

68-வது சுதந்திர தினத்தை ஒட்டி பிரதமர் நரேந்திர மோடிக்கும், இந்திய மக்களுக்கும் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்திய மக்கள் வளம் பெற வாழ்த்துவதாக பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் தெரிவித்துள்ளார். இத்தகவலை இந்தியாவுக்கான பாகிஸ்தான் துணைத் தூதரகம் டெல்லியில் வெளியிட்டுள்ளது.
பாகிஸ்தானில் நேற்று சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. பாகிஸ்தானுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து இன்று பிரதமர் மோடிக்கும், இந்திய மக்களுக்கும் பாகிஸ்தான் பிரதமர் சுதந்திர தின வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
அண்மையில், காஷ்மீரில் பேசிய நரேந்திர மோடி, போர்க் களத்தில் இந்தியாவை எதிர்கொள்ள பலம் இல்லாமல் பாகிஸ்தான் இந்தியா மீது தீவிரவாதத்தை தூண்டிவிட்டு மறைமுக தாக்குதல் நடத்தி வருவதாக குற்றம்சாட்டியிருந்தார்.
பிரதமரின் குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது என பாகிஸ்தான் கூறியிருந்தது. இது தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே வாக்குவாதமே நடைபெற்றது என்பது கவனிக்கத்தக்கது. இந்நிலையில் இரு நாட்டுத் தலைவர்களுக்கு சுதந்திர தின வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டுள்ளனர்.
இந்தியா - பாகிஸ்தான் வெளியுறவுச் செயலர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தை வருகிற 25-ம் தேதி இஸ்லமாபாத்தில் நடைபெறவுள்ளது.