Published : 27 Aug 2014 09:08 am

Updated : 27 Aug 2014 09:08 am

 

Published : 27 Aug 2014 09:08 AM
Last Updated : 27 Aug 2014 09:08 AM

உப்பிட்டவரை எள்ளளவேனும் நினைக்கிறோமா?

தூத்துக்குடியில் கேட்ட முதல் குரலே அசரடித்தது. “என்னது... ஒண்ணுக்கிருக்க அஞ்சு ரூவாயா?”

இடம்: தூத்துக்குடி பழைய பஸ் நிலையக் கட்டணக் கழிப்பறை. காசு வாங்கிக்கொண்டிருந்தவர் பதில் ஏதும் சொல்லவில்லை. மேஜையில் கிடந்த ஐந்து ரூபாய் நாணயம் ஒன்றை எடுத்து ‘டொக்’ ‘டொக்’என்று தட்டினார். பின், தலையை நிமிர்த்தி, கேள்வி கேட்ட இளைஞருக்குப் பின் நின்றுகொண்டிருந்த என்னை ஒரு பார்வை பார்த்தார். ‘இஷ்டம்னா இரு; இல்லாட்டி போய்க்கிட்டே இரு’ என்பது போல இருந்தது அந்தச் சைகை. இளைஞர் காசைக் கொடுக்க, அடுத்து நான், பின்னால் வந்த பெரியவர் என மூவரும் காசு கொடுத்து உள்ளே நுழைகிறோம்.

“தம்பி, ஊருக்குப் புதுசோ... இங்கெ இதெல்லாம் ரொம்ப சாதாரணம். இல்லாட்டி எங்கெங்கேயோ தொரத்தி அடிவாங்கினவம்லாம் இங்கெ வந்து ஆலை வெச்சு ஊர நாசமாக்க முடியுமா? காசுதாம்பி பேசுது...”

பெரியவர் முனகிக்கொண்டே கடக்கிறார்.

நகர் இங்கே... முத்து எங்கே?

தூத்துக்குடிக்கும் முத்துக்கும் உள்ள தொடர்பைப் பற்றிப் பேச ஆரம்பித்தால், குறைந்தது 1,500 வருஷங்கள் பின்னோக்கிப் போகலாம். பாண்டியர்கள், சோழர்கள், சுல்தான்கள், நாயக்கர்கள், போர்ச்சுகீசியர்கள், டச்சுக் காரர்கள், பிரிட்டிஷ்காரர்கள்... எல்லாக் காலங்களிலும் தூத்துக்குடியின் அடையாளம் முத்துக் குளித்தலும் கடல் வாணிபமும். இன்றைக்குக் கடல் வாணிபம் நடக்கிறது. முத்துக் குளிக்கும் தொழில்?

“அது செத்துப் பல காலம் ஆகுதுங்க. பத்துப் பன்னெண்டு வயசுல கால்ல பத்து கிலோ குளிகல்லைக் கட்டிவிட்டு, கடல்ல தள்ளிப் பழக்குவாங்க. கடலுக்குள்ள எறங்குன வேகத்துல குளிகல்லைக் கழட்டி வுடணும். அதாம் மொதப் பயிற்சி. பொறவு சுத்தி கடலுக்குள்ள சுறா, திருக்கை, பாம்புக திரியுதான்னு கவனிக்கணும். பொறவு முடிஞ்ச மட்டும் மூச்சடக்கிப் பழகணும். பொறவு தரயில துழாவி, கவனமா அரிக்கணும். பொறவு மூச்சு தட்டுற நேரத்துக்கு முன்னால, தண்ணிக்கு மேல வரணும். மூச்சுத் தட்டுற நேரத்துல வைடூரியமே கிட்ட கெடந்தாலும், யோசிக்காம ஏறிரணும். இப்படியெல்லாம் தயாரானாதான் குளியனாவலாம்.

ஒருத்தம் குளியனாயி கொட்டான் (சேகரிக்கும் பெட்டி) கட்டிட்டாம்னா, வேற தொழில்ல நாட்டம் போவாது பாத்துக் கிடுங்க. எங்க ஐயா காலத்துலேயே தூத்துக்குடில முத்துக் குளிக்கிற தொழில் செத்துப்போச்சு. பொறவு சங்கு குளிக்க ஆரமிச்சோம். எழுத்தாணிச் சங்கு, ராவணன் விழிச்சங்கு, ஐவரளிச் சங்கு, குதிரைமுள்ளிச் சங்கு, யானைமுள்ளிச் சங்கு, வலம்புரிச் சங்குனு விதவிதமா உயிர்ச் சங்கு கெடைச்சுது ஒரு காலம். இப்பம் அதுக்கு வழி இல்ல. செத்த சங்க அரிச்சுப் பொழைக்கிறோம். இதும் எத்தன காலமினு மேல இருக்கவனுக்குதான் தெரியும். கட அத்து, தொழில் செத்து கெடக்கம்.”

தலைமுறை தலைமுறையாகக் குளியல் தொழிலில் இருக்கும் சுப்பிரமணியன் தன் காலத்தோடு இந்தத் தொழில் முடிந்துவிடும் என்று அஞ்சுகிறார். தூத்துக்குடியின் அடையாளம் என்று எதைக் குறிப்பிடுகிறோமோ, அந்த முத்துக்கும் குளியர்களுக்கும் இன்றைக்கு இதுதான் நிலை.

கடல் வாணிபம் செழித்தது எதனால்?

தமிழகத்தின் கடல் பகுதியை மூன்று பிரிவாகப் பிரிக்கிறார்கள். 1. பழவேற்காட்டிலிருந்து வேதாரண்யம் வரை - சோழமண்டலக் கடற்கரை. 2. வேதாரண்யத் திலிருந்து தனுஷ்கோடி வரை - பாக் நீரிணைப் பகுதி. 3. தனுஷ்கோடியிலிருந்து நீரோடி வரை - மன்னார் வளைகுடா பகுதி. இந்த மூன்று பகுதிகளிலும் கடல் சூழலியலும் நிலவியலும் வெவ்வேறானவை என்கிறார்கள்.

பொதுவாகவே, இந்தப் பகுதிகள் மூன்றும் பல்லுயிர்ச் செழிப்பு மிக்கவை என்றாலும், ராமேசுவரத்தைச் சுற்றியுள்ள பகுதி அபரிமிதமானது. ராமேசுவரம் தொடங்கி தூத்துக்குடி வரையிலான 21 தீவுகளையும் அதைச் சுற்றியுள்ள பகுதி களையும் ‘இந்தியக் கடல்சார் உயிர்க்கோளக் காப்பகப் பகுதி' என்று சொல்கிறது அரசு. ‘மன்னார் வளைகுடா கடல் தேசியப் பூங்கா' என்றும் அழைக்கப்படும் இந்தப் பகுதி, உலக அளவில் முக்கியமான உயிர்ச்சூழல் பகுதிகளில் ஒன்று.

சுரபுன்னைக் காடுகள், காயல்கள், கடல்கோரைப் படுகைகள், பவளப்பாறைகள் ஆகியவற்றின் உறைவிட மாக இருந்ததாலேயே எங்குமில்லாக் கடல் தாவரங்களும் உயிரினங்களும் இங்கே பல்கிப் பெருகின. முத்துச் சிப்பிகளும் பவளப்பாறையில் வளரும் மீன்களும் கடல் வெள்ளரிகளும் சங்குப்பூக்களும் சூழ்ந்து வளர்ந்தன. தூத்துக்குடி கடல் வாணிபத்தின் ஆதாரச் சுருதியாக இருந்தது கடலின் உயிரோட்டமான சூழல். பின்னாளில், கடல் சூழலைப் பின்னுக்குத் தள்ளின வாணிப நோக்கங்கள். விளைவு, தூத்துக்குடி இன்று சிதைந்துகொண்டிருக்கும் நகரம்.

விரட்டும் ஆலைகள்

தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக மனிதவள ஆற்றல் வளர்ச்சி அட்டவணையில் தூத்துக்குடி இரண்டாவது இடத்தில் இருப்பதாகச் சொல்கிறது இந்தியத் தொழிலகங்களின் சம்மேளனம். பாரம்பரியத் தொழில்களான மீன்பிடி, விவசாயம், பிற்கால அடை யாளமான உப்பளத் தொழில் எல்லாவற்றையும் பின்னுக்குத் தள்ளி மின்சார உற்பத்தி, ரசாயன உற்பத்தித் தொழிற்சாலைகள் முன்வரிசையில் நிற்கின்றன.

“ஒருகாலத்துல முத்து அடையாளமா இருந்த ஊருக்கு பின்னாடி உப்பு அடையாளமா மாறுச்சு. இன்னைக்கும் தமிழ்நாட்டோட பெரும் பகுதி உப்பு இங்கேயிருந்துதான் உற்பத்தியாவுது. தமிழ்நாட்டோட மொத்த உப்பு உற்பத்தி 30 லட்சம் டன். இதுல தூத்துக்குடியோட பங்கு மட்டும் 25 லட்சம் டன். கிட்டத்தட்ட 40 ஆயிரம் குடும்பங்கள் இத நம்பிப் பொழைச்சிக்கிட்டிருக்கு. தவிர, தமிழ்நாடு, கேரளத்தோட தொண்ணூறு சதவீத உப்புத் தேவை, கர்நாடகத்தோட அம்பது சதவீத உப்புத் தேவை, ஆந்திரத்தோட இருபத்தியஞ்சி சதவீத உப்புத் தேவையைத் தூத்துக்குடிதான் நெரப்புது. இந்த உப்பைப் பாருங்க. என்ன நெறத்துல இருக்குன்னுட்டு. எல்லாம் காத்து நச்சுப் பொகையாயி, நச்சுப் பொகையில மெதக்குற சாம்ப படியுறதால நடக்குற அழிவு. தூத்துக்குடி உப்பைத்தான் தமிழ்நாடு முழுக்கத் திங்குது. ஆனா, தூத்துக்குடிக்கு ஒண்ணுன்னா அது தூத்துக்குடிக்காரனுக்கு மட்டும்தான்னு நெனைக்கிது. தொழில் நசிஞ்சுக்கிட்டிருக்கு. 50 வருசமா இந்தத் தொழில்ல உக்கார்ந்திருக்கவங்களையெல்லாம் அஞ்சே வருசத்துல விரட்டுது ஆலைங்க” என்கிறார் தனபாலன். தூத்துக்குடி சிறு அளவிலான உப்பு உற்பத்தியாளர்கள் சங்கத்தின் செயலாளர்.

வளர்ச்சியின் குறியீடு

“ஏற்கெனவே ஏகப்பட்ட ஆலைங்க இங்க இருக்கு. அபாயகரமான சிவப்புப் பட்டியல்ல வர்ற ஆலைங்க மட்டும் 14 இருக்கு. தவிர, அனல் மின்நிலையங்கள் வேற. இப்பம் மேல மேல புதுப்புது ஆலைங்களுக்கும் அனல் மின்நிலையங்களுக்கும் வரிசையா அனுமதி கொடுக்குறாங்க. அனல் மின்நிலையங்களுக்குத் தண்ணீ தடங்க இல்லாமக் கெடைக்குமின்னு கடக்கரை ஓரமா அனுமதி கொடுத்திர்றாங்க. ஒவ்வொரு நாளும் லட்சக் கணக்கான லிட்டர் தண்ணீ எடுத்து வுட்டா என்னாவும்? கடல் இருக்கு. தொழில் முன்ன மாரி இல்ல. சுத்துவட்டாரத்துல நெலத்தடி நீர்மட்டம் சுத்தமா வுழுந்து 600 அடிக்குக் கீழ போச்சு.

இது ஒரு பக்கமின்னா, ஆலைங்க வெளியேத்துற நச்சுப்பொகை ஒருபக்கம். மகாராஷ்டிரத்துல வேணாமின்னு தொரத்திவிட்ட ஆலை ஸ்டெர்லைட். இங்கே கொண் டாந்து வைக்க விட்டாங்க. அது வெளியேத்துன கந்தக வாயுவோட கொடுமை தாங்கல. ஒருகட்டத்துல மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் நடத்துன ஆய்வுலேயே நாட்டுலேயே மாசு கலக்குறதுல நாலாவது எடம் இங்கெ இருக்குன்னு சொல்லிக் கண்டுபிடிச்சாங்க. நீதிமன்றம் ஆலை இயங்கத் தடை விதிச்சுச்சு. இப்போம் திரும்பி அனுமதிச்சுட்டாங்க. கந்தகம் கலந்த காத்தைச் சுவாசிச்சா நுரையீரலும் இருதயமும் போய்ச் சேர்ந்துடும்னுகூடவா தெரியாம இருக்கு? ஸ்டெர்லைட்டு மட்டும் இல்ல; நச்சுப் பொகைய வெளியே வுடுற ஏராளமான ஆலைங்க இங்கெ இருக்கு. திடீர்னு ஒரு நா பயங்கரப் பொகையா இருக்கும், கடுமையா நெடி ஏறும். மொதல்ல, சின்ன விபத்தும்பாங்க. மறுநா விசாரிச்சா நச்சு வாயு வெளியேறிடுச்சு, கந்தக அமிலக் குழாய் வெடிச்சுருச்சு, உலை தெறிச்சுருச்சுன்னு எதாவது வெவரம் வரும். ஆலைக்குள்ளேயே எத்தன உசுரு போயிருக்கு? அவங்களப் பொறுத்தவரைக்கும் விபத்து. அவ்ளோதான். போபால் மாரி ஒண்ணு நடந்தா, தூத்துக்குடி என்னாவும்? நெனைக்கவே சகிக்க முடியாதத, நாலு பேருக்குப் பொழப்பு ஓடுதுன்னு பார்த்து ஒடுங்கிக்கிட்டிருக்கம்…”

துக்கம் கவியப் பேசுகிறார்கள் கடலோடிகள். கடல் அலையில் ததும்பிக்கொண்டிருக்கின்றன தோணிகள்.

வண்டி தூத்துக்குடியிலிருந்து புறப்படுகிறது. வழி நெடுக உப்பளங்கள். ஆங்காங்கே உப்பளங்களுக்கு மிக நெருக்கமாக ஆலைகள். நம் காலத்து வளர்ச்சியின் குறியீடாக, ஒரு சின்னமாக மனதில் அவை நிலை பெறுகின்றன. எதிர்காலத்தில் நாம் எப்படி இருப்போம்? பணம் வரும் என்றால், வீட்டின் சமையலறையில்கூட ஒரு ஆலையை அனுமதிப்போமோ?

-சமஸ் தொடர்புக்கு: samas@thehindutamil.co.in

(அலைகள் தழுவும்...)

தூத்துக்குடிஉப்பளம்தொழிற்சாலைகள்ஆலை புகை

You May Like

More From This Category

More From this Author