Published : 08 Nov 2018 12:22 PM
Last Updated : 08 Nov 2018 12:22 PM

கட்டாய ஆதாரை எதிர்ப்போம் - ஐந்து மாநிலத் தேர்தல்களிலும் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொள்ளும் கட்சி சாரா இயக்கங்கள்

ஐந்து மாநிலங்களில் தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கும் வேளையில் அங்கு பிரச்சாரம் சூடுபிடித்து வருகிறது. ஆதாரின் கட்டாயத் தேவை என்பதன் மீதான எதிர்ப்பை ஒரு முக்கிய துருப்புச்சீட்டாக பயன்படுத்த கட்சி சாரா சமூக நலக் குழுக்களும் இதில் முனைந்து வருகின்றன.

தெலுங்கானா, மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களில் வாக்குப்பதிவுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் அங்கு கட்சிகளின் பிரச்சாரம் சூடுபிடித்து வருகின்றன. இதில், சமூக நலன்களுக்காக கட்டாய ஆதாரை எதிர்க்கவேண்டும் எனவும், கட்டாய ஆதார் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர வலியுறுத்தியும் சமூக நலக்குழுக்கள் ஒன்றிணைந்து மக்களிடையே பிரச்சாரம் செய்து வருகின்றன.

இப்பிரச்சாரத்தின்போது ஆதார் மக்களிடையே ஏற்படுத்தி வரும் பாதிப்புகள் தவிர்க்கப்பட வேண்டிய புரிதல்களை உருவாக்க கட்சி சாரா சமூக நல அமைப்புகள் கோரி வருகின்றன.

''அடிப்படை உணவு உரிமை'' மற்றும் ''ஒருங்கிணைந்த சமூக நலக் குழுக்கள்'' ஆகியவை ஒன்றிணைந்து கூட்டாக வெளியிட்ட அறிக்கை வருமாறு:

ஐந்து மாநிலங்களிலும் தேர்தல் நெருங்கிவரும் வேளையில் மத்திய அரசு ஆதார் சட்டம் கொண்டு வந்திருப்பதில் உள்ள குழப்பங்களை அதை ஆதரிக்கும் கட்சிகள் தெளிவுபடுத்தியாக வேண்டும்.

இதனை வலியுறுத்தி நாங்கள் ஆதார் மீதான ஒரு தீர்மானத்தை இயற்றியுள்ளோம். அதை நாங்கள் அனைத்து அரசியல் கட்சிகளிடமும் மக்களிடமும் முன்னெடுத்துச் செல்ல உத்தேசித்துள்ளோம். அதில், ஆதார் சட்டத்தில் ''கட்டாயத் தேவை'' என்பதை ரத்து செய்து சட்டத் திருத்தம் கொண்டு வர வேண்டும் என்பதை வலியுறுத்துவோம்.

இது மட்டுமின்றி, மக்கள் மீது கட்டாய ஆதாரை சுமத்துவது பல சந்தர்ப்பங்களில் மிகுந்த துயரத்தையும் உயிரிழப்பையும்கூட ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மற்றும் ஜார்கண்ட் போன்ற இடங்களில், மத்திய அரசின் திட்டத்தின்கீழ் கிடைக்கும் அரிசி உள்ளிட்ட உணவுப் பொருட்களைப் பெற அணுகுவதற்குகூட பயோமெட்ரிக் அங்கீகாரம் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனால் லட்சக்கணக்கான மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

எனவே, மத்திய அரசின் இந்த மாபெரும் சோதனையில் அதிகம் பாதிக்கப்பட்டது அடித்தட்டு மக்களே. எந்தெந்தக் கட்சிகள் ஆதார் கட்டாயம் தேவை என்று வலியுறுத்திக் கொண்டிருக்கின்றனவோ அக்கட்சிகள் மக்களிடையே ஓட்டு கேட்டு வரும்போது அக்கட்சிகளைப் பார்த்து ஆதார் கட்டாயத் தேவையை கைவிடுவீர்களா? அதை முதலில் தெளிவாக்குங்கள் என்று கேட்கும்படி மக்களிடம் நாங்கள் பேசி வருகிறோம்.

இவ்வாறு ஒருங்கிணைந்த சமூக நல குழுக்களின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x