Published : 16 Nov 2018 08:35 PM
Last Updated : 16 Nov 2018 08:35 PM

சபரிமலை செல்ல முடியாமல் திரும்பினார் திருப்தி தேசாய் - கொச்சி விமான நிலையத்தை உலுக்கிய ‘நாம ஜெப போராட்டம்’

சபரிமலை செல்வதற்காக வந்த பாலின சமத்துவ ஆர்வலர் திருப்தி தேசாய் கொச்சி விமான நிலையத்தைவிட்டு வெளியே வரமுடியாமல் ‘நாம ஜெப’ போராட்டம் நடந்ததால் வேறு வழியின்றி மீண்டும் அவர் புனேவுக்கு திரும்பிச் செல்வதாக அறிவித்தார்.

கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் செல்ல 10 வயது முதல் 50 வயது வரையி லான பெண்களுக்கு அனுமதி இல்லை. இதை எதிர்த்து தொடரப் பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதி மன்றம், அனைத்து வயது பெண்களும் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் செல்லலாம் என்று கடந்த செப்டம்பர் 28-ம் தேதி தீர்ப்பளித்தது.

இதைத் தொடர்ந்து கடந்த அக்டோபர் 17-ம் தேதி ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டபோது சில இளம்பெண்கள் கோயிலுக்குச் செல்ல முயன்றனர். இந்து அமைப் பினரின் கடும் எதிர்ப்பு காரணமாக அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். கடந்த 22-ம் தேதி கோயில் நடை சாத்தப்பட்டது.

ஒரு பெண் கூட ஐயப்பனை தரிசிக்கவில்லை. இந்தப் பின்னணியில் சபரிமலை தீர்ப்பை எதிர்த்து மறுசீராய்வு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.  இந்த மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த வழக்கை ஜனவரி 22-ம் தேதி முதல் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவதாக தெரிவித்துள்ளது. அதேசமயம், முந்தைய தீர்ப்பு தற்போது அமலில் இருப்பதால் அதற்கு இடைக்கால தடை விதிக்க மறுத்து விட்டது.

கொச்சி விமானநிலைத்தில் ‘நாம ஜெப கோஷம்’

இந்தநிலையில், பாலின சமத்துவ ஆர்வலர் திருப்தி தேசாய் மற்றும் அவரது சக ஆர்வலர்களும் இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை 4.40 மணியளவில் புனேயில் இருந்து கொச்சி வந்து சேர்ந்தனர். அவர்களை வெளியே வரவிடாமல், பாஜக மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் முற்றுகையிட்டனர்.

இதனால் விமான நிலையத்திலிருந்து அவர்களால் வெளியே வர முடியவில்லை. விமான நிலையத்துக்கு வெளியே  போராட்டம் நடந்து வருவதால் பதற்றமான சூழல் ஏற்பட்டது. டாக்ஸியில் செல்ல முயன்று அவர்கள் இரண்டு முறை புக் செய்தனர். ஆனால் அவர்களை சபரிமலை அழைத்துச் செல்ல டாக்ஸி ஓட்டுநர்கள் மறுத்து விட்டனர்.

நேரம் செல்ல செல்ல, ஏராளமான பாஜகவினர், சபரிமலை ஐயப்ப பக்தர்கள் என பலரும் கூடினர். இதனால் பதற்றம் அதிகரித்தது. விமான நிலையத்துக்குள் கூடி தொடர்ந்து அவர்கள் ‘நாம ஜெப’ கோஷம் எழுப்பியபடி இருந்தனர். சாமியப்பா... ஐயப்பா.... சரணம் அப்பா ஐயப்பா... என்ற கோஷம் கொச்சி விமானநிலையத்தில் தொடர்ந்து பல மணிநேரம் ஒலித்தது.

திருப்தி தேசாய் பிடிவாதம்

போராட்டம் தீவிரமாகியதால் அவரை வெளியே அழைத்துச் செல்ல மறுத்த போலீஸார் மீண்டும் புனேவுக்கு செல்லுமாறு திருப்தி தேசாயிடம் கேட்டுக் கொண்டனர். ஆனால் ஐயப்பன் கோயிலுக்கு செல்லாமல் திரும்ப மாட்டேன் எனக் கூறி அவர் மறுத்து விட்டார். பின்னர் விமான நிலையத்தில் சட்டம் - ஒழுங்கு பிரச்சினை ஏற்படுவதால் உடனடியாக வெளியேறுமாறு விமான நிலைய ஆணைய அதிகாரிகள் திருப்தி தேசாயை வற்புறுத்தினர்.

ஆனால் அவர் தனக்கு பாதுகாப்பு இல்லை என்பதால் வெளியேற முடியாது எனக் கூறினார். திருப்தி தேசாயும், அவருடன் வந்த பெண்களும் விமான நிலையத்தில் சாப்பிட்டு விட்டு ஓய்வெடுத்தனர். சுமார் 14 மணிநேரம் முடிந்த நிலையில் மாலை 6:00 மணியளவில் விமான நிலையத்தில் அளவுக்கு அதிகமானோர் கூடியபடி திருப்தி தேசாய்க்கு எதிர்ப்பு தெரிவித்து நாம ஜெப போராட்டத்தை தொடர்ந்தனர். இதனால் கொச்சி விமானநிலையமும், அதனைச் சுற்றியுள்ள பகுதியிலும் பதற்றமான சூழல் ஏற்பட்டது. நூற்றுக்கணக்கான போலீஸார் குவிக்கப்பட்டனர்.

போலீஸாருக்கு நெருக்கடி

திருப்தி தேசாயை போலவே, போராட்டத்தில் ஈடுபட்டவர்களும் திரும்பி போவதில்லை என்ற உறுதியுடன் கோஷங்கள் எழுப்பினர். இருதரப்பினரும் விடாப்பிடியாக இருந்ததால் போலீஸார் கடும் நெருக்கடிக்கு ஆளாகினர். போராட்டம் நடத்துபவர்கள் விமான நிலையத்திலேயே இரவு தங்கி போராட்டம் நடத்த ஏற்பாடுகளை செய்யத் தொடங்கினர்.

இதையடுத்து கேரள மாநில அரசு அதிகாரிகளும், போலீஸாரும் பேச்சுவார்த்தை நடத்தினர். இரவு நேரம் ஆனதால் கடைசி விமானத்தை விட்டு விட்டால் மீ்ண்டும் புனேவுக்கு செல்ல முடியாமல் இங்கேயே தங்க வேண்டிய சூழல் ஏற்படும் என திருப்தி தேசாயை எச்சரித்தனர்.

இதையடுத்து அவர் புனே திரும்பிச் செல்வதாக ஒப்புக் கொண்டார். அப்போது அவர் கூறுகையில் ‘‘சட்டம் - ஒழுங்கு பிரச்சினை ஏற்படுவதாலேயே நான் திரும்பிச் செல்கிறேன். யாருக்கும் பயந்து இங்கிருந்து செல்லவில்லை. மீண்டும் வருவேன், விரைவில் சபரிமலை செல்வேன். எனது முடிவில் எந்த மாற்றமும் இல்லை’’ எனக் கூறினார்.

புனேயில் போராட்டம்

கொச்சி விமான நிலையத்தை போலவே, புனேயில் உள்ள திருப்தி தேசாய் வீட்டின் முன்பு ஐயப்ப சேவா சங்கத்தினர், மலையாள சமாஜத்தினர் திரண்டு அவருக்கு எதிராக போரட்டம் நடத்தினர். சபரிமலைக்கு செல்ல வேண்டாம், புனேவுக்கு திரும்பி வருமாறு கோஷம் எழுப்பினர். 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x