

சத்தீஸ்கரில் நேற்று நடந்த இரண்டாம் கட்ட சட்டப்பேரவைத் தேர்தலில் 71.93 சதவீத வாக்குகள் பதிவாகின.
சத்தீஸ்கர் மாநிலத்தில் மொத்த முள்ள 90 சட்டப்பேரவைத் தொகுதி களில் முதல்கட்டமாக கடந்த 12-ம் தேதி 18 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. நக்சல் ஆதிக்கம் நிறைந்த பகுதிகளாக இருந்தபோதும் 70 சதவீத வாக்குகள் பதிவாகின.
மீதமுள்ள 72 தொகுதிகளுக்கு இரண்டாம் கட்டமாக நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 1,079 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதில் 19 பேர் மட்டுமே பெண் வேட்பாளர்கள். 1.54 கோடி பேர் வாக்குரிமை பெற்றுள்ளனர். இதில் 77.53 லட்சம் பேர் ஆண்கள். 76.46 லட்சம் பேர் பெண்கள். அவர்களுக்காக 19,296 வாக்குச் சாவடிகள் அமைக்கப் பட்டிருந்தன. பாதுகாப்புப் பணியில் சுமார் ஒரு லட்சம் வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.
காலை 8 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. பிற்பகலில் வாக்கு சதவீதம் அதிகரித்தது. மாலை 5 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில் 71.93 சதவீத வாக்குகள் பதிவாகின.
மும்முனைப் போட்டி
சத்தீஸ்கரில் ஆளும் கட்சியான பாஜக, நான்காவது முறையாக ஆட்சி அமைக்க தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது. பலமான எதிர்க்கட்சியாக காங்கிரஸ் களமிறங்கியுள்ளது. முன்னாள் முதல்வர் அஜித் ஜோகி புதிதாக தொடங்கிய ஜனதா காங்கிரஸ் சத்தீஸ்கர், மாயாவதியின் பகுஜன் சமாஜ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. இதனால் மும்முனை போட்டி நிலவுகிறது.
வரும் டிசம்பர் 11-ம் தேதி வாக்கு எண்ணிக்கையின்போது சத்தீஸ்கர் மாநிலத்தில் ஆட்சி அமைக்கப் போவது யார் என்பது தெரியும்.