Published : 20 Oct 2018 08:55 AM
Last Updated : 20 Oct 2018 08:55 AM

சபரிமலையில் நிலைமை சரியில்லாததால் திரும்பிவிட்டேன்: ஐயப்பன் கோயிலுக்கு செல்ல முயன்ற ரெஹானா பாத்திமா பேட்டி

சபரிமலையில் நிலைமை சரியில்லாததால் திரும்பிவிட்டேன் என்று கேரள மாநிலத்தைச் சேர்ந்த பெண்கள் உரிமை ஆர்வலர் ரெஹானா பாத்திமா கூறினார்.

பெண்களின் மார்பகங்கள் தர்பூசணி போல உள்ளன என்பது போல தரக்குறைவாக விமர்சித்த கேரள பேராசிரியர் ஒருவருக்கு எதிராக கடுமையான போராட்டத்தை ரெஹானா பாத்திமா முன்பு நடத்தினார். இதற்காக அவர் மேலாடையின்றி, தர்பூசணியை வைத்து மார்பகங்களை மறைத்து போஸ் கொடுத்து போராட்டம் நடத்தினார் ரெஹானா. 2016-ல் ஓணம் புலிகள் நடனம், 2014-ல் முத்தம் கொடுக்கும் போராட்டம் என பல போராட்டங்களை நடத்தியிருக்கிறார் ரெஹானா.

முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த ரெஹானா, மதரஸாவில் படித்தவர். எகா என்ற படத்திலும் இவர் நடித்துள்ளார். இவரது தந்தை பிஎஸ்என்எல் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். அவர் இறந்தபிறகு தந்தையின் வேலை ரெஹானாவுக்குக் கிடைத்தது. ஆணாதிக்கத்துக்கு எதிராக துணிச்சலாக குரல் கொடுத்து வருகிறார்.

தற்போது சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி கோரி போராட்டம் நடத்தி வருகிறார். அவர் கூறும்போது, “பெண்களைப் பற்றி இழிவாகப் பேசிய பேராசிரியரைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினேன். அப்போது அதற்கு நல்ல ஆதரவு கிடைத்தது. ஆண்களுக்கு உள்ள சுதந்திரம் பெண்களுக்கும் தேவை என்பது எனது கருத்து. நான் என்ன ஆடை அணியவேண்டும் என்று மற்றவர் சொல்லக்கூடாது. நான் விரும்பிய ஆடையை அணிய எனக்கு முழு உரிமை உள்ளது. தற்போது ஐயப்பன் கோயிலுக்குச் செல்லும் போராட்டத்தை கையிலெடுத்தேன். பம்பையிலிருந்து துணிச்சலுடன் மலையேறினேன். ஆனால் அங்கு நிலைமை சரியில்லாததால் திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டது. அங்கு எதிர்ப்பு மிகவும் அதிகமாக இருந்தது” என்றார்.

ரெஹானா வீடு மீது தாக்குதல்

இந்த நிலையில் கொச்சியிலுள்ள ரெஹானாவின் வீட்டை, போராட்டக்காரர்கள் நேற்று தாக்கி சூறையாடினர். வீட்டிலிருந்த பொருட்களை அவர்கள் உடைத்தெறிந்தனர். மேலும் வீட்டில் உள்ள சாமான்களையும் அவர்கள் வெளியே தூக்கி வீசினர். இதையடுத்து போலீஸார் அங்கு விரைந்து வந்த போராட்டக்காரர்களை விரட்டினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x