Published : 25 Oct 2018 09:29 PM
Last Updated : 25 Oct 2018 09:29 PM

ருசியாக சமைத்த ஹோட்டல் சமையல்காரருக்கு ரூ.25,000 டிப்ஸ் அளித்த அமைச்சர்: உணவை ஊட்டிவிட்டு, ஹஜ்பயணத்துக்கும் ஏற்பாடு

ஹோட்டலில் மிகவும் ருசியாக மீன் உணவு சமைத்த சமையல்காரரை அழைத்து ரூ.25 ஆயிரம் டிப்ஸ் அளித்த கர்நாடக அமைச்சர், அவருக்குத் தனது தட்டில் இருந்து உணவை ஊட்டிவிட்டு, புனித ஹஜ் பயணம் செல்லவும் உதவுவதாக உறுதியளித்தார்.

கர்நாடக மாநிலத்தின் உணவு மற்றும் வழங்கல் துறை அமைச்சர் பி ஜமீர் அகமது கான் இந்த நெகிழ்ச்சியான செயலைச் செய்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். அந்த ஹோட்டல் சமையல்காரர் ஹனீப் முகமது இன்ப அதிர்ச்சியில் உறைந்தார்

கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை அமைச்சர் ஜமீர்அகமது கான் மங்களூரு நகருக்கு அலுவல் நிமித்தமாக ஆய்வு மேற்கொண்டார். அப்போது, மதிய உணவுக்கு நகரில் உள்ள “பிஷ் மார்க்கெட்” என்ற ஹோட்டலுக்கு சென்றனர்.

அமைச்சர் ஜமீர் அகமது கானுடன் முன்னாள் எம்எல்ஏ மொய்தீன் பாபா, வக்பு வாரியத் தலைவர் மோனு, இப்திகார் அலி, அமைச்சரின் சகோதரர் காதர் உள்ளிட்டோர் சென்றனர்.

இவர்கள் அனைவரும் பல்வேறு வகையான மீன் வகை உணவுகளை ஆர்டர் செய்து சாப்பிட்டனர். ஆனால் “பாம்பிரட்” மற்றும் “அஞ்சல்” ஆகிய மீன் உணவுகளைச் சாப்பிட்ட அமைச்சர் ஜமீர் அகமது அதன் ருசியில் சொக்கிவிட்டார்.

உடனடியாக அந்த ஹோட்டலின் நிர்வாகியை அழைத்த அமைச்சர் ஜமீர் அகமது, “என் வாழ்நாளில் இதுபோன்ற சுவையான மீன் உணவைச் சாப்பிட்டது இல்லை. உடனடியாக இதைச் சமைத்த சமையல்காரரை(செஃப்) அழைத்துவாருங்கள்” என்று தெரிவித்தார்

இதையடுத்து, அந்த ஹோட்டலின் தலைமை சமையல்கலைஞர் ஹனீப் அகமதுவை அழைத்து அமைச்சரின் முன் நிறுத்தினார்கள். சமையல்கலைஞர் ஹனீப் அகமதுவை தனது அருகே அமரவைத்த அமைச்சர் ஜமீர், தனது தட்டில் இருந்து உணவுகளை எடுத்து அவருக்கு அன்புடன் ஊட்டிவிட்டு அவரைப் பாராட்டினார். அதுமட்டுமல்லாமல், தன்னிடம் இருந்து ரூ.25 ஆயிரம் பணத்தை எடுத்து டிப்ஸாக அளித்து அவரை மகிழ்ச்சிப்படுத்தினார்.

 

மேலும், புனித ஹஜ்பயணம் சென்றுவிட்டாயா எனக் ஹனீபிடம் கேட்ட அமைச்சர், ஹனீப் செல்லவில்லை என்றவுடன், புனித ஹஜ்பயணம் செல்வதற்கான அனைத்து உதவிகளையும் செய்கிறேன் என்று உறுதியளித்து, தனது உதவியாளரிடம் ஹனீப்பின் விவரங்களைப் பெற்றுக்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.

தான் முற்றிலும் எதிர்பாராத இந்த நிகழ்வால் சமையல்கலைஞர் ஹனீப் அகமது மகிழ்ச்சியில் உறைந்தார்.

இதுகுறித்து அவர்கூறுகையில், அமைச்சர் எனக்கு இப்படி இன்பஅதிர்ச்சி அளிப்பார் என்று நினைக்வில்லை. இதற்குமுன் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, குலாம் நபி ஆசாத் ஆகியோர் எனது உணவைச் சாப்பிட்டு இருக்கிறார்கள். அவர்கள் பாராட்டுமட்டும்தான் தெரிவித்தனர். ஆனால், அமைச்சர் ஜமீல் எனக்கு ரூ.25 ஆயிரம் டிப்ஸ் அளித்து, ஹஜ் பயணத்துக்கும் உதவுவதாகத் தெரிவித்துள்ளார். எனது 18 ஆண்டு வாழ்க்கையில் இப்படியான சம்பவத்தை சந்திப்பது இதுதான் முதல் முறை என்று தெரிவித்தார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x