2 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன மூதாட்டி; மகளுடன் சேர்த்து வைத்த பிஎஸ்எப் வீரரின் நெகிழ்ச்சி செயல்

2 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன மூதாட்டி; மகளுடன் சேர்த்து வைத்த பிஎஸ்எப் வீரரின் நெகிழ்ச்சி செயல்
Updated on
2 min read

கர்நாடக மாநிலம், ஹசன் நகரைச் சேர்ந்த வயதான பெண், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன நிலையில், அவரைக் கண்டுபிடித்து பிஎஸ்எப் வீரர் ஒருவர் மகளுடன் சேர்த்து வைத்த நெகிழ்ச்சியான சம்பவம் நடந்துள்ளது.

கர்நாடக மாநிலம், ஹசன் தாலுகா மந்திஹனஹல்லி பகுதியைச் சேர்ந்தவர் ஜெயம்மா(வயது70). இவரின் மகள் சுனந்தா. இவர் திருநங்கை. சுனந்தா பெங்களூரில் வசித்து வருவதால், அவ்வப்போது வந்து மந்திஹனஹல்லியில் உள்ள தனது தாய் ஜெயம்மாவை சந்தித்துவிட்டுச் செல்வது வழக்கம். இந்நிலையில், கடந்த 2016-ம் ஆண்டு, டிசம்பர் 26-ம் தேதியில் இருந்து ஜெயம்மாவைக் காணவில்லை.

சுனந்தாவும் பல்வேறு இடங்களில் தனது தாய் ஜெயம்மாவைத் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில், அசாம் மாநிலம், கரிம்கஞ் மாவட்டத்தில் உள்ள சுத்தார்கண்டி பகுதியில் ஜெயம்மா இருப்பதாகக் சமீபத்தில் மந்திஹனஹல்லி போலீஸ் நிலையத்தில் இருந்து சுனந்தாவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பின் 2 ஆண்டுகளுக்குப் பின் தனது தாயைச் சந்தித்துள்ளார். இவர்கள் இருவரையும் அசாம் எல்லைப் பாதுகாப்பு படையினர் சேர்த்து வைத்துள்ளனர்.

இதுகுறித்து அசாம் பிஎஸ்எப் டிஐஜி நாயக் கூறுகையில், கரீம்கஞ்ச் மாவட்டம், சுத்தார்கண்டியில் பிஎஸ்எப் வீரர்கள் எல்லைப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, ஒரு வீரர் வயதான பெண் ஒருவர் தனியாக அமர்ந்திருப்பதைக் கண்டார். அந்த மூதாட்டியிடம் சென்று விவரங்களைக் கேட்டபோது அவர் பேசிய மொழி அவருக்குப் புரியவில்லை.

இதையடுத்து, பிஎஸ்எப் பிரிவில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சாஹில் ஜபிபுல்லா என்பவரை அழைத்து வந்து அந்த மூதாட்டியிடம் விவரங்களைக் கேட்டோம். அப்போது அந்த மூதாட்டி ஹசன் தாலுகா, மந்திஹனஹல்லி கிராமத்தைச் சேர்ந்தவர் என்பது தெரிந்தது எப்படி இங்குவந்தார் என்பது குறித்து கேட்டபோது அவரால் பதில் அளிக் இயலவில்லை.

இதையடுத்து, அந்த மூதாட்டி பேசிய விவரங்களை வீடியோவாகப் பதிவு செய்து, அதைச் சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்தோம். இந்த வீடியோ வைரலான நிலையில், மந்திஹனஹல்லியைச் சேர்ந்த சந்தோஷ் என்பவர் இந்த வீடியோவைப் பார்த்துள்ளார். இந்த வீடியோவில் இருக்கும் பெண் காணாமல் போன ஜெயம்மா என்பதை அறிந்து, பெங்களூரில் வசிக்கும் அவரின் மகள் சுனந்தாவுக்கு கடந்த 20-ம் தேதி தகவல் கொடுத்தார்.

மேலும், பிஎஸ்எப் சார்பிலும் கர்நாடக மாநில போலீஸாருக்கு தகவல் அளித்து விவரங்களைத் தெரிவித்தோம். அவர்கள் மந்திஹனஹல்லி போலீஸாருக்கு தகவல் தெரிவித்து, சுனந்தாவிடம் அவரின் தாய் கிடைத்த விஷயத்தைத் தெரிவித்தனர். இதையடுத்து, சுனந்தா தனது தாயைப் பார்க்க இங்கு வந்தார். 2 ஆண்டுகளுக்குப் பின் காணாமல் போன தனது தாயைச் சந்தித்த மகிழ்ச்சியில் சுனந்தா அவரைக் கட்டித்தழுவி கண்ணீர்விட்டார். இதைப் பார்க்கும் போது,திரைப்படத்தில் வரும் காட்சிபோல் நெகிழ்ச்சியாக இருந்தது எனத் தெரிவித்தார்.

அசாம் பிஎஸ்எப் 7-வது பட்டாலியன் சார்பில் ஜெயம்மாவுக்கு உணவு, உடைகள், இருப்பிடம் அளித்துக் கடந்த சில நாட்களாகப் பாதுகாத்து வந்துள்ளனர். திங்கள்கிழமை கரீம்காஞ்ச் மாவட்டம் வந்த சுனந்தாவிடம் ஜெயம்மா ஒப்படைக்கப்பட்டார். கவுகாத்தியில் இருந்து விமானம் மூலம், ஜெயம்மாவும், சுனந்தாவும் பெங்களூரு வந்து சேர்ந்தனர்.

இது குறித்து சுனந்தா தி இந்துவிடம்(ஆங்கிலம்) கூறுகையில், ‘‘2 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன எனது தாய் கிடைத்துள்ள செய்தி அறிந்ததும் நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவில்லை. அசாம் வரை செல்வதற்கு என்னிடம் பணம் இல்லை. இதனால் உறவினர்கள், நண்பர்களிடம் இருந்து ரூ.85 ஆயிரம் கடனாகப் பெற்று அசாம் சென்றேன். என் தாய் காணாமல் போனதற்கு பின் நான் போலீஸில் புகார் கொடுக்காமல் இருந்தது என்னுடைய தவறு. என் தாயை கண்டுபிடித்துக் கொடுத்த பிஎஸ்ப் படையினர் அனைவருக்கும் நன்றி தெரிவித்தேன். எனது தாயை மிகுந்த பத்திரமாக பாதுகாத்தனர்’’ எனத் தெரிவித்தார்.

பெங்களூரில் இருந்து அகர்த்தலாவுக்கு ஹம்சபர் எக்ஸ்பிரஸ் ரயில் செல்கிறது. அந்த ரயிலில் ஜெயம்மா பயணித்து, கரிம்காஞ்ச் நகரில் இறங்கி இருக்கலாம் என்று பிஎஸ்எப் வீரர்கள் சந்திக்கின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in