Published : 18 Oct 2018 03:16 PM
Last Updated : 18 Oct 2018 03:16 PM

எம்.ஜே. அக்பர் தொடர்ந்த அவதூறு வழக்கு: நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளிக்க டெல்லி நீதிமன்றம் உத்தரவு

பாலியல் புகாருக்கு ஆளாகி பதவியை ராஜினாமா செய்த முன்னாள் மத்திய அமைச்சர் எம்.ஜே. அக்பர் தொடர்ந்த அவதூறு வழக்கை டெல்லி நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது. எம்.ஜே. அக்பர் வரும் அக்டோபர் 31-ம் தேதி நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பெண்கள் தாங்கள் பாலியல் ரீதியாகச் சீண்டல்களுக்கும், துன்புறுத்தல்களுக்கும் ஆளானதை #MeToo ஹேஷ்டேக் மூலம் ட்விட்டர் தளத்தில் பதிவிட்டு வெளியிட்டு வருகின்றனர். அந்தவகையில், 40 ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிகைத் துறையில் பணியாற்றிய அனுபவம் கொண்ட மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் எம்.ஜே.அக்பர் மீது பெண் பத்திரிகையாளர்கள் பலர் பாலியல் புகார்களைத் தெரிவித்துள்ளனர்.

அதில் மின்ட் லாங்க் ஆசிரியர் பிரியா ரமணி, அமெரிக்க பத்திரிகையாளர் மஜ்லி டி பு காம்ப், போர்ப்ஸ் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் கஜாலா வஹாப் உள்ளிட்ட பலர் அடங்குவர். இந்த விவகாரத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மத்திய அமைச்சர் அக்பரை கடுமையாக விமர்சித்தன. அவர் பதவியை விட்டு விலக வேண்டும் என்று வலியுறுத்தின.

இதனால், மத்திய அரசுக்கு கடும் நெருக்கடியும், தர்மசங்கடமான நிலையும் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து, தன் மீதான குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்று தெரிவித்த எம்.ஜே.அக்பர் பத்திரிகையாளர் பிரியா ரமணி மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார். இதைத்தொடர்ந்து அவர் நேற்று தனது பதவியையும் ராஜினாமா செய்தார்.

இந்த நிலையில் எம்.ஜே. அக்பர் தொடர்ந்த அவதூறு வழக்கு டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிபதி சமர் விஷால், எம்.ஜே. அக்பர் அக்டோபர் 31-ம் தேதி நேரில் ஆஜராகி தனது வாக்குமூலத்தை பதிவு செய்ய வேண்டும் என உத்தரவிட்டது. முன்னதாக இந்த வழக்கில் எம்.ஜே. அக்பர் சார்பில் ஆஜரான வழக்கிறிஞர் கீதா லுத்ரா, தனது சார்பில் வாதங்களை முன் வைத்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x