Last Updated : 14 Oct, 2018 04:24 PM

 

Published : 14 Oct 2018 04:24 PM
Last Updated : 14 Oct 2018 04:24 PM

‘மத்திய அமைச்சர் அக்பர் விவகாரத்தில் மோடியின் மவுனம் ஏற்றுக்கொள்ள முடியாது’: காங்கிரஸ் சாடல்

மத்திய அமைச்சர் எம்.ஜே. அக்பர் மீது பெண் பத்திரிகையாளர்கள் பாலியல் புகார் கூறியுள்ள நிலையில், அது குறித்து பிரதமர் மோடி எந்தவித கருத்தும் தெரிவிக்காமல் மவுனமாக இருப்பதை ஏற்றுக்கொள்ளமுடியாது என்று காங்கிரஸ் கட்சி கடுமையாகச் சாடியுள்ளது.

#மீ டூ இயக்கம் மூலம் பெண்கள் தங்கள் பாலியல் ரீதியாகப் பாதிக்கப்பட்ட விஷயங்களையும், தங்களை பாலியல் ரீதியாக சீண்டியவர்களையும் ட்விட்டர் மூலம் அம்பலப்படுத்தி வருகின்றனர்.

அந்த வகையில், 40 ஆண்டுகளுக்கும் மேலாகப் பத்திரிகை உலகில் அனுபவம் வாய்ந்தவரும், தற்போது மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சராக இருக்கும் எம்.ஜே. அக்பர் மீது 6-க்கும் மேற்பட்ட மூத்த பெண் பத்திரிகையாளர்கள் ட்விட்டரில் கடந்த ஒருவாரமாக பாலியல் புகார்களை அளித்தனர்.

ஆனால், கடந்த ஒருவாரமாக மத்திய அமைச்சர் அக்பர் வெளிநாடு பயணத்தில் இருந்ததால், அவர் எந்தவிதமான கருத்தையும் வெளியிடவில்லை. மாறாக, பாஜக தலைவர்களும், பிரதமர் மோடியும் கூட எந்தவிதமான கருத்தையும் தெரிவிக்காமல் இருந்தனர். இந்நிலையில், ஆப்பிரிக்க பயணத்தை முடித்துவிட்டு நாடு திரும்பிய மத்திய அமைச்சர் அக்பர் விரைவில் உரிய விளக்கத்தை அளிப்பேன் எனத் தெரிவித்துச் சென்றார்.

இந்நிலையில், இந்தச் சூழலிலும் பிரதமர் மோடி மவுனம் காப்பது ஏன் என்று காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஆனந்த் சர்மா நிருபர்களுக்கு டெல்லியில் அளித்த பேட்டியில் கூறியதாவது:

#மீ டூ பிரச்சாரம் என்பது, பெண்களின் மரியாதை, மாண்பு, பாதுகாப்பு, சுயபாதுகாப்பு தொடர்புடையது. இந்த விவகாரத்தில் மத்திய அமைச்சர் அக்பர் மீது பல்வேறு பெண் பத்திரிகையாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர். அவர் உரிய விளக்கத்தை அளிக்க வேண்டும்.

மத்திய அமைச்சருக்கு இருக்கும் அதே பொறுப்பு, பிரதமர் மோடிக்கும் இருக்கிறது. அவரும் தார்மீக பொறுப்பு ஏற்று இந்த விவகாரத்தில் பதில் அளிக்க வேண்டும், பிரதமர் மோடி இந்த விஷயத்திலும் மவுனம் காக்கக் கூடாது. இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி ஏன் இன்னும் மவுனம் காக்கிறார் என்பதுதான் எங்களின் அடிப்படை கேள்வியாகும். உங்களின் கருத்துக்கள் என்ன என்பதை நாட்டு மக்களுக்குக் கூறுங்கள்.

அப்போதுதான் பிரதமர் மோடியின் கருத்துக்கள், எண்ணங்கள் சரியாக இருக்கிறதா என்பதை மக்கள் முடிவு செய்வார்கள். பெண் குழந்தைகளைக் காப்போம் என்று பிரதமர் மோடி முழுக்கமிட்டு, பெண்களின் மாண்பு குறித்து மோடி பேசுகிறார். ஆனால், இந்த விஷயத்தில் மவுனம் காக்கிறார்.

பிரதமர் மோடியின் மவுனம் ஏற்றுக்கொள்ள முடியாது. அரசின் தலைவராகவும், அமைச்சரவையின் தலைவராகவும் மோடி இருக்கிறார், ஆதலால் பதில் அளிக்கக் கடமைப்பட்டவர்.

இவ்வாறு ஆனந்த் சர்மா தெரிவித்தார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x