Published : 16 Oct 2018 07:41 AM
Last Updated : 16 Oct 2018 07:41 AM

தசரா பண்டிகையையொட்டி 4 கோடி ரூபாய் நோட்டுகளில் அம்மனுக்கு அலங்காரம்

தசரா பண்டிகையை முன்னிட்டு ஆந்திர மாநிலம், விசாகப் பட்டினத்தில், கன்னிகா பரமேஸ்வரி அம்மனுக்கு 4 கிலோ தங்க ஆபரணங்கள் மற்றும் 4 கோடி ரூபாய் நோட்டுகளால் அலங்காரம் செய்தனர்.

ஆந்திர மாநிலத்தில் தசரா பண்டிகை தற்போது கோலாகலமாக நடைபெற்று வருகிறது. புகழ்பெற்ற விஜயவாடா கனக துர்கையம்மன் கோயிலில் 10 நாட்கள் வரை தசரா பண்டிகை கொண்டாடப்படுகிறது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தசராவை நவராத்திரி உற்சவமாக கொண்டாடி வருகின்றனர். இதுபோன்று ஆந்திர மாநிலம் முழுவதும் பல்வேறு முக்கிய கோயில்களில் தசரா பண்டிகை சிறப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், விசாகப் பட்டினத்தின் குருபாம் பகுதியில் 140 ஆண்டுகள் பழமையான கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோயில் உள்ளது.

தசரா பண்டிகையை முன்னிட்டு அம்மன் நேற்று முன்தினம் மகாலட்சுமி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதையொட்டி அம்மனுக்கு 4 கிலோ தங்க ஆபரணங்கள் மற்றும் 4 கோடி ரூபாய் நோட்டுகளால் அலங்காரம் செய்யப்பட்டது.

இதில் 1 ரூபாய் முதல் 2,000 ரூபாய் வரை நோட்டுகள் இடம்பெற்றிருந்தன. மேலும் வெளிநாட்டு கரன்சிகளும் அம்மனை அலங்கரித்தன.

தங்கம் வைத்து வழிபாடு

இவை தவிர தங்க பிஸ்கட்டுகள், வைர நகைகளை வைத்தும் அம்மனை வழிபட்டனர். இந்தப் பணத்தை அப்பகுதியில் உள்ள 200 பக்தர்கள் அம்மனின் ஒருநாள் அலங்காரத்துக்காக கோயிலுக்கு வழங்கினர்.

பூஜை முடிவடைந்த பிறகு பணம் மற்றும் நகைகள் உரியவர் களுக்கு திரும்ப வழங்கப்பட்டதாக கோயில் தர்மகர்த்தா கொல்லூரு வெங்கடேஸ்வர ராவ் தெரிவித் தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x