Last Updated : 25 Nov, 2018 01:28 PM

 

Published : 25 Nov 2018 01:28 PM
Last Updated : 25 Nov 2018 01:28 PM

அயோத்தியில் ராமர் கோயில் கட்டாவிட்டால் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வராது: உத்தவ் தாக்கரே எச்சரிக்கை

அயோத்தியில் ராமர் கோயில் கட்டாவிட்டால், பாஜக மீண்டும் மத்தியில்ஆட்சிக்கு வரமுடியாது. இந்துக்களின் உணர்வுகளை சீண்டிப் பார்க்கக் கூடாது என்று சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே பாஜகவுக்கு எச்சரிக்கைவிடுத்தார்

அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வலியுறுத்தி விஸ்வ இந்து பரிஷத் சார்பில் தர்ம சபா கூட்டம் நடக்கிறது. லட்சக்கணக்கில் இந்து அமைப்பினர், பக்தர்கள் திரள்வார்கள் என்பதால், ஆயிரக்கணக்கான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும்,சிவசேனா கட்சியும் இன்று மாலை தனியாகக் கூட்டம் நடத்தி, ராமர் கோயில் கட்டுவதை வலியுறுத்த உள்ளது.

இதற்காக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்ரே இருநாட்கள் பயணமாக அயோத்தி நகருக்கு நேற்று குடும்பத்துடன் வந்தார். இன்று காலை அயோத்தியில் உள்ள ராம் லீலா கோயிலுக்குச் சென்று உத்தவ் தாக்கரே வழிபாடு நடத்தினார்கள். அங்கிருந்த சாதுக்களிடம் ஆசி பெற்றார்.

அதன்பின் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

மத்தியில் மீண்டும் பாஜக தலைமையிலான ஆட்சி உருவாகுமா அல்லது உருவாகாமல் போகுமா என்பது எனக்குத் தெரியாது. ஆனால், அயோத்தியில் ராமர் கோயில் கண்டிப்பாகக் கட்டப்பட வேண்டும். ராமர் கோயில் கட்டுவதற்கு முயற்சி எடுக்காவிட்டால், அதற்கான சட்ட வழியை உருவாக்காவிட்டால், பாஜக அடுத்த முறை ஆட்சிக்கு வர முடியாது. இந்துக்களின் உணர்வுகளை சீண்டிப்பார்க்கக் கூடாது.

நாட்கள் சென்றுவிட்டன, ஆண்டுகள் சென்றுவிட்டன, தலைமுறைகள் சென்றுவிட்டன, ஆனால், இன்னும் ராமர் கோயில் கட்டப்படவில்லை.

மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், இன்னும் நாடாளுமன்றத்தில் குளிர்காலக் கூட்டத்தொடர் மட்டுமே இருக்கிறது. இந்த கூட்டத்தொடரில் மத்தியஅரசு ராமர் கோயில் கட்ட அவசரச்சட்டத்தைக் கொண்டுவர வேண்டும்.

 

இந்துத்துவாவை சிவசேனா கட்சி ஆதரிக்கும், தொடர்ந்து ஆதரிக்கும். ராமர் கோயில் கட்டுவதற்காக அவசரச் சட்டம் அல்லது புதிதாக சட்டம் இயற்றுங்கள். எது கொண்டு வந்தாலும் அதை ஆதரிக்க சிவசேனா கட்சி தயாராக இருக்கிறது. எப்போது அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படும் என்று இந்துக்கள் கேட்கத் தொடங்கிவிட்டார்கள்.

இன்று காலை நான் ராம்லீலா கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்துவிட்டு, சாதுக்களிடம் ஆசி பெற்றேன். என்னை ஆசிர்வதித்த சாதுக்களிடம் நான் கூறியது என்னெவென்றால், நான் இங்கு அரசியல் காரணத்துக்காகவோ, வேறு ஏதோ உள்நோக்கத்துடனோ வரவில்லை. நான் அயோத்தியில் ராமர் கோயில் கட்டவேண்டும் என்ற நோக்கம் மட்டுமே இருக்கிறது என்றேன்.

நான் பாஜகவிடம் ஒன்றுமட்டும் கேட்கிறேன். நீங்கள் தேர்தல் பிரச்சாரம் செய்யும்போது, அரசியலமைப்புச் சட்டத்தில் அனைத்து வழிகளையும் ஆய்வு செய்வோம் என்கிறீர்கள். அப்படியென்றால், கடந்த 4 ஆண்டுகளாக என்ன செய்தீர்கள்., எப்போது அதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்யப்போகிறீர்கள்.

மத்தியில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரலாம், வராமலும் போகலாம்.ஆனால் அயோத்தியில் ராமர் கோயில் உறுதியாகக் கட்டப்படும்.

முதல்வர் ஆதித்யநாத், கோயில் கட்டப்படும் என்று உறுதியாகக் கூறுகிறார். எப்போது கட்டப்படும், விரைவாகப் பணியைத் தொடங்குங்கள்.

பாஜக தேர்தல் நேரத்தில் ராமர் கோயில் விவகாரத்தை அரசியலாக்கக் கூடாது. அதை வைத்து பிரச்சாரமும் செய்யக்கூடாது. இந்துக்களின் உணர்வுகளை கிள்ளுக்கீரைபோல் நினைத்துச் செயல்படக்கூடாது.

இவ்வாறு உத்தவ் தாக்கரே பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x