

மகாராஷ்டிரா மாநிலம், ஷீரடிக்கு இன்று வரும் பிரதமர் மோடியிடம், சபரிமலை விவகாரத்தில் மவுனம் காப்பது ஏன் ஏன்று விளக்கம் கேட்க, காரை மறிக்கப் போவதாகக் கூறிய பெண் ஆர்வலர் திருப்தி தேசாய் போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.
மகாராஷ்டிரா மாநிலம், அகமதுநகர் மாவட்டம், ஷீரடியில் உள்ள சாய்பாபா கோயிலில் நூற்றாண்டு விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பிரதமர் மோடி அங்கு செல்ல இன்று திட்டமிட்டுள்ளார்.
இந்நிலையில், பூமாதா பிரிகேட் என்ற அமைப்பின் தலைவரும், பெண் ஆர்வலருமான திருப்தி தேசாய், பிரதமர் மோடியைச் சந்தித்துப் பேச அனுமதிக்குமாறு அகமது நகர் மாவட்ட போலீஸ் எஸ்.பி.க்கு கடிதம் எழுதி இருந்தார்.
ஆனால், அவரிடம் இருந்து எந்தவிதமான பதிலும் வராததையடுத்து, பிரதமர் மோடியின் பாதுகாப்பு வாகனங்களை மறித்து, பிரதமர் மோடியிடம் சபரிமலை தொடர்பாகப் பேச இருப்பதாகத் திருப்தி தேசாய்அறிவித்தார். இதையடுத்து, இன்று அதிகாலை 5.30 மணிக்குத் திருப்தி தேசாய், மற்றும் அவரின் ஆதரவாளர்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸார் கைது செய்தனர்.
சபரிமலை விவகாரத்தில் கோயிலுக்கு அனைத்துப் பெண்களும் சென்று சாமி தரிசனம் செய்யலாம் என்றுஉச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. ஆனால், அதற்கு அங்குள்ள கோயில் நிர்வாகம், பக்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த விவகாரத்தில் பிரதமர் மோடியின் நிலைப்பாடு என்ன, ஏன் மவுனம் காக்கிறார் என்பதை அறிந்துகொள்ள பிரதமர் மோடியைச் சந்திக்கப் போவதாக திருப்தி தேசாய் முன்னரே அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.