Published : 04 Oct 2018 11:38 AM
Last Updated : 04 Oct 2018 11:38 AM

ரயிலில் தொங்கியபடி வந்த 17 வயதுப் பெண்ணின் உயிரைக் காப்பாற்றிய சக பயணிகள்: வைரலாகும் விடியோ

மும்பையில், ரயிலில் சாகசம் செய்ய முயன்றபோது எதிரே வரும் ரயிலிலிருந்து 17 வயதுப் பெண்ணின் உயிரை சக பயணிகள் காப்பாற்றும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

30 செகண்ட் நேரமே வரும் இவ்விடியோ காட்சியில் மும்பை அருகிலுள்ள திவாவில் வசிக்கும் பெண், கல்யாண் நிலையத்திலிருந்து வரும் ரெயிலில் படியில் நின்றுகொண்டு வரும்போது எதிரெ வரும் ரெயில் மீது விழுகிறாள்.

அப்போது திடீரென அப்பெண் நழுவி விழுவதற்குள் சக ரயில் பயணிகள் அவரை பெட்டிக்குள் இழுத்துக்கொள்கிறார்கள். கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இச்சம்பவத்தில் அப்பெண் மயிரிழையில் உயிர்தப்புவது 30 விநாடி வீடியோவில் வருகிறது.

இச்சம்பவம் விக்ரோலி மற்றும் காஞ்சுமார்க் நிலையங்களுக்கு இடையே நடந்துள்ளது. இன்னொரு பயணி இச்சம்பவத்தை படம்பிடித்து செவ்வாய் அன்று சமூக வலைதளங்களில் பதிவேற்ற அது வைரலாகியது.

இதில் சக ரயில் பயணிகள் சிலர் ஒரு பெண்ணின் உயிரைக் காப்பதற்காக அப்பெண்ணை அனைத்துக் கொண்ட காட்சியும் விடியோவில் இடம்பெற்றுள்ளது.

''அச்சம்பவம் எனது சொந்தத் தவறினால் நடந்தது. அவர்கள் யார் என்று எனக்குத் தெரியாது. ஆனால் நிச்சயமாக என் உயிரைக் காக்கவந்த தேவதைகளே அவர்கள்'' என்று செய்தியாளர்களிடம் அப்பெண் தெரிவித்தார்.

ரயிலில் ஸ்டண்ட் வேண்டாம்

ஒரு மூத்த ரயில்வே அதிகாரி இதுகுறித்து தெரிவிக்கையில், ''அடுத்த நிலையத்தில் ரயில் நின்றபோது, எங்கள் ரயில்வே ஊழியர்கள் அப்பெண்ணை உடனடியாக மீட்டு முதல் உதவி அளித்தனர். மேலும் அருகிலுள்ள மருத்துவமனைக்கும் அவர் அனுப்பிவைக்கப்பட்டார். அப்பெண்ணுக்கு வலது கையில் சிறு காயம் ஏற்பட்டுள்ளது. அன்று சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னரே அவர் மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

இப்பெண் அதிஷ்டசாலி, ஆனால் அப்பெண்ணைப் போல ரயில் வாயிலில் படிக்கட்டில் தொங்கும் பயணிகளே உங்களுக்கும் அப்படியொரு சந்தர்ப்பம் அமைந்துவிடும் என்று எண்ணிவிடாதீர்கள். ரயிலில் பாதுகாப்பாக பயணம் செய்வதை யோசியுங்கள். அதைவிடுத்து ரயிலுக்கு வெளியே தொங்கிக்கொண்டு சாகசம் (ஸ்டண்ட்) செய்யவேண்டாம்.''

இவ்வாறு ரயில்வே உயரதிகாரி தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x