

ஹரியாணாவில் காவலரால் சுடப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நீதிபதி யின் மனைவி உயிரிழந்த நிலையில், சிகிச்சை பலனின்றி மகனும் நேற்று உயிரிழந்தார்.
ஹரியாணா மாநிலம் குருகிராம் மாவட்ட கூடுதல் செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதியாக இருப்பவர் கிருஷண் காந்த். இவரது குடும்பத்தினரின் பாதுகாப்புக்காக தலைமைக் காவலர் மஹிபால் என்பவர் நியமிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், கடந்த 13-ம் தேதியன்று நீதிபதியின் மனைவி ரீத்து காந்தும், அவர்களின் 17 வயது மகன் துருவும் அப்பகுதியில் உள்ள மார்க்கெட்டுக்கு காரில் சென்றனர். காரை மஹிபால் ஓட்டிச் சென்றுள்ளார்.
இதனிடையே, பொருட்களை வாங்கிவிட்டு நீதிபதியின் மனைவி யும், மகனும் திரும்பியபோது, அவர்களின் கார் அங்கு இல்லை எனக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அவர்கள், தலைமைக் காவலர் மஹிபாலை செல்போனில் தொடர்புகொண்டு உடனடியாக வருமாறு கூறியுள்ளனர். அதன்படி அங்கு சென்ற மஹிபாலை இருவரும் கடுமையாக திட்டியதாக தெரிகிறது.
இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள் ளது. ஒருகட்டத்தில் பொறுமையை இழந்த மஹிபால், தன்னிடம் இருந்த துப்பாக்கியால் ரீத்து காந்தையும், துருவையும் சரமாரியாக சுட்டார்.
இதில் ரீத்துகாந்த் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த துருவ், அருகில் உள்ள தனியார் மருத்துவனையி்ல் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், சிகிச்சைப் பலனின்றி நேற்று அவர் உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது. இந்த வழக்கில் குற்றவாளியான தலைமைக் காவலர் மஹிபால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.