

ஜம்மு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில், தீவிரவாதிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே நடந்த கடும் துப்பாக்கிச்சண்டையி்ல, 6 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். ராணுவ வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்தார்.
காஷ்மீரின் தெற்குப்பகுதியில் உள்ள சோபியான் மாவட்டம் உள்ளது. இங்குள்ள கப்ரான் பகுதியில் ஹிபுரா கிராமத்தில் தீவிரவாதிகள் மறைந்திருப்பதாக ராணுவத்தினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, இன்று காலை அப்பகுதியில் நுழைந்து ராணுவத்தினர் அதிரடியாகத் தேடுதல் வேட்டையில் இறங்கினார்கள்.
அப்போது ராணுவத்தினரைப் பார்த்ததும், தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். ராணுவத்தினரும் தீவிரவாதிகளுக்கு தகுந்த பதிலடி கொடுத்தனர். இருதரப்பினருக்கும் இடையே நீண்ட நேரம் துப்பாக்கிச் சண்டை நடந்தது. இறுதியில் 6 தீவிரவாதிகளை ராணுவத்தினர் சுட்டுக்கொன்றனர். இந்த துப்பாக்கிச் சண்டையில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் வீர மரணம் அடைந்தார் .
இது குறித்து கர்னல் ராஜேஷ் காலியா கூறுகையில், “ சோபியான் மாவட்டம், ஹிபுரா பதாகுந்த் கிராமத்தில் இன்று நடத்திய தேடுதல் வேட்டையில் 6 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். ராணுவ வீரர் ஒருவர் வீர மரணம் அடைந்தார்.
இந்த 6 தீவிரவாதிகளும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஆசாத் மாலிக், உனாஸ் ஷபி, ஷாகித் பஷிர், பாசித் இஸ்தியாக், அகுயிப், பிர்தோஸ் நஜார் ஆகியோர் என அடையாளம் தெரிந்தது. அனைவரும் காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களிடம் இருந்து நவீன தானியங்கி துப்பாக்கிகள், தோட்டாக்கள், கையெறிகுண்டுகள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன” எனத் தெரிவித்தார்.
இந்நிலையில் அப்பகுதியில் தொடர்ந்து ராணுவத்தினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். ஆதலால், சோபியான் மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செல்போன் இணைப்புகள்அனைத்தும் முடக்கப்பட்டுள்ளன.
முன்னதாக கடந்த செவ்வாய்கிழமை ராணுவத்தினர் மேற்கொண்ட தேடுதலில் சோபியான் மாவட்டத்தில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். வெள்ளிக்கிழமை ஆனந்த்நாக் மாவட்டத்தில் நடத்திய சோதனையில், ஹிஜ்புல் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த 6 தீவிரவாதிகளை ராணுத்தினர் சுட்டுக்கொன்றனர் என்பதுகுறிப்பிடத்தக்கது.