

மகாராஷ்டிர மாநிலத்தில் புதன் கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில் மண்மேடிட்ட புனே மாவட்ட கிராமத்திலிருந்து இதுவரை 51 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. காயம் அடைந்த நிலை யில் 8 பேரை மீட்புப் படையினர் காப்பாற்றியுள்ளனர்.
நேற்றிரவு நடைபெற்ற மீட்புப் பணியில் 10 சடலங்கள் மீட்கப்பட்டதை அடுத்து பலி 51 ஆக அதிகரித்துள்ளது. பலியானவர்களில் 23 பேர் ஆண்கள், 22 பேர் பெண்கள், 6 பேர் குழந்தைகள் ஆவர்.
நிலச்சரிவினால் பெயர்ந்து விழுந்த பாறைகள், மண் சேற்றில் மலை அடிவாரப் பகுதியில் அமைந்துள்ள மாலின் கிராமம் மண்மேடிட்டுள்ளது. 44 வீடுகள் புதையுண்டுவிட்டன. இதில் சிக்கியுள்ளதாக அஞ்சப்படும் இன்னும் 160 பேரை உயிருடன் காப்பாற்றும் வாய்ப்பு மங்கிவிட்டது.
முதல்வர் பிருத்விராஜ் சவாண் தெரிவித்த தகவல்படி புதையுண்டதாக கருதப்படும் 160 பேரில் இன்னும் 115 பேர் நிலச்சரிவில் புதைந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதனிடையே, மழை நீடிப்பதால் மீட்புப்பணியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
ராஜ்நாத் சிங் பார்வையிட்டார்
சோகம் நிகழ்ந்த அம்பேகாவன் தாலுகா மாலின் கிராமத்தை மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் பார்வையிட்டு சோகத்தில் ஆழ்ந்துள்ள கிராம மக்களுக்கு ஆறுதல் கூறினார்.
உயிரிழந்தோரின் குடும்பத்தாருக்கு பிரதமர் நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 2 லட்சம் உதவித் தொகையை அவர் அறிவித்தார்.
இயற்கைச் சீற்றத்தால் பாதிப்புக்குள்ளாகி உள்ள கிராமத்துக்கு தேவையான எல்லா உதவி களையும் பிரதமர் உறுதி அளித்தபடி மாநில அரசுக்கு மத்திய அரசு வழங்கும். நிலச் சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பத்தாருக்கு மத்திய அரசு சார்பில் இரங்கல் தெரிவிக்கிறோம் என்றார் ராஜ்நாத் சிங்.
மும்பை ஆலயம் ரூ.50 லட்சம் உதவி
இதனிடையே, மும்பையில் உள்ள ஸ்ரீ சித்தி விநாயகர் கணபதி மந்திர் நியாஸ் (பிரபாதேவி) அறக்கட்டளை நிலச்சரிவால் புதையுண்ட மாலின் கிராமத்தில் நிவாரணப் பணி மேற்கொள்ள ரூ.50 லட்சம் நன்கொடை அளிப்பதாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை அறக்கட்டளை செயல் அலுவலர் மங்கேஷ் ஷிண்டே வியாழக்கிழமை வெளியிட்டார்.