Last Updated : 09 Oct, 2018 02:03 PM

 

Published : 09 Oct 2018 02:03 PM
Last Updated : 09 Oct 2018 02:03 PM

‘தசரா போனஸ்’ - ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் ஊக்கத்தொகை; விரைவில் அறிவிப்பு வெளியாகிறது

தசாரா, தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலத்தையொட்டி, ரயில்வே ஊழியர்களுக்கு இந்த ஆண்டு 78 நாள் ஊதியம், போனஸாக அறிவிக்கப்படலாம் எனத் தெரிகிறது.

இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு அடுத்த சில நாட்களில் மத்திய அமைச்சரவையின் அனுமதி பெற்றவுடன் அறிவிக்கப்படும். கடந்த ஆண்டைப் போல இந்த ஆண்டும் 78 நாள் ஊதியம் ஊக்கத்தொகையாக வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து ரயில்வே துறையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘ரயில்வே தொழிற்சங்கத்துடன் விரிவான ஆலோசனைகள் நடத்தப்பட்டபின், 2017-18-ம் ஆண்டில் ரயில்வே ஊழியர்களுக்கு 78 ஊதியம் உற்பத்தியோடு தொடர்புடைய ஊக்கத்தொகையாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்துக்கு விரைவில் மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது’’ என அவர் தெரிவித்தார்.

விரைவில் 5 மாநிலத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ரயில்வே ஊழியர்களுக்கு வழங்கப்பட உள்ள இந்த போனஸ் தொகை முக்கியத்துவமாகப் பார்க்கப்படுகிறது. மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் பெற்றவுடன் அடுத்த சில நாட்களில் முறைப்படியான அறிவிப்பு வெளியாகும்.

உற்பத்தியோடு தொடர்புடைய ஊக்கத்தொகை(பிஎல்பி) என்பது ரயில்வே துறையில் பணியாற்றும் 12.26 லட்சம் ஊழியர்களுக்குத் தசரா பண்டிகைக்கு முன்பாக ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த போனஸ் தொகை ரயில்வே பாதுகாப்பு படை, ரயில்வே பாதுகாப்புசிறப்பு படைக்கு வழங்கப்படாது.

இது குறித்து ரயில்வே ஊழியர்கள் அமைப்பின் தேசிய கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் எம். ராகவையா கூறுகையில், ‘‘கடந்த ஆண்டு ரயில்வே துறை ரூ.16 ஆயிரம் கோடி வருவாய் ஈட்டியுள்ளது. 1,161 மில்லியன் டன் சரக்குகளைக் கையாண்டுள்ளது. இந்தச் சூழலில் நாங்கள் 80 நாட்கள் போனஸ் கேட்டோம், ஆனால், 78 நாட்கள்போனஸ் தான் கொடுப்போம் என்று தெரிவித்துள்ளனர். இதனால், ஒவ்வொரு ஊழியருக்கும் சராசரியாக ரூ.18 ஆயிரம் கிடைக்கும்’’ எனத் தெரிவித்தார்.

ரயில்வே ஊழியர்கள் தொடர்ந்து 7-வது ஆண்டாக 78-நாட்கள் ஊதியத்தை போனஸாக மாற்றமில்லாமல் பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அனைத்து இந்திய ரயில்வே பணியாளர் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் சிவ கோபால் மிஸ்ரா கூறுகையில், ‘‘ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் ஊதியம் போனஸாக வழங்கப்படும், இதற்கான அறிவிப்பு ஒரு வாரத்துக்குள் வெளியாகும். இது தொழிலார்களுக்கு ஊக்கமாகவும், ரயில்வேயின் நிலையைத் தரம் உயர்த்தியும் காட்டும்’’ எனத் தெரிவித்தார்.

ரயில்வே துறையில் பணியாற்றும் ஊழியர்களில் அதிகாரமில்லாத பணிகளில் இருக்கும் ஊழியர்களுக்கு வழங்கப்டுகிறது. இந்த போனஸ் அறிவிப்பு மூலம், தொழிலாளர்கள் மத்தியில் புதிய உற்சாகம் ஏற்படும். உற்பத்தித் துறையில், பாதுகாப்பு பணியில் இருக்கும் ஊழியர்கள் மத்தியில் ஊக்கம் பிறக்கும், சிறப்பாகப் பணியாற்றுவார்கள் என ரயில்வே நம்புகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x