Published : 22 Nov 2018 03:49 PM
Last Updated : 22 Nov 2018 03:49 PM

சபரிமலை பக்தர்கள் வருகை கடும் சரிவு: விற்பனை இல்லாமல் அப்பம், அரவணை தயாரிப்பு குறைப்பு

சபரிமலை தொடர்பான சர்ச்சை தொடர்ந்து நீடித்து வரும் நிலையில் மண்டல பூஜை சீசனில் பக்தர்கள் வருகை 5ல் 4 பங்கு குறைந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அப்பம், அரவணை பாயசம் போன்றவை விற்பனை மந்தமாகியுள்ளதால் அதன் தயாரிப்பை குறைக்குமாறு தேவசம்போர்டு உத்தரவிட்டுள்ளது.

கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் செல்ல 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்களுக்கு அனுமதி இல்லை. இதை எதிர்த்து தொடரப் பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதி மன்றம், அனைத்து வயது பெண்களும் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் செல்லலாம் என்று கடந்த செப்டம்பர் 28-ம் தேதி தீர்ப்பளித்தது.

இதைத் தொடர்ந்து கடந்த அக்டோபர் 17-ம் தேதி ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டபோது சில இளம்பெண்கள் கோயிலுக்குச் செல்ல முயன்றனர். இந்து அமைப்பினரின் கடும் எதிர்ப்பு காரணமாக அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். கடந்த 22-ம் தேதி கோயில் நடை சாத்தப்பட்டது.

மண்டல பூஜைக்காக சபரிமலை கோயில் நடை கடந்த 16-ம் தேதி திறக்கப்பட்டது. கடந்தமுறை நடந்த போராட்டத்தையடுத்து முன்னெச்சரிக்கையாக  15 ஆயிரம் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். இதுமட்டுமன்றி வழிபாடு நடத்தவரும் பக்தர்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை கேரள போலீஸார் விதித்துள்ளனர்.

அரவணை பாயசம், அப்பம் உள்ளிட்ட பிரசாதங்கள் விற்பனை செய்யும் கவுன்டர்களை இரவு 10 மணிக்கு மூடவும், அன்னதான கூடங்களை 11:00 மணக்குள் மூட வேண்டும், கோயில் நடையை இரவு சாத்தி சாவியை ஒப்படைக்க வேண்டும், சன்னிதானத்தில் உள்ள அனைத்து கடைகளும் இரவு 10 மணிக்குள் அடைக்கப்பட வேண்டும், பக்தர்கள் யாரும் இரவு சன்னிதானத்தில் தங்கக்கூடாது என்று போலீஸார் உத்தரவு பிறப்பித்தனர்.

மேலும் இரண்டாம் நாளில், சபரிமலை சன்னிதானத்தில் தரிசனம் முடித்து வெளியே வந்த பக்தர்களை உடனடியாக மலையை விட்டு கீழே இறங்குமாறு போலீஸார் உத்தரவிட்டனர். இதற்கு பக்தர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்து சபரிமலையில் இரவு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர். பக்தர்கள் 70 பேர் கைது செய்யப்பட்டனர்.

சபரிமலை தொடர்பான சர்ச்சை தொடர்ந்து வரும்நிலையில் கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை கணிசமாக சரிந்துள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. மண்டல பூஜை சீசனில் கடந்த ஆண்டு முதல் வாரத்தில் மட்டும் சுமார் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர்.

ஆனால் இந்த ஆண்டு ஒருவாரத்தில் ஒரு லட்சத்து 42 ஆயிரம் பேர் மட்டுமே கோயிலுக்கு வந்துள்ளனர். இதுபோலவே சபரிமலையில் விற்பனை செய்யப்படும் அப்பம் மற்றும் அரவணை பாயசத்தின் விற்பனையும் கடுமையாக குறைந்துள்ளது. இதையடுத்து அதன் தயாரிப்பை தற்காலிகமாக குறைக்குமாறு திருவாங்கூர் தேவசம்போர்டு அதிகாரிகள், கோயில் நிர்வாகிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

சபரிமலையில் தொடர்ந்து மோதலும், கைதும் நடந்து வருவதால் பக்தர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளதாக தேவசம்போர்டு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நிலைமை சீரடையும் என்றும் அடுத்தடுத்த வாரங்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாகும் என நம்புவதாகவும் தேவசம்போர்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து பக்தர்கள் சிலர் கூறுகையில் ‘‘ஆண்டுதோறும் மண்டல பூஜை தொடங்கியவுடன் நான் சபரிமலை வந்து விடுவேன். எந்த ஆண்டும் இல்லாத அளவு தற்போது கூட்டம் குறைவாக காணப்படுகிறது. கோயில் சன்னிதானம் அருகே நிதானமாக நின்று வழிபடும் அளவுக்கு கூட்டம் குறைவாக உள்ளது.

18 படி ஏறிவரும் போது கீழே குனிந்து தொட்டு வழிபாடு நடத்த முடியாது. அந்த அளவுக்கு பக்தர்கள் கூட்டம் நெருக்கியடித்துக் கொண்டு முன்னேறும். ஆனால் தற்போது அந்த அளவு கூட்டம் இல்லை. வசதியாக குனிந்து என்னால் வழிபாடு நடத்த முடிந்தது’’ எனக் கூறினார்.

தேவசம்போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் கூறுகையில் ‘‘சபரிமலையில் பக்தர்களுக்கு எந்த கெடுபிடியும் இல்லை. சில கட்டுப்பாடுகளும் விரைவில் விலக்கிக் கொள்ளப்படும். பக்தர்கள் வருகைக்காக பல்வேறு வசதிகளை செய்து கொடுத்துள்ளோம்’’ எனக் கூறினார்.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் வரும் வருவாயை வைத்து, திருவாங்கூர் தேவசம்போர்டு தனது கட்டுப்பாட்டில் உள்ள சுமார் 1,200 கோயில்களுக்கும் செலவு செய்து வருவது குறிப்பிடத்தக்கது.  

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x