

ஊழல் கண்காணிப்பு ஆணையத் தின் (சிவிசி) அறிக்கைக்கு சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா அளித்த ரகசிய பதில் ஊடகங்களில் வெளியானதற்கு உச்ச நீதிமன்றம் நேற்று கடும் அதிருப்தி தெரிவித்தது.
சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா, சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா ஆகிய இருவரும் ஒருவர் மீது ஒருவர் லஞ்சப் புகார் எழுப்பியதை தொடர்ந்து, அவர்கள் இருவரையும் மத்திய அரசு கடந்த 23-ம் தேதி இரவு கட்டாய விடுப்பில் அனுப்பியது.
கட்டாய விடுப்புக்கு எதிராக சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதில் அலோக் வர்மா மீதான புகார்கள் குறித்து பூர்வாங்க விசாரணை மேற்கொண்டு அறிக்கை அளிக்க சிவிசி-க்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. சிவிசி தனது அறிக்கையை கடந்த 12-ம் தேதி தாக்கல் செய்தது. இதை ஆராய்ந்த உச்ச நீதி்மன்றம், “சிவிசி தனது அறிக்கையில் அசாதாரண விஷயங்கள் சிலவற்றை குறிப்பிட்டுள்ளதால் இதற்கு அலோக் வர்மா பதில் அளிக்க வேண்டும்” என உத்தரவிட்டது.
இதையடுத்து வர்மா தனது பதிலை சீலிட்ட உறையில் உச்ச நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் தாக்கல் செய்தார். வர்மாவின் ரகசிய பதில், செய்தி இணைய தளம் ஒன்றில் வெளியானது.
இந்நிலையில் வர்மாவின் வழக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது வர்மாவின் பதில் ஊடகங்களில் கசிந்ததற்கு நீதிபதி கள் கடும் அதிருப்தி தெரிவித்தனர். சிபிஐ-யின் கண்ணியத்தை காக் கவே வர்மாவின் பதிலை ரகசியமாக வைத்திருக்க விரும்பினோம் என நீதிபதிகள் கூறினர். பிறகு வழக்கு விசாரணையை வரும் 29-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
மற்றொரு வழக்கு
உச்ச நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் சிபிஐ டிஐஜி மனோஜ் குமார் சின்ஹா தனது இடமாற்ற உத்தரவுக்கு எதிராக மனு தாக்கல் செய்தார். அவர் தனது மனுவில் சிபிஐ சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானாவுக்கு எதிரான லஞ்ச வழக்கில் மத்திய இணை அமைச்சர் ஹரிபாய் பார்த்திபாய் சவுத்ரி, மத்திய ஊழல் கண் காணிப்பு ஆணையர் கே.வி.சவுத்ரி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவில் உள்ளிட்டோர் தலை யிட்டதாக குற்றம் சாட்டியிருந்தார்.
இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து ரகசியம் காக்குமாறு மனுதாரர் சின்ஹாவிடம் உச்ச நீதிமன்றம் கூறியது. ஆனால் இந்தக் குற்றச் சாட்டுகள் ஊடகங்களில் வெளியா னது. இதற்கும் நீதிபதிகள் நேற்று கடும் அதிருப்தி தெரிவித்தனர்.
ராகுல் விமர்சனம்
இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில், “தலைநகர் டெல்லியில் ‘நாட்டின் காவலாளி திருடன்’ என்ற கிரைம் த்ரில்லர் ஓடிக்கொண்டிருக்கிறது. இதன் புதிய அத்தியாயத்தில் ஓர் அமைச் சர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர், சட்ட அமைச்சக செயலாளர் மற்றும் கேபினட் செயலாளர் மீது கடும் குற்றச்சாட்டுகளை சிபிஐ டிஐஜி கூறியுள்ளார். அதிகாரிகள் களைத் துப் போயுள்ளனர். நம்பிக்கை சிதைக்கப்பட்டுள்ளது. ஜனநாயகம் கதறுகிறது” என்று கூறியுள்ளார்.