு அமைப்புகள் உள்ளதே. அவர்களை வைத்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே. பொதுவெளியில் பேசும்போது உரிய ஆதாரத்துடன் பேச வேண்டும். ராம் மாதவ் தான் கூறிய புகாரை நிருபிக்க வேண்டும் அல்லது மன்னிப்பு கேட்க வேண்டும்’’ எனக் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in