Published : 26 Oct 2018 10:48 AM
Last Updated : 26 Oct 2018 10:48 AM

இப்படியும் மோசடி: போலி நோட்டு கொடுத்து ரூ. 2 லட்சம் தங்க நகை வாங்கி தப்பிச் சென்ற தம்பதி

லூதியானாவில் தங்க நகைக்கடையில் குழந்தைகள் விளையாடும் போலி ரூபாய் நோட்டுக்களை கொடுத்து 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகளை தம்பதியினர் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் தங்க நகைக்கடை வர்த்தகம் செய்து வருபவர் சியாம் சுந்தர் வர்மா. இவரது கடைக்கு அண்மையில் ஒருவர் தனது மனைவியுடன் வந்துள்ளார். பல்வேறு டிசைன் நகைகளை பார்த்த அவர்கள் சுமார் 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகளை பார்த்து அவற்றை வாங்கியுள்ளனர்.

அதற்கான பணம் 2 லட்சம் ரூபாயை, 500 ரூபாய் மற்றும் 2000 ரூபாய் நோட்டுக்களாக ரொக்கமாக செலுத்தியுள்ளனர். தங்களுக்கு அவசர பணி இருப்பதாக கூறி உடனடியாக செல்ல வேண்டும் எனக் கூறியுள்ளனர். இதனால் நோட்டு எண்ணும் இயந்திரத்தில் போட்டு நோட்டுக்களை மட்டும் சியாம் சுந்தர் எண்ணியுள்ளார்.

கொடுக்க வேண்டிய பணம் சரியாக இருந்ததால் நகைளை கொடுத்து வழியனுப்பி வைத்துள்ளார். இதையடுத்து கடையை அடைக்கும் முன்பாக அந்த பணத்தை ஊழியர்கள் தற்செயலாக பார்த்தபோது அதிர்ச்சியடைந்தனர். பார்ப்பதற்கு அசல் ரூபாய் நோட்டுக்களை போல இருக்கும் அவை உண்மையில் குழந்தைகள் விளையாடும் போலியான ரூபாய் நோட்டுக்கள்.

‘ரிசர்வ் பாங்க் ஆப் இந்தியா’ என்ற இடத்தில் ‘எண்டர்டெயின்மெண்ட் ஆப் இந்தியா’ என இருப்பதை கண்டு ஊழியர்கள் அதிர்ந்தனர். உடனடியாக சியாம் சுந்தரிடம் சென்று கூறியுள்ளனர். அவரும் பார்த்து அதிர்ச்சியில் உறைந்தார். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடையில் சிசிடிவி கேமரா இருந்ததால் அந்த காட்சிகளை பெற்று அதன் அடிப்படையில் போலீஸார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x