

கேரள மாநிலத்தில் வெள்ளத்தின் போது 100க்கும் மேற்பட்ட மக்களைத் தனது சொந்தப் படகில் மீட்ட இளைஞர் ஜினீஷ் சாலை விபத்தில் பலியானார். அவருக்கு ஊரே திரண்டு வந்து அஞ்சலி செலுத்திய உருக்கமான சம்பவம் நடந்துள்ளது.
செங்கனூர் அருகே பந்தநாட்டைச் சேர்ந்தவர்கள் ஜோஸ் மாத்யூ. கேரள மழை வெள்ளத்தின் போது, மாத்யூவும் அவரின் குடும்பத்தினர் 7 பேரும் வீட்டின் மாடியில் தொடர்ந்து 4 நாட்களாக உயிரைக் கையில் பிடித்தபடி அமர்ந்திருந்தனர். யாரும் காப்பாற்ற வரமாட்டார்களா? என தண்ணீர் சூழ்ந்த பகுதியை வெறித்துப் பார்த்தபடி இருந்தனர். நாட்கள் நகர அவர்களின் நம்பிக்கையும் தகர்ந்தது. அப்போதுதான் பூன்துரா பகுதியில் இருந்து கோஸ்டல் வாரியர்ஸ் என்ற பெயரில் ஜினீஷ் ஜியோரன் தலைமையில் இளைஞர்கள் வந்து மாத்யூ குடும்பத்தினரை மீட்டனர்.
தாங்கள் காப்பாற்றப்பட்ட சம்பவத்தை நினைவு கூர்ந்து மாத்யூ கூறுகையில், ''4 நாட்களாக வெள்ளத்தில் சிக்கி இருந்தோம். யாரும் காப்பாற்ற வரவில்லை. ஆனால், ஜினீஷ் வேகமாக எங்கள் வீட்டின் மாடிக்குத் தாவிக்குதித்து வந்தார். அவரின் உயிரைக்கூடத் துச்சமாக மதிக்காமல் வீட்டின் உச்சிக்கு வந்து எங்கள் அனைவரையும் காப்பாற்றினார்'' எனத் தெரிவித்தார்.
இதுமட்டுமல்ல, ஜினீஷ் குறித்து அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்தில் வசிக்கும் லீனாவும் நினைவு கூர்ந்தார். அவர் கூறுகையில், ''கேரள வெள்ளத்தில் எனது பெற்றோர் சிக்கி இருக்கிறார்கள் எனத் தெரிந்ததும் நான் முதலில் ஜினீஷைத் ஃபேஸ்புக் மூலம் தொடர்பு கொண்டு அவர்களைக் காப்பாற்றும்படி கேட்டுக்கொண்டேன். என்னுடைய பெற்றோர்களுக்கு 80 வயதுக்கு மேல் ஆகிறது. உடன்யாருமில்லை என்ற விவரத்தைத் தெரிவித்தேன். என்னுடைய வேண்டுகோளை ஏற்று, என்னுடைய 86 வயது தாயை கழுத்தளவு தண்ணீரில் நடந்து சென்று நாற்காலியுடன் அமரவைத்துத் தூக்கிவந்து ஜினீஷ் காப்பாற்றியதை மறக்க முடியாது'' என லீனா தெரிவித்தார்.
மேலும், ஆதரவற்றோர் இல்லத்தில் சிக்கி இருந்த 28 குழந்தைகளையும் ஜினீஷ் மீட்டார். அந்த ஆபத்தான இடத்துக்கு கடற்படையினர் செல்ல அஞ்சிய நிலையில் ஜினீஷ் சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டார். மேலும் மீட்புப் பணியின் போது ஜினீஷும் அவரது நண்பர்களும் பாதிக்கப்பட்டவர்களுடன் எப்போதும் தொடர்பில் இருந்தனர்.
குழுவாக 800-க்கும் மேற்பட்டவர்களையும், தனிமனிதராக 100-க்கும் மேற்பட்டவர்களையும் காப்பாற்றிய ஜினீஷ், 12-ம் வகுப்பு மட்டுமே படித்த மீனவர். தன்னுடைய உடன்பிறந்த சகோதரர்களை பட்டப்படிப்பு படிக்கவைத்து, அவர்களுடன் சேர்ந்து ஜினீஷ் மீன்பிடித் தொழில் செய்து வருகிறார். கடற்கரைக்கு அருகே ஜினீஷ் வீடு இருந்ததால், கடல் அரிப்பால் வீடுகள் இடிந்து சேதமடைந்தன. இதனால், தங்களின் சொந்த வீட்டை விட்டுவிட்டுக் கடந்த 3 ஆண்டுகளாக ஜினீஷ் வாடகை வீட்டில் வசித்து வந்தார்.
பூன்துரா பகுதியில் அனைத்துத் தரப்பு மக்களின் ஆதரவையும், அன்பையும், நட்பையும் பெற்ற ஜினீஷ் நேற்று பழைய உச்சக்கடா பகுதியில் நடந்த சாலை விபத்தில் பலியானார்.
ஜினீஷ் இறந்த செய்தி கேள்விப்பட்டதும் நூற்றுக்கணக்கான ஆண்கள், பெண்கள், குழந்தைகள், சிறியவர் என அவரின் வீட்டு முன் திரண்டு அஞ்சலி செலுத்தினார்கள். ஊரே திரண்டு வந்து, ஜினீஷின் உடல் வைக்கப்பட்டிருந்த சவப்பெட்டியை தூக்கிச் சென்று பூந்துராவில் உள்ள புனித தாமஸ் தேவாலயத்தில் உள்ள வளாகத்தில் அடக்கம் செய்தது.
இந்த இறுதிச் சடங்கின்போது, கேரள வெள்ளத்தில் ஜினீஷால் காப்பாற்றப்பட்டவர்கள் பலரும் கலந்தகொண்டு தங்களின் இறுதி அஞ்சலியையும், கண்ணீரையும் ஜினீஷுக்கு காணிக்கையாக்கினார்கள். இந்த அஞ்சலிக் கூட்டத்துக்கு வந்திருந்த ஜோஸ் மாத்யூ, ஜினீஷ் உடலுக்குக் கண்ணீர் அஞ்சலி செலுத்திச் சென்றார்.
ஜினீஷ் நடத்திய கோஸ்டல் வாரியர்ஸ் குழுவில் இருக்கும் ஜானி கூறுகையில், ''மீட்புப் பணிக்குப் போதுமான படகும், இன்ஜினும் இல்லை. உடனே ஆகஸ்ட் 16-ம் தேதி ஜினீஷ் அவரின் வீட்டில் இருந்து இன்ஜினை எடுத்துவந்து படகில் பொருத்தி மீட்புப் பணியில் ஈடுபட்டார். எங்களுடைய குழு வெள்ளத்தில் சிக்கிய ஏறக்குறைய 800 பேரைக் காப்பாற்றியது. ஆனால், இதில் பெரிய சோகம் என்னவென்றால், இத்தனை பேரைக் காப்பாற்றிய ஜினீஷ் பெயர் மீட்புப் பணியில் ஈடுபட்டவர்களின் அரசின் பட்டியலில் இல்லை. ஆனால், நாங்கள் யாரும் தாலுகா அலுவலகத்தில் எங்கள் பெயரைப் பதிவு செய்துவிட்டு மீட்புப் பணியில் ஈடுபடவில்லை, அதற்காக தாலுகா அலுவலகத்திலும் காத்திருக்கவில்லை. மீட்புப் பணியில் மட்டுமே கவனம் செலுத்தினோம்.
ஜினீஷுக்கு ஏராளமான நண்பர்கள் கூட்டம் உள்ளது. பூந்துராவில் குழந்தைகள், சிறுவர்கள் மத்தியிலும் அவருக்கு நல்ல பெயர் உண்டு. கிரிக்கெட் விளையாடுவார், நன்றாக நடனம் ஆடுவதால், குழந்தைகளுக்கு ஜினீஷை மிகவும் பிடிக்கும். தினந்தோறும் ஜினீஷ் உள்ளிட்ட அனைவரும் இந்தத் தேவாலயத்தின் முன்புதான் கூடுவோம். யாருக்கு உதவி தேவைப்பட்டாலும், எந்தச் சூழலிலும் உடனடியாக ஓடிச் சென்று உதவி செய்யும் மனிதராக ஜினீஷ் இருந்தார். இப்போது நாங்கள் ஜினீஷை இழந்துவிட்டோம்'' என்று ஜானி தெரிவித்தார்.
எப்போதும் மாலை நேரத்தில் கலகலப்பாக இருக்கும் பூந்துரா தேவாலய வளாகம் நேற்று ஜினீஷ் இல்லாததால், இளைஞர்கள் கூட்டமின்றி வெறிச்சோடிக்கிடந்தது. இனி ஜினீஷ் இல்லை, வரமாட்டார்…