Published : 14 Oct 2018 02:01 PM
Last Updated : 14 Oct 2018 02:01 PM

ஒயின்ஷாப் செல்ல வேண்டாம்; ஆர்டர் செய்தால் ‘ஹோம் டெலிவரி’: மகாராஷ்டிரா அரசு புதிய திட்டம்

மது அருந்திவிட்டு வாகனம் இயக்கி விபத்தில் சிக்குவோர்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் வகையில், வீட்டுக்கே மதுவகைகளை ஹோம் டெலிவரி செய்ய மகாராஷ்டிரா அரசு திட்டமிட்டுள்ளது.

இந்த திட்டத்தை செயல்படுத்தினால், நாட்டிலேயே முதல் முறையாக மக்களின் வீட்டுக்கே வந்து மதுவகைகளை அளிக்கும் அரசு என்ற பெருமையைப் பெறும்.

மகாராஷ்டிரா மாநில அரசின் கலால்வரித்துறை அமைச்சர் சந்திரசேகர் பவான்குலே ஆங்கில நாளேட்டுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

மதுவகைகள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைக்கு நாங்கள் கொண்டுவரும் திட்டம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமையும். மக்களின் வீட்டுக்கே மதுவகைகளை டெலிவரி செய்யும் திட்டம் நாட்டிலேயே மகாராஷ்டிரா அரசுதான் கொண்டுவருகிறது.

இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமே விபத்துக்களைக் குறைப்பதுதான். இருசக்கர, நான்கு சக்கர வாகனம் இயக்குபவர்கள் மது அருந்திவிட்டு வாகனம் இயக்குவதால் விபத்தில் சிக்குகிறார்கள். மதுவகைகள் வீட்டுக்கே வந்தால், குடித்துவிட்டு வாகனம் இயக்குவது குறையும். இதன்மூலம் விபத்துக்களைக் குறைக்கலாம்.

ஆன்-லைனில் காய்கறிகள், மளிகைபொருட்களை ஆர்டர் செய்வதுபோல், மதுவகைகளையும் ஆர்டர் செய்து மக்கள் பெற முடியும். ஆனால், மதுவகைகளை ஆர்டர் செய்யும் மக்களுக்குக் கண்டிப்பாக ஆதார் கார்டு இருக்க வேண்டும். மதுபாட்டில் அனைத்திலும் ஜியோ டாக் பொருத்தப்பட்டு இருக்கும். பாட்டில்களை வாங்குவோர் யார், விற்போர் யார் எனத் தொடர்ந்து கண்காணிக்க முடியும். இதன் மூலம் சட்டவிரோதமாக மதுவகைகளை விற்பனை செய்வதையும் தடுக்க முடியும் எனத் தெரிவித்தார்.

இதற்கிடையே தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் அறிக்கையின்படி, 2015-ம் ஆண்டில் நடந்த விபத்துகளில் 1.5 சதவீதம் மதுஅருந்திவிட்டு வாகனம் இயக்கியதால் விபத்து நடந்துள்ளது. அதாவது 4.64 லட்சம் விபத்துகள் மதுஅருந்தி வாகனம் இயக்குவதால் நடந்துள்ளது. இதில் 6,295 பேர் காயமடைந்துள்ளனர், 2,988 பேர் மரணடைந்துள்ளனர். சராசரியாக மதுஅருந்தி வாகனம் இயக்குவதால், சராசரியாக நாள் ஒன்றுக்கு 8 பேர் உயிரிழக்கின்றனர் எனப் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. மும்பையில் மட்டும் மதுஅருந்திவாகனம் இயக்கியதால் கடந்த 2015-ம் ஆண்டில் 84 பேர் இறந்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x