Published : 22 Nov 2018 01:28 PM
Last Updated : 22 Nov 2018 01:28 PM

யார் இந்த யதீஷ் சந்திரா?

ஒரே நாளில் ஒரு போலீஸ் அதிகாரி ஊடக கவனத்தைப் பெற்றதோடு சமூக வலைதளங்களின் பார்வையிலும் விழுந்துள்ளார். 'அமைச்சருடன் பக்குவமாக வாக்குவாதம் செய்தீர்கள்' என்று அவருக்கு மக்கள் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில்,  எஸ்.பி. யதீஷ் சந்திராதான் நேற்று கூகுளில் அதிகமாக தேடப்பட்டுள்ளார்.

அவரைப் பற்றிய தகவல்கள்:

பெயர்: யதீஷ் சந்திரா
வயது: 32
படிப்பு: ஐபிஎஸ்
பதவி: பத்தனம்திட்டா மாவட்ட எஸ்.பி.

கர்நாடகா மாநிலத்தின் தாவணகரேமாவட்டத்தில்தான் யதீஷ் சந்திரா பிறந்தார். பள்ளிப் படிப்பு அங்குதான் முடித்துள்ளார். பாபுஜி பொறியியல் கல்லூரியில் பொறியியல் பயின்றுள்ளார். பின்னர், மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றியுள்ளார். 

2010-ம் ஆண்டு யுபிஎஸ்சி தேர்வு எழுதி வென்றார். அகில இந்திய அளவில் 211-ம் இடம் பிடித்துள்ளார். கடந்த 2015-ம் ஆண்டு  கேரள மாநிலத்தில் பணியமர்த்தப்பட்டார். முதன்முதலாக அவர் அங்கமாலி மாவட்டத்தில் பணியமர்த்தப்பட்டார். அப்போது கேரளாவில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றது. கம்யூனிஸ்ட்கள் எதிர்க்கட்சியாக இருந்தனர். காங்கிரஸ் அரசைக் கண்டித்து கம்யூனிஸ்ட்கள் நடத்திய போராட்டத்தில் இவர் நடத்திய தடியடி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தடியடியில் காயமடைந்தவர்கள் கிட்டத்தட்ட 10 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். வீடியோ ஆதாரங்களும் வெளியானதால் யதீஷ் சந்திரா சிக்கலில் மாட்டிக்கொண்டார்.

அன்று ஆதரித்த பாஜக:

2015-ல் கம்யூனிஸ்ட்கள் மீது நடத்தப்பட்ட தடியடி சம்பவத்துக்குப் பின்னர் யதீஷ் சந்திரா பாஜகவாலும் சங் பரிவாரங்களாலும் கொண்டாடப்பட்டார். அப்போது அவரைப் பாராட்டி சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துகளை பாஜகவினர் பதிவிட்டனர். இவர்தான் கம்யூனிஸ்ட்களை அடக்க சரியான ஆள் என்றெல்லாம் கொண்டாடினர்.

திட்டித் தீர்த்த அச்சுதானந்தன்.

கேரள முதல்வராக இருந்த அச்சுதானந்தன், கம்யூனிஸ்ட்களை இரக்கமின்றி அடித்துத் துரத்திய யதீஷ் சந்திரா ஒரு பைத்தியக்காரர் என்று விமர்சித்தார். இன்னும் மோசமான வார்த்தையும் அவர் பயன்படுத்தியிருந்தார். மேலும், அப்போதே பினராயி விஜயன், அந்த அதிகாரியைப் பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என்று பரிந்துரைத்தார்.

நடந்தது வேறு!

இந்நிலையில் 2016-ல் கம்யூனிஸ்ட்கள் ஆட்சிக்கு வந்தவுடன் யதீஷ் சந்திரா ஏதோ ஒரு உப்பு சப்பில்லாத இலாகாவுக்கு தூக்கி அடிக்கப்படுவார் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 2017 ஜனவரியில் எர்ணாகுளம் மாவட்டம் காவல்துறை துணை ஆணையராக நியமிக்கப்பட்டார். அதே ஆண்டு ஜூன் மாதம் எல்பிஜி குழாய் பதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து உயர் நீதிமன்றம் முன்னால் மக்கள் போராட்டம் நடந்தது. அப்போதும் தடியடி நடத்தினார்.

சிறுவன் சொன்ன சாட்சி

அந்த தடியடி சம்பவத்தில் ஆலன் என்ற 7 வயது சிறுவனும் பாதிக்கப்பட்டார். எஸ்.பி.யதீஷ் சந்திரா தன்னைத் தாக்கியதாக சிறுவன் ஆலன் சாட்சி சொல்ல, மனித உரிமைகள் ஆணையத்தில் இந்த வழக்கு இன்னமும் நிலுவையில் உள்ளது. இந்நிலையில்தான் அவர் கடந்த ஆண்டு பத்தனம்திட்டா மாவட்டத்தின் எஸ்.பி.,யாக பதவி உயர்வு அடைந்தார்.

இவரது ரோல் மாடல் யார் தெரியுமா?

யதீஷ் சந்திரா மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றும்போது ஐபிஎஸ் அதிகாரி ரூபா திவாகரை தனது ரோல் மாடலாகக் கொண்டிருக்கிறார். அவரது செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்டே இவர் யுபிஎஸ்சி தேர்வும் எழுதியிருக்கிறார். நிறைய மேடைகளில் தனது ரோல் மாடல் ரூபா ஐபிஎஸ் எனக் கூறியுள்ளார்.

இந்த ரூபாதான் கர்நாடக சிறையில் இருக்கும் சசிகலாவுக்கு பல்வேறு சலுகைகள் செய்து தரப்பட்டதாக பரபரப்பு தகவல்களை வெளியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நடந்தது என்ன?

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயதுப் பெண்களையும் அனுமதிக்கலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தாலும் தேவசம்போர்டு எதிர்ப்பு காரணமாக அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது.

அதனால், ஐயப்பன் கோயில் பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தனியார் வாகனங்கள் பம்பை செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அவரது ஆதரவாளர்களுடன் சபரிமலை வந்தார். அவரது வாகனத்தைத் தடுத்து நிறுத்திய போலீஸார், விஐபி என்பதால் அவரது வாகனம் மட்டுமே பம்பைக்கு அனுமதிக்கப்படும் என்றும் ஆதரவாளர்கள் அரசு வாகனத்தில்தான் செல்ல வேண்டும் என்றும் கூறினர்.

இதனையடுத்து பொன்.ராதாகிருஷ்ணன் போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது போலீஸ் அதிகாரி யதீஷ் சந்திரா ஐ.பி.எஸ்., அங்கு வந்தார்.

யதீஷ் சந்திரா அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனிடம் பொறுமையாகவும், அதே சமயம் அழுத்தம் திருத்தமாகவும் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x