Published : 27 Oct 2018 10:45 AM
Last Updated : 27 Oct 2018 10:45 AM

ரத்தத்தில் தண்ணீரை கலந்து 6 மாதங்களாக விற்ற கும்பல் கைது

உத்தரப் பிரதேசத்தில் ரத்தத்தில் குளுகோஸ் தண்ணீரை கலந்து கலப்பட  ரத்தம் தயார் செய்து ஆறு மாதங்களாக விற்பனை செய்து வந்த கும்பலை போலீஸார் கைது செய்துள்ளனர். எச்ஐவி சோதனை ஏதும் செய்யாமல் அவர்கள் ஆயிரம் பேருக்கு ரத்தம் விற்பனை செய்துள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்து.

உத்தரப் பிரதேசத்தில் ஒரு கும்பல் கடந்த ஆறு மாதங்களாக போலியாக, அனுமதி இன்றி ரத்த வங்கி ஒன்றை நடத்தி வந்துள்ளது. முகமது நசீம் என்பவர் ராகவேந்திர சிங் என்ற லேப் டெக்னிசியனுடன் துணையுடன் இந்த ரத்த வங்கியை நடத்தி வந்துள்ளார்.

போதைக்கு அடிமையானவர்கள், பணம் தேவைப்படும் ஏழை மக்களை தொடர்பு கொண்டு அவர்களுக்கு 500 ரூபாய் பணம் கொடுத்து ஒரு யூனிட் ரத்தத்தை எடுத்துள்ளனர். அதனுடன் குளுகோஸ் தண்ணீரை சேர்த்து இரண்டு யூனிட்டாக மாற்றியுள்ளனர். இதனை ரத்தம் தேவைப்படுபவர்களுக்கு யூனிட் ஒன்றுக்கு 2 ஆயிரம் முதல் 3 ரூபாய் வரை விற்பனை செய்துள்ளனர்.

ரத்தம் எடுக்கப்பட்ட ரத்தத்தை, எச்ஐவி உள்ளிட்ட எந்த சோதனையும் செய்யாமல் அதனை கலப்படம் செய்து அப்படியே விற்பனை செய்துள்ளனர். அரசு அங்கீகாரம், முத்திரை உள்ளிட்ட அனைத்தையும் போலியாக தயார் செய்து, அசல் ரத்த வங்கி உறையை போன்றே தயார் செய்து ரத்தம் விற்பனை செய்யும்போது பயன்படுத்தியுள்ளனர்.

இதனால் ஆறு மாதங்களாக யாருக்கும் சந்தேகம் வரவில்லை. எனினும் இவர்கள் விற்பனை செய்த ரத்தம் அதிக தண்ணீருடன் இருப்பதை கண்டுபிடித்த மருத்துவமனை இதுபற்றி விசாரித்தபோது இந்த அதிர்ச்சி தகவல் தெரிய வந்துள்ளது. இதையடுத்து போலீஸாரிடம் புகார் அளித்த அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கும்பலுக்கு மூளையாக இருந்து செயல்பட்டது முகமது நசீம் என தெரிய வந்துள்ளது.

ராகவேந்திர சிங் போதை ஆசாமிகளை தொடர்பு கொண்டு அழைத்து வந்துள்ளார். பங்கஜ் திரிபாதி என்ற இவர்களது மற்றொரு கூட்டாளி போலியாக லேபிள் மற்றும் முத்திரை தயார் செய்து ரத்தம் அடங்கிய பாக்கெட்டுகளை தயாரித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x