Published : 16 Oct 2018 02:43 PM
Last Updated : 16 Oct 2018 02:43 PM

காங்கிரஸுக்கு அதிர்ச்சி: கோவா எம்எல்ஏக்கள் 2 பேர் விலகல்: பாஜகவில் இணைகின்றனர்

கோவா மாநிலத்தைச் சேர்ந்த 2 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் டெல்லி சென்று அமித் ஷாவை சந்தித்தனர். முன்னதாக எம்எல்ஏ பதவியில் இருந்தும், காங்கிரஸ் கட்சியில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளனர். பாஜகவில் இணையப்போவதாக  அவர்கள்  தெரிவித்துள்ளனர்.

கோவா மாநிலத்தில் பாஜக தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. சட்டசபை தேர்தலின்போது காங்கிரஸ் தனிப்பெரும்பான்மை பெற்றாலும், ஆட்சி அமைக்கும் அளவிற்கான இடத்தில் வெற்றி பெறவில்லை.

அதேவேளையில் 2-வது இடம்பிடித்து பாஜக, பிற கட்சிகள் மற்றும் சுயேட்சை எம்எல்ஏக்கள் ஆதரவுடன் ஆட்சியமைத்தது. தற்போது மனோகர் பாரிக்கர் முதலமைச்சராக இருந்து வருகிறார். தற்போது உடல்நலம் குன்றியுள்ள அவர் வெளிநாட்டிலும், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்றார்.

அவர் சிகிச்சை பெற்று வருவதால் புதிய முதல்வரை நியமிக்க வேண்டும் என பாஜகவுக்கு கூட்டணிக் கட்சிகள் மிரட்டல் விடுத்து வருகின்றன. இதனால் அந்த கட்சிகளை ‘வளைக்கும்’ முயற்சியில் காங்கிரஸ் ஈடுபட்டுள்ளது. அதே சமயம் ஆட்சியை தக்க வைக்க பாஜகவும் எதிரணியை சேர்ந்த எம்எல்ஏக்களை இழுக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளது.

இந்நிலையில் கோவா மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்எல்ஏக்களான தயானந்த் சோப்தே, சுபாஷ் ஷிரோத்கர் ஆகியோர் பனாஜியில் இருந்து நேற்றிரவு அவசரமாக டெல்லி புறப்பட்டுச் சென்றனர். அவர்கள் செல்லும் முன்பாக கோவா அமைச்சரும் பாஜக மூத்த தலைவர்களில் ஒருவருமான விஸ்வாஜி ரானே டெல்லி புறப்பட்டுச் சென்றார். தனிப்பட்ட காரணங்களுக்காக டெல்லி செல்வதாக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தெரிவித்தனர்.

இதனிடையே, டெல்லியில் பாஜக தலைவர் அமித் ஷாவை அவர்கள் இன்று சந்தித்து பேசினர். பின்னர் காங்கிரஸில் இருந்து விலகுவதாக அவர்கள் அறிவித்துள்ளனர். விரைவில் அவர்கள் பாஜகவில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் காங்கிரஸ் தலைமை அதிர்ச்சியில் உறைந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x