Last Updated : 19 Oct, 2018 05:29 PM

 

Published : 19 Oct 2018 05:29 PM
Last Updated : 19 Oct 2018 05:29 PM

‘எது நடக்கக் கூடாது என நினைத்தோமோ அது நடந்து விட்டது’: முதல்வர் பினராயி அரசு மீது காங்கிரஸ், பாஜக சாடல்

உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக சபரிமலையில் நடந்து வரும் போராட்டங்கள், பிரச்சினைகளுக்குக் கேரள அரசைக் குற்றம்சாட்டி காங்கிரஸ் கட்சியும், பாஜக அறிக்கை வெளியிட்டு வருகின்றன.

எது நடக்கக் கூடாது என நினைத்தேனா அது நடந்துவிட்டது என்று பாஜகவும், ஆர்எஸ்எஸ் அமைப்பும் சேர்ந்து கேரளாவில் அமைதியற்ற சூழலை ஏற்படுத்திவிட்டன, அதற்கு மார்க்சிஸ்ட் அரசு துணை போகிறது என்று கேரள மாநில காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சென்னிதாலா குற்றச்சாட்டு வைத்துள்ளார்.

சபரிமலையை போராட்டக் களமாக்க மார்க்சிஸ்ட் அரசு விரும்புகிறது என்று பாஜக மாநிலத் தலைவர் ஸ்ரீதரன் பிள்ளை கண்டித்துள்ளார்.

சபரிமலைக்கு அனைத்து பெண்களும்செல்லலாம் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராகக் கேரள மாநிலம் முழுவதும் போராட்டம் நடந்து வருகிறது. சபரிமலையில் நேற்றுமுன்தினம் நடை திறக்கப்பட்டபின் அங்குச் செல்ல முயன்ற பெண்களை பக்தர்கள் தடுத்து நிறுத்துகின்றனர். இதனால், பதற்றமான சூழல் ஏற்படுவதைத் தடுக்கும் பொருட்டு அவர்கள் கீழே இறக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், ஹைதராபாத்தைச் சேர்ந்த பெண் பத்திரிகையாளர், கொச்சியைச் சேர்ந்த பெண் ஆர்வலர் ஆகியோர் இன்று காலை சபரிமலைக்குச் செல்ல முயன்றனர். அவர்கள் இருவருக்கும் போலீஸ் உடை அணிவித்து உரியப் பாதுகாப்புடன் போலீஸார் அழைத்துச் சென்றனர். ஆனால், சபரிமலை கோயிலுக்குள் பெண்கள் வந்தால், கோயில் கதவை பூட்டுவோம் என்று தந்திரி தெரிவித்ததால், பெரும் பதற்றம் ஏற்பட்டது. இதனால், அந்த இரு பெண்களும் மலையில் இருந்து கீழே இறக்கப்பட்டனர்.

இந்நிலையில், இந்தச்சம்பவத்துக்கு மாநில எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் தலைவருமான ரமேஷ் சென்னிதலா திருவனந்தபுரத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

கேரள போலீஸார் உண்மையான பக்தர்களுக்கு பாதுகாப்பு அளிக்கிறார்களா என்பது எங்களுக்குத் தெரியவில்லை. உண்மையான பக்தர்களை சபரிமலைக்குச் செல்ல மாநில அரசு அனுமதிக்கிறதா. பெண்களைஅனுமதிப்பது என்பது காமாண்டோ ஆப்ரேஷன்போல நடக்கிறதா. இப்படித்தான் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதா?

இடது சாரி ஆதரவாளர்களையும், ஆர்வலர்களையும் கோயிலுக்கு அழைத்துச் செல்வதில்தான் கேரள அரசு அதிக ஆர்வம் காட்டுகிறது.அதேசமயம், உண்மையான ஐயப்ப பக்தர்களின் உணர்வுகளைப் புண்படுத்துகிறது. பெண்களைக் கோயிலுக்குள் அனுமதிப்பதைத் தீவிரமாக மாநில அரசு அமல்படுத்துவதால்தான் இந்த அளவுக்கு நிலைமை மோசமடைந்துள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை அமல்படுத்தவும், அனைத்து வயதுப் பெண்களை அனுமதிக்கவும் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான அரசு அதிகமான ஆர்வம் காட்டுகிறது. இந்த விவகாரத்தில் அனைத்துத் தரப்பினரையும் அழைத்து அவர்களின் கருத்துக்களைக் கேட்டு முடிவு எடுக்காமல் தன்னிச்சையாக கேரள அரசு செயல்பட்டுள்ளது.

எது நடக்கக்கூடாது என்று நினைத்தோமோ அது நடந்துவிட்டது. பாஜகவும், ஆர்எஸ்எஸ் அமைப்பும் சேர்ந்து இந்த விஷயத்தில் வகுப்புவாதத்தையும், மதவாதத்தையும் கொழுந்துவிட்டு எரியச் செய்கின்றன . சபரிமலை என்பது சுற்றுலாத்தலம் அல்ல. போலீஸார் சபரிமலை சூழலை இன்னும்சிறப்பாக கையாண்டு இருக்கலாம். சபரிமலை சூழல் குறித்து ஆளுநரிடம் விவரிப்போம். சபரிமலைக்கு அனைத்து மதத்தினரும் செல்லலாம்

இவ்வாறு சென்னிதலா குற்றம்சாட்டினார்.

பாஜக மாநிலத் தலைவர் பி.எஸ். சிறீதரண் பிள்ளை கூறுகையில், சபரிமலையை போராட்டக் களமாக மாற்ற மாநிலத்தில் ஆளும் அரசு முயற்சிக்கிறது. போலீஸ் ஆதரவுடன் இரு பெண்கள் சபரிமலைக்குச் சென்றுள்ளனர், அதில் ஒருவருக்கு போலீஸ் உடை அணிவிக்கப்பட்டுள்ளது. பக்தர்களின் உணர்வுகள் புண்படும் எனத் தெரிந்தும் இவ்வாறு செய்துள்ளார்கள் என்று குற்றம்சாட்டினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x