Published : 29 Nov 2018 12:31 PM
Last Updated : 29 Nov 2018 12:31 PM

தெலங்கானா தேர்தலை கலக்கும் பிரியாணி அரசியல்: அமித் ஷாவுக்கு ஒவைசி பதிலடி

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தெலங்கானா மாநிலத்தில் பிரசாரத்தில் பிரியாணி முக்கிய இடத்தை பிடித்துள்ளது. பிரியாணியை வைத்து எதிர்ப்பார்ப்பாகவும், ஆதரவாகவும் பாஜகவும், மஜிலிஸ் கட்சியும் பரபரப்பு குற்றச்சாட்டுக்களை முன் வைத்து வருகின்றன.

தெலங்கானாவில் உள்ள 119 தொகுதிகளுக்கும் வரும் டிசம்பர் 7-ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித் ஷா, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, அம்மாநில முதல்வர் சந்திரசேகர் ராவ் உள்ளிட்டோர் தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர்.

சமீபத்தில் தேர்தல் பிரசாரம் செய்த பாஜக தலைவர் அமித் ஷா, ‘‘தெலங்கானா முதல்வரும், தெலங்கானா ராஷ்ட்ரீய சமதி கட்சித் தலைவருமான சந்திரசேகர் ராவ், முஸ்லிம் மக்களுக்கு பிரியாணி கொடுத்து ஆதரவு திரட்டி வருகிறார்’’ என குற்றம்சாட்டி இருந்தார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்ஹாதுல் முஸ்லிமன் (ஏஐஎம்ஐஎம்) கட்சித் தலைவர் அஸாதுதீன் ஒவைசி பிரசாரம் செய்து வருகிறார். ஹைதராபாத்தில் நேற்று நடந்த பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்ட பேசிய அவர் ‘‘அமித் ஷா அவர்களே பிரியாணியை பற்றி உங்களுக்கு என்ன கவலை? விருப்பமுள்ளவர்கள் கொடுக்கிறார்கள். தேவைப்படுபவர்கள் வாங்கி சாப்பிடுகிறார்கள். நீங்கள் ஏன் இதில் மூக்கை நுழைக்கிறீர்கள்.

உங்களுக்கும் பசியாக இருந்தால் நீங்களும் வாங்கி சாப்பிடுங்கள். தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ், பாஜக தலைவர் அமித் ஷாவுக்கு கல்யாணி (மாட்டுக்கறி) பிரியாணி ஒரு பக்கெட் அனுப்ப வேண்டும் என கேட்டுக்கொள்ளப் போகிறேன். அமித் ஷா டெல்லி புறப்படும் முன்பு இதனை செய்ய வேண்டும். தேவையானால் அவர் வாங்கி சாப்பிடட்டும். மற்றவர்கள் சாப்பிட்டால் உங்கள் வயிறு ஏன் வலிக்கிறது’’ என பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x