Last Updated : 18 Oct, 2018 01:12 PM

 

Published : 18 Oct 2018 01:12 PM
Last Updated : 18 Oct 2018 01:12 PM

சபரிமலை தீர்ப்பு சமூகத்தில் கொந்தளிப்பையும், அமைதியின்மையையும் , பிரிவினையையும் ஏற்படுத்தியுள்ளது- மோகன் பாகவத் விளாசல்

சபரிமலை விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு சமூகத்தில் கொந்தளிப்பையும், அமைதியின்மையையும், பிரிவினையையும் ஏற்படுத்தி இருக்கிறது, பெண்களின் உணர்வுகளுக்கு இதில் மதிப்பளிக்க வில்லை என்று ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் கடுமையாகப் பேசினார்.

நாக்பூரில் உள்ள ரேஷிம்பாக் பகுதியில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைமை அலுவலக்தில் இன்று விஜயதசமி கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு நோபல் பரிசு பெற்ற சமூக ஆர்வலர் கைலாஷ் சத்யார்த்தி சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டு இருந்தார். இந்த நிகழ்ச்சியில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் பேசியதாவது:

சபரிமலையில் சாமி தரிசனம் செய்ய அனைத்துவயதுள்ள பெண்களுக்கும் அனுமதி அளித்து உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பளித்துள்ளது. இந்த முடிவு, தீர்ப்பு அனைத்துக் கோணங்களையும் ஆய்வு செய்யாமல் எடுக்கப்பட்டு இருக்கிறது. சமூகத்தில் அமைதியான சூழலை உருவாக்குவதாக இந்தத் தீர்ப்பு அமைந்திருக்கவேண்டும்.

ஆனால், இந்தத் தீர்ப்பால் வழக்கமான வழிபாட்டு முறைகளையும் செய்ய முடியவில்லை, காலத்துக்கும், நேரத்துக்கும் ஏற்றார்போல் சமூகத்தில் புதிய வழக்கங்களையும் செயல்படுத்த முடியவில்லை. சபரிமலை குறித்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு மிகவும் இக்கட்டான சூழலை ஏற்படுத்தி இருக்கிறது.

பாரம்பரியத்தின் இயல்புத்தன்மை மற்றும் அடிப்படைத்தன்மை ஆகியவற்றை சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டது, சமூகத்தில் உள்ள மக்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து பலஆண்டுகளாக அந்தப் பாரம்பரியத்தை பின்பற்றி வருகிறார்கள். ஆனால், இந்தத் தீர்ப்பில் அந்தப் பாரம்பரியம் கருத்தில் கொள்ளப்படவில்லை. மதத்தையும், கோடிக்கணக்கான பக்தர்களின் நம்பிக்கையையும் இந்தத் தீர்ப்பு கண்டுகொள்ளவில்லை. இந்தப் பாரம்பரியத்தை பின்பற்றும் பெரும்பான்மையான பெண்களின் கருத்தையும் கேட்கவில்லை.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு சமூகத்தில் அமைதியையும், நிலைத்தன்மையையும், சமத்துவத்தையும் ஏற்படுத்துவதற்குப் பதிலாக, சமூகத்தில் அமைதியின்மையையும், கொந்தளிப்பையும், பிரிவினையையும் ஏற்படுத்தி இருக்கிறது. பெண்களின் உணர்வுகள் மதிக்கப்படவில்லை.

இந்து சமூகத்தினர் மட்டும் மீண்டும் மீண்டும் தொடர்ந்து அவர்களின் நம்பிக்கைகள் தாக்குதலுக்கு ஆளாக்கப்படுகிறது என்பது கேள்வியாக மக்களின் மனதில் எழுந்தால், அது அமைதியற்ற சூழலை உருவாக்கும். சமூகத்தில் அமைதியான நிலை ஏற்படவும், ஆரோக்கியமான சூழல் ஏற்படவும் இந்தச் சூழல் உகந்ததாக இருக்காது.

அயோத்தியில் ராமர் கோயில்

2019-ம் ஆண்டு தேர்தலுக்கு முன் அயோத்தியில் ராமர்கோயில் என்பது, சுயமதிப்பின் அடிப்படையில் அவசியமாகும். சமூகத்தில் நல்ல சூழலையும், ஒற்றுமையையும் உருவாக்க இது உதவும். ராமர் பிறந்த இடத்தில் கோயில் கட்டுவதற்குக் கோடிக்கணக்கான மக்களின் உணர்வுகளோடு சங்பரிவார் அமைப்பு தொடர்புகொண்டுள்ளது. நாட்டின் உருவகமாக, தர்மத்தின் உருவகமாக இந்தக் கோயில் அமைய வேண்டும்.

இன்னும் கோயில் கட்டுவதற்குத் தகுந்த இடம் இன்னும் ஒதுக்கப்படவில்லை. இருந்தாலும், அந்த இடத்தில் ஏற்கனவே கோயில் இருந்ததற்கான அனைத்து ஆதாரங்களும் உள்ளன.

ஆனால், சில அடிப்படைவாதிகளால் நாட்டின் நலன் என்ற பெயரில் தொடர்ந்து தடைசெய்யப்பட்டு வருகிறது, சுயலாபத்துக்காக சிலர் அரசியல் செய்கிறார்கள். அரசியல் செய்வதால்தான் ராமர் கோயில் கட்டுவது தொடர்ந்து தாமதமாகிக்கொண்டிருக்கிறது. ராமர் கோயில் கட்டுவதற்கு விரைவாக மத்திய அரசு சட்டம் இயற்ற வேண்டும்

இவ்வாறு மோகன் பாகவத் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x