

பல்வேறு மசோதாக்களை நிறை வேற்றுவதற்கு வசதியாக, நாடாளுமன்றத்தின் தற்போதைய கூட்டத் தொடர் நீட்டிக்கப்படலாம் என்று நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு கூறினார்.
பாரதிய ஜனதா நாடாளு மன்ற கட்சி கூட்டம் நாடாளு மன்றத்தின் மைய மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் அமைச்சர் வெங்கய்ய நாயுடு பேசும்போது, “நாடாளுமன்றத்தில் முக்கிய மசோதாக்களை நிறைவேற்றுவதில் அரசு உறுதியாக உள்ளது. இதற்கு காங்கிரஸ் முட்டுக்கட்டை போடுமானால், நடப்பு கூட்டத்தொடர் நீட்டிக்கப் படும்.
நீதிபதிகள் நியமன ஆணைய மசோதா, சிறார் சட்டத்திருத்த மசோதா, தொழில் பழகுநர் மசோதா, தொழிற்சாலைகள் மசோதா, தொழிலாளர் சட்டத் திருத்த மசோதா, இன்சூரன்ஸ் மசோதா உள்ளிட்ட முக்கிய மசோதாக்களை நிறைவேற்றுவதில் அரசு ஆர்வம் காட்டுகிறது. ஆனால் காங்கிரஸ் கட்சியோ இந்த மசோதாக்களை நிறைவேற்றுவதில் இருந்து விலகி ஓடுகிறது.
அரசியல் சாசன திருத்த மசோதா ஒன்றும் நாடாளுமன்றத்தில் நிறை வேற்றப்பட உள்ளது. அப்போது இரு அவைகளின் கட்சி எம்.பி.க் களும் தவறாமல் ஆஜராக வேண்டும்.
காங்கிரஸ் கட்சி மாநிலங்கள வையில் தனக்குள்ள பெரும் பான்மையை, அதற்கு சாதகமாக பயன்படுத்துகிறது.
எனவே வரும் சட்டமன்ற தேர்தல்களில் பாஜகவின் வெற்றியை உறுதிப்படுத்தி, மாநிலங்களவைக்கு அதிக உறுப்பினர்கள் பெறவேண்டும். இதற்கு கட்சி எம்.பி.க்கள் அனைவரும் பாடுபடவேண்டும்” என்றார்.
நிதியமைச்சர் அருண் ஜேட்லி பேசும்போது, “நீதிபதிகள் நியமன ஆணைய மசோதாவின் நோக்கம், நீதிபதிகள் நியமனம் மற்றும் இடமாறுதலில் வெளிப்படைத் தன்மையை கொண்டுவரவேண்டும் என்பதே. இதை நீதிமன்ற அமைப்புக்கு எதிரானதாக கருதக்கூடாது” என்றார்.
சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பேசும்போது, “அரசு தாக்கல் செய்யும் பெரும்பாலான மசோதாக்கள் முந்தைய அரசால் கொண்டுவரப்பட்டவை.
நீதித்துறை சீர்திருத்த கோரிக்கை 20 ஆண்டுகளாக உள்ளது. இதுகுறித்து பாஜக தேர்தல் அறிக்கையிலும் கூறப்பட் டுள்ளது. நீதிபதிகள் நியமன ஆணைய மசோதாவுக்கு அதிமுக, திமுக, திரிணமூல் காங்கிரஸ், சமாஜ் வாதி, பகுஜன் சமாஜ் மற்றும் இடதுசாரி கட்சிகள் ஆதரவளிப் பது மகிழ்ச்சி அளிக்கிறது” என்றார்.