Published : 22 Oct 2018 10:50 AM
Last Updated : 22 Oct 2018 10:50 AM

பிரதமர் மோடியுடன் ஆலோசிக்காமல் முடிவெடுத்த சுஷ்மா - பாகிஸ்தான் பேச்சுவார்த்தையில் புதிய சர்ச்சை

பாகிஸ்தானுடன் நியூயார்க்கில் பேச்சுவார்த்தை நடத்துவது தொடர்பாக பிரதமர் அலுவலகத்துடன் கலந்தாலோசிக்காமல் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் அறிவிப்பு வெளியிட்டதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

பாகிஸ்தானின் பிரதமராக இம்ரான் கடந்த மாதம் பதவி ஏற்றதுமுதல், இந்தியா - பாகிஸ்தான் இடையே மீண்டும் அமைதிப் பேச்சு வார்த்தை ஏற்பட தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். இது தொடர்பாக இந்திய பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றையும் இம்ரான் எழுதினார். இதற்கு இந்திய தரப்பில் இசைவு தெரிவிக்கப்பட்டது.

நியூயார்க்கில் நடைபெற்ற ஐ.நா சபைக்கூட்டத்தின் போது இந்தியா மற்றும் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் இடையிலான பேச்சுவார்த்தையை நடத்த இரு நாடுகளும் முடிவு செய்தன. இதனால், 2016-ம் ஆண்டுக்குப் பின் மீண்டும் பேச்சு தொடங்க இருப்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது.

ஆனால், காஷ்மீரில் இந்திய போலீஸார் 3 பேரை வீட்டில் இருந்து கடத்திச் சென்ற ஹிஸ்புல் தீவிரவாதிகள் அவர்களை சுட்டுக்கொலை செய்தனர். மேலும் இந்தியப் படைகளால் சுட்டுக் கொல்லப்பட்ட தீவிரவாதி புர்ஹான் வானிக்கு இஸ்லாமாபாத்தில் தபால் தலை வெளியிடப்பட்டது.

இந்தச் சம்பவங்களால் அதிர்ச்சி அடைந்த மத்திய அரசு நியூயார்க்கில் நடைபெற இருந்த இருதரப்பு பேச்சுவார்த்தையை ரத்து செய்தது. மேலும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் உண்மை முகம் வெளிப்பட்டதாகவும் இந்தியா விமர்சித்தது. இதற்கு இம்ரான் கானும் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தார்.

இந்தநிலையில் பாகிஸ்தானுடனான பேச்சுவார்த்தை குறித்து புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்தவது தொடர்பாக பிரதமர் அலுவலகத்துடன் கலந்தாலோசிக்காமல் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தனிச்சையாக முடிவெடுத்தாக கூறப்படுகிறது.

இந்து ஆங்கிலம் நாளிதழுக்கு கிடைத்த தகவலின்படி, பிரதமர் அலுவலகம் மற்றும் பாதுகாப்புகான அமைச்சரவைக் குழுவின் ஒப்புதல் பெறாமல் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்தும் முடிவு அறிவிக்கப்பட்டதால் அது தொடர்பான விளக்கம் தெரிவித்து செப்டம்பர் 21-ம் தேதி மீண்டும் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பிரதமர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு கேட்கப்பட்டது. ஆனால் உடனடியாக பதிலளிக்கவில்லை. எனினும் பின்னர் பிரதமர் அலுவலக செய்தித்தொடர்பாளர் அளித்த தகவலில், ‘‘பாகிஸ்தான் பிரதமராக பதவியேற்ற இம்ரான் கானுக்கு, பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து, ஆகஸ்ட் 18-ம் தேதி கடிதம் அனுப்பினார். அதற்கு நன்றி தெரிவித்து இம்ரான் கான் சார்பில் செப்டம்பர் 17-ம் தேதி கடிதம் வரப்பெற்றது. இதுமட்டுமின்றி அதேநாளில் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் சார்பில், இந்திய வெளியுறவு அமைச்சகத்துக்கு தனியாக கடிதம் ஒன்று அனுப்பப்பட்டது. அதில் பேச்சுவார்த்தை நடத்துவது தொடர்பாக கோரிக்கை வைக்கப்பட்டது. இதைத் தான் செப்டம்பர் 20-ம் தேதி இந்திய வெளியுறவு அமைச்சகம் சார்பில அறிக்கையாக அளிக்கப்பட்டது. எனினும் காஷ்மீர் தாக்குதல் காரணமாக முடிவு மாற்றப்பட்டது’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x