Published : 14 Oct 2018 12:41 PM
Last Updated : 14 Oct 2018 12:41 PM

சபரிமலை தீர்ப்புக்கு வலுக்கும் எதிர்ப்பு: பெண்களை வெட்ட வேண்டும் எனக் கூறிய நடிகர் மீது வழக்குப்பதிவு

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அனைத்து வயது பெண்களும் சாமி தரிசனம் செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு நாளுக்கு நாள் எதிர்ப்பு வலுத்து வருகிறது.

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வரும் பெண்களை இரு துண்டுகளாக வெட்ட வேண்டும் என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நடிகர் கொல்லம் துளசி மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு 10 வயதுமுதல் 50 வயதுடைய பெண்கள் செல்ல நூற்றாண்டுகளாகத் தடை இருக்கிறது. இந்தத் தடையை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், சபரிமலைஐயப்பயன் கோயிலுக்கு அனைத்து வயதுடைய பெண்களும் சென்று சாமிதரிசனம் செய்யலாம் எனத் தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்புக்கு கேரளாவில் உள்ள பந்தம் அரச குடும்பத்தினர், தந்திரி குடும்பத்தினர், மற்றும் பெண்கள் மத்தியில் கடும் அதிருப்தி ஏற்பட்டு ஏராளமானோர் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

கேரளா மட்டுமல்லாது, தமிழகத்திலும் சபரிமலையில் பெண்கள் வழிபாடு செய்யஅனுமதித்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராகப் பெண்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் பாஜகவைச் சேர்ந்த நடிகரும், கடந்த தேர்தலில் போட்டியிட்ட கொல்லம் துளசி சமீபத்தில் அளித்த பேட்டியில் சபரிமலைக்குத் துணிச்சலுடன் வரும் பெண்களை இரு துண்டுகளாக வெட்ட வேண்டும் என்று சர்ச்சைக்குரிய வகையில் பேட்டி அளித்திருந்தார்.

இதையடுத்து இந்திய ஜனநாயக இளைஞர் கூட்டமைப்பின் நிர்வாகியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவருமான ரதீஸன், நடிகர் கொல்லம் துளசி மீது திருவனந்தபுரம் போலீஸில் அவரின் பேச்சு குறித்து புகார் செய்தார்.

இதையடுத்து, நடிகர் கொல்லம் துளசி மீது ஐபிசி பிரிவு 295ஏ, 298, 354ஏ, 119ஏ ஆகியபிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், பெண்கள் குறித்து அவதூறாகப் பேசியதையடுத்து, மாநில மகளிர் ஆணையமும் இந்த விவகாரத்தை தாமாக முன்வந்து எடுத்து வழக்குப்பதிவு செய்துள்ளது. இதனால், கொல்லம் துளசிக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது, அவர் எந்தநேரமும் கைது செய்யப்படுவார் எனத் தெரிகிறது.

இந்தச் சூழலில் தனது பேச்சுக்கு நடிகர் கொல்லம் துளசி மன்னிப்பு கேட்டுள்ளார். அவர் விடுத்த அறிக்கையில், நான் பெண்கள் குறித்து அதுபோன்ற பேச்சுக்களை பேசி இருக்கக்கூடாது. சபரிமலை ஐயப்பன் மீதான என்னுடைய தீவிர பக்தி காரணமாகவே நான் அதுபோன்ற வார்த்தைகளைப் பேசிவிட்டேன். என்னுடைய வார்த்தைகளை நான் திரும்பப்பெறுகிறேன், யாருடைய மனதையும் புண்படுத்தி இருந்தால், நிபந்தனையற்ற மன்னிப்பு கோருகிறேன். என்னுடைய வார்த்தைகளை ஐயப்பபக்தர்களின் வேதனையால் வந்தவைதான் உள்நோக்கத்தில் பேசப்பட்டவை அல்ல. நான் தொடர்ந்து பக்திக்கூட்டங்களில் பங்கேற்பேன் எனத் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x