

கடந்த 2017-18 ஆம் ஆண்டில் ரயிலில் ஏ.சி. வகுப்பில் பயணிகளுக்கு வழங்கப்பட்டதில் 21 லட்சம் துண்டுகள், போர்வைகள், பெட்ஷீட்களைக் காணவில்லை என்று ரயில்வே துறை தெரிவித்துள்ளது. ஏசி வகுப்பில் பயணித்த பயணிகள் மீது சந்தேகம் இருப்பதாக ரயில்வே துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ரயில்வே அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், ''கடந்த ஆண்டில் ரயிலில் ஏசி வகுப்பில் பயணிக்கும் பயணிகளுக்கு பெட்ஷீட், போர்வை, துண்டு போன்றவை வழங்கப்படும். ஆனால், ரயில் நின்ற பின் ரயிலைச் சுத்தம் செய்யச் சென்றால், ஏராளமான பொருட்கள் காணாமல் போவது வழக்கமாகி வருகிறது. கடந்த ஆண்டில் மட்டும், 12 லட்சத்து 83 ஆயிரத்து 415 துண்டுகள், 4 லட்சத்து 71 ஆயிரத்து 77 பெட்ஷீட்கள், 3 லட்சத்து 14 ஆயிரத்து 952 தலையணை உறைகள் காணாமல் போயின. காணாமல் போன பொருட்களின் மதிப்பு ரூ.14 கோடியாகும் . இதைப் பயணிகளைத் தவிர வேறு யார் கொண்டு சென்றிருக்க முடியும்.
இதுமட்டுமல்ல, கழிவறையில் பயன்படுத்தப்படும் கோப்பை, பிளஷ் பைப், முகம் பார்க்கும் கண்ணாடி ஆகியவை தொடர்ந்து காணாமல் போகிறது. இவற்றைப் பாதுகாப்பாக வைப்பது ரயில்வே துறைக்கு பெரும் சவாலாக உள்ளது. உயர் வகுப்பில் பயணிக்கும் பயணிகளுக்கு தரமான பொருட்களையும், வசதிகளையும் செய்து கொடுக்கும் போது இப்படிச் சிக்கல் நேர்கிறது.
தற்போது நாள் ஒன்றுக்கு ரயில் ஏசி வகுப்பில் பயணிக்கும் பயணிகளுக்கு 3.9 லட்சம் துண்டுகள், தலையணை உறைகள், போர்வைகள் வழங்கப்படுகின்றன. ஆனால், இதில் பெரும்பாலும் துண்டுகளைத் தான் பயணிகள் எடுத்துச் செல்கிறார்கள்'' என மூத்த அதிகாரி தெரிவித்தார்.
ஏ.சி. வகுப்பில் பயணிக்கும் பயணிகளுக்கு சுத்தமாகப் போர்வைகள், தலையணை உறைகள், பெட்ஷீட்கள் வழங்க வேண்டும் என்பதற்காகச் சமீபகாலமாக அவற்றை வாரந்தோறும் சுத்தம் செய்யும் முறை பின்பற்றப்பட்டு வருகிறது. முன்பு இருந்ததுபோல் எடை அதிகமான போர்வைகளுக்குப் பதிலாக எடைகுறைவான, குளிர் தாங்கக்கூடிய போர்வைகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், பயணிகள் தரப்பில் இருந்து இப்படி ஒரு பிரச்சினை கிளம்பி இருக்கிறது.
ரயில்வேயின் 16 மண்டலங்களில் தெற்கு மண்டலத்தில்தான் அதிகமான அளவில் திருட்டுகள் நடக்கின்றன. கடந்த ஆண்டில் 29 ஆயிரத்து 573 பெட்ஷீட்கள், 44 ஆயிரத்து 868 தலையணை உறைகள், 2 ஆயிரத்து 747 போர்வைகள் காணவில்லை.
தெற்கு மத்திய மண்டலத்தில் 95 ஆயிரத்து 700 துண்டுகள், 29 ஆயிரத்து 747 தலையணை உறைகள், 22 ஆயிரத்து 323 பெட்ஷீட்கள், 3 ஆயிரத்து 352 பிளாங்கெட் போன்றவை காணவில்லை.
வடக்கு ரயில்வேயில் 85, 327 துண்டுகள், 38,916 பெட்ஷீட்கள், 25,313 தலையனை உறைகள், 3,223 தலையணைகள், 2,484 போர்வைகள் காணவில்லை.
கிழக்கு மத்திய மண்டலத்தில் 33,234 பெட்ஷீட்கள், 22,769 தலையணை உறைகள், 1,657 தலையணைகள், 76,852 துண்டுகள், 3,132 போர்வைகள் காணவில்லை.
கிழக்கு கடற்கரை ரயில்வே மண்டலத்தில் 43,318 துண்டுகள், 23,197 பெட்ஷீட்கள், 8,060 தலையணை உறைகள், 2,260 போர்வைகள் காணவில்லை என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.