Published : 09 Oct 2018 07:37 PM
Last Updated : 09 Oct 2018 07:37 PM

கவனம்- பாலியல் இணையதளங்களைப் பார்ப்பவர்கள் மும்பை போலீஸில் புலம்பல்: பீதியைக் கிளப்பும் ‘செக்ஸ்டார்ஸன்’ குற்றம்

பாலியல் இணையதளங்களைப் பார்ப்பவர்களின் அந்தரங்க தகவல்கள், பிரவுசிங் விவரங்கள் ஆகியவற்றைத் திருடி அவர்களிடம் பணம் கேட்டு மிரட்டும் புதிய சைபர் குற்ற யுத்தி இந்தியாவுக்குள் வந்துள்ளது.

'செக்ஸ்டார்ஸன்' என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இந்த சைபர் குற்றம், இதற்கு முன் மேற்கத்திய நாடுகளில் மட்டுமே இருந்து வந்தநிலையில், முதல்முறையாக இந்தியாவுக்குள் வந்துள்ளது என்று மும்பை போலீஸார் தெரிவிக்கின்றனர்.

செக்ஸ்டார்ஸன் எனப்படுவது பாலியல் இணையதளங்களைப் பார்க்கும் செயலுக்கு அடிமையானவர்களை அவர்களுக்கே தெரியாமல் அவர்களின் தனிப்பட்ட விவரங்கள், பிரவுசிங் வரலாறுகளைத் திருடி மிரட்டி பணம் பறிக்கும் முறையாகும். சில நேரங்களில் பாலியல் தேவைக்கும் அவர்களைப் பயன்படுத்துவார்கள். ஹேக்கிங் முறையில் இந்த செக்ஸ்டார்ஸன் குற்றம் நடக்கிறது.

கடந்த 2 மாதங்களில் மும்பை சைபர் கிரைம் போலீஸாரிடம் 5 பேர் செக்ஸ்டார்ஸன் புகார் அளித்துள்ளனர். அதாவது, பாலியல் இணையதளங்களை பார்த்துப் பழகிய இந்த 5 பேரின் தனிப்பட்ட விவரங்களைத் திருடி பணம் கேட்டு மிரட்டுவதால், அச்சமடைந்து போலீஸாரிடம் புகார் அளித்துள்ளனர்.

இது குறித்து மும்பை போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:

செக்ஸ்டார்ஸன் என்பது பாலியல் இணையதளங்களைப் பார்ப்பவர்களை குறிவைத்துத் தாக்கப்படும் முறையாகும். இது பல வகைப்படும். பாலியல் இணையதளங்கள் பார்ப்பவர்களிடம் சாட்டிங்கில் ஈடுபட்டு அவர்களிடம் இருந்து புகைப்படங்கள், தனிப்பட்ட விவரங்களைக் கேட்டுப் பெற்று மிரட்டலில் ஈடுபடுவதாகும்.

சிலநேரங்களில் பாலியல் இணையதளங்களில் சில "லிங்குகளை" இணைத்து அதன் மூலம் பாலியல் இணையதளங்கள் பார்ப்பவர்களின் தனிப்பட்ட விவரங்கள், புகைப்படங்களைத் திருடுவதாகும். இதில் விவரங்கள் ஏதும் கிடைத்துவிட்டால், பாலியல் இணையதளத்துக்கு அடிமையாளர்களிடம் பணத்தைக் கேட்டு மிரட்டலாம் அல்லது பாலியல் இச்சைக்குப் பயன்படுத்தலாம்.

அந்த வகையில் 2 பெண்கள், 3 ஆண்கள் இந்த விஷயத்தில் சிக்கியுள்ளனர். இவர்களிடம் பணம் கேட்டு இணையதளம் வாயிலாக மிரட்டுகின்றனர், பணத்தை "பிட்காயின்களாக" தர வேண்டும் என்றும் இல்லாவிட்டால், தனிப்பட்ட தகவல்கள், புகைப்படங்களை இணையதளத்தில் பரப்பிவிடுவதாகவும் மிரட்டியுள்ளனர்.

இவர்கள் 5 பேரும் பாலியல் இணையதளங்களைப் பார்க்கும்போது, சில லிங்குகளை கிளிக் செய்துள்ளனர். அதன்பின் சில நாட்களில் அவர்களுக்கு மின்அஞ்சல் வந்துள்ளது. அதில் அவர்களின் பெயர், தனிப்பட்டவிவரங்கள், புகைப்படங்கள் போன்றவற்றை பதிவிட்டு மிரட்டலில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த 5 பேரும் போலீஸில் புகார் அளிக்க மறுத்துவிட்டாலும், தங்களுக்கு உதவ வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளனர். இப்போதுள்ள நிலையில், 5 பேர் மட்டுமே மும்பையில் துணிச்சலாக வெளிவந்து இந்த புகாரை அளித்துள்ளனர். ஆனால், பாலியல் இணையதளங்களைப் பார்ப்பவர்கள் பலரின் தனிப்பட்ட விவரங்களும் இதில் எடுக்கப்பட்டு வருகிறது. அவர்கள் வெளியே சொல்ல முடியாமல் உள்ளனர்.

இதில் ஒருவர் ஏற்கனவே பிட்காயின்களாக அனுப்ப முயற்சித்து, அதில் தோல்வி அடைந்து பல லட்சங்களை இழந்தபின் போலீஸாரை அணுகியுள்ளார். ஐரோப்பிய நாடுகளில் மட்டுமே தொடர்ந்து வந்த புதுவகையான சைபர்கிரைம் இப்போது இந்தியாவில் வந்துவிட்டது எனத் தெரிவித்தார்.

இதற்கிடையே பாலியல் இணையதளங்களைப் பார்ப்பவர்களின் தனிப்பட்டவிவரங்கள் எப்படித் திருடப்படுகின்றன, எவ்வாறு ஹேக் செய்யப்படுகின்றது என்பது குறித்த விசாரணையில் சைபர் கிரைம் போலீஸார் ஈடுபட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட 5 பேரும் போலீஸாரிடம் அதிகாரப்பூர்வமாகப் புகார் அளிக்காத காரணத்தால், விசாரணையின் கோணம் குறித்து வெளியே கூற போலீஸார் மறுத்துவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x