Published : 02 Aug 2014 09:12 AM
Last Updated : 02 Aug 2014 09:12 AM

உண்மையை கூறியதற்காக காங்கிரஸார் பாராட்டினர்: சோனியா குறித்து நட்வர் சிங் மீண்டும் சர்ச்சை

எனது புத்தகத்தில் உண்மையை கூறியுள்ளதற்காக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 50 பேர் என்னை தொடர்பு கொண்டு பாராட்டினார்கள் என்று முன்னாள் மத்திய அமைச்சர் நட்வர் சிங் கூறியுள்ளார்.

2004-ம் ஆண்டு சோனியா காந்தி தானாகவே விரும்பி பிரதமர் பதவியை துறக்கவில்லை. சோனியாவின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்ற ராகுல் காந்தி பயம், பிடிவாதம் காரணமாகத்தான் சோனியா பிரதமர் பதவியை ஏற்க முடியாமல் போனது என்றும், சோனியா காந்தி, மன்மோகன் சிங், ராஜீவ் காந்தி போன்றோர் குறித்த பல்வேறு சர்ச்சைக்குரிய தகவல்களையும் நட்வர் சிங் தனது சுயசரிதையில் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு பதிலளித்த சோனியா காந்தி, நானும் சுயசரிதை எழுதுவேன். அதில் உண்மைகள் இடம் பெறும் என்று கூறியிருந்தார். இந்நிலையில் வெள்ளிக்கிழமை தனியார் தொலைக்காட்சிக்கு நட்வர் சிங் பேட்டியளித்தார். அதில் கூறியது:

எனது புத்தகத்தில் உண்மைகளைக் கூறியுள்ளதற்காக காங்கிரஸைச் சேர்ந்த 50 பேர் என்னை தொடர்பு கொண்டு பாராட்டினர். நான் கூறிய உண்மைகள் சோனியாவை கடுமையாக பாதித்துள்ளன. அவர் நிலைகுலைந்துவிட்டார் என்பது அவரது பதிலில் இருந்தே தெரிகிறது. அவர் எழுதும் சுயசரிதையை படிக்க நானும் தயாராகவே இருக்கிறேன்.

ராகுல் காந்தி மனஉறுதியுள்ள நபர்தான். ஆனால் பயம் எனும் நெருப்பை வயிற்றில் கட்டிக் கொண்டுள்ளவரால் முழு நேர அரசியல்வாதியாக முடியாது. சிறந்த அரசியல்வாதி இல்லை என்றாலும் ராகுல் ஒரு சிறந்த மனிதர். அவர் தனது உயிரைப் பற்றியும் பயப்படுகிறாரா என்பது எனக்குத் தெரியவில்லை.

கொடுமையான பகையுணர்வு கொண்டவர் சோனியா காந்தி. நம்மை விட வயதில் பெரியவர் களுக்கு மதிப்பு கொடுப்பது இந்திய பாரம்பரியம். இந்தியாவில் பிறக்காதவர்களுக்கு (சோனியா) அது தெரியாது என்று நட்வர் சிங் கூறியுள்ளார்.

தன்மீது ஊழல் குற்றச்சாட்டு எழுந்தபோது தனது தரப்பு விளக்கத்தை சோனியா கேட்கவில்லை என்பதையே நட்வர் சிங் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 15 ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சியை சோனியா ஒருங்கிணைத்து வைத்துள்ளார். இல்லையென்றால் கட்சி 5 பிரிவு களாக உடைந்திருக்கும். சோனியா காந்தியுடன் சம்மதத்துடன்தான் நரசிம்ம ராவ் பிரதமராக நியமிக்கப்பட்டார். எனினும் ராவுடன் சோனியா இயல்பான நல்லுறவுடன் நடந்து கொண்டதில்லை. அது ஏன் என்று நரசிம்ம ராவ் கூட வியப்பு தெரிவித்துள்ளார். அக்காலகட்டத்தில் சில நேரங்களில் எனது முகத்தில் அறைவதுபோல சோனியா நடந்து கொண்டுள்ளார் என்று தனது சுயசரிதையில் நட்வர் சிங் குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x