பிஹார் முன்னாள் அமைச்சர் சரண்

பிஹார் முன்னாள் அமைச்சர் சரண்
Updated on
1 min read

பிஹாரில் சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக தலைமறைவாக இருந்து வந்த அம்மாநில முன்னாள் பெண் அமைச்சர் மஞ்சு வர்மா நேற்று நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

பிஹார் மாநிலம் முசாபர்பூரில் ஆதரவற்றோர் இல்லம் ஒன்று இயங்கி வந்தது. இந்த இல்லத்தில் டாடா நிறுவனம் மேற்கொண்ட ஆயிவின்போது, அங்கு தங்கியிருந்த ஆதரவற்ற சிறுமிகள் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்படுவது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் விசாரணை நடத்திய சிபிஐ அதிகாரிகள், காப்பகத்தின் உரிமையாளர் பிரஜேஷ் தாக்குர் உட்பட 11 பேரை கைது செய்தனர்.

இந்நிலையில், மேற்கூறிய காப்பகத்துக்கு பிஹார் சமூகநலத் துறை அமைச்சராக இருந்த மஞ்சு வர்மாவின் கணவர் சந்திரசேகர் வர்மா அடிக்கடி சென்று வந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். மேலும், அவரது இல்லத்தில் சோதனை செய்தபோது துப்பாக்கி உள்ளிட்ட ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதன் தொடர்ச்சியாக, தமது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த மஞ்சு வர்மா கைது நடவடிக்கையை தவிர்ப்பதற்காக தலைமறைவானார். அவரை சிபிஐ அதிகாரிகள் தீவிரமாக தேடி வந்த நிலையில், பெகுசராய் முதன்மை மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் மஞ்சு வர்மா நேற்று சரண் அடைந்தார். இதையடுத்து, அவரை வரும் டிசம்பர் 1-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார். - பிடிஐ

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in