Published : 03 Oct 2018 09:51 PM
Last Updated : 03 Oct 2018 09:51 PM

கேரளாவில் வெள்ளத்தில் 100 பேரைக் காப்பாற்றிய ஜினீஷ்: விபத்தில் சிக்கியபோது உதவி செய்ய வராததால் பலியான பரிதாபம்

கேரள மாநிலத்தில் கனமழை பெய்து வெள்ளம் சூழ்ந்தபோது, 100 க்கும் மேற்பட்டோரை படகுமூலம் காப்பாற்றிய ஜினீஷ் ஜிரோன் கடந்த வாரம் விபத்தில் சிக்கியபோது உதவிக்குச் சாலையில் சென்றவர்கள் தாமதமாக வந்ததால், பலியான சம்பவம் நடந்துள்ளது.

கேரள மாநிலம் செங்கனூர் பூந்துரா நகரைச் சேர்ந்தவர் ஜினீஷ் ஜிரோன். 24வயதான ஜினீஷ் மீன்பிடித்தொழில் செய்து வந்தார். கடந்த ஆகஸ்ட் மாதம் கேரள மாநிலத்தில் அடைமழை பெய்து, வெள்ளம் பெருக்கெடுத்தது. இதில் பெரும்பாலான மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கின.

இதில் ஜினீஷ் தனது சொந்த படகு மூலமும், தனது நண்பர்கள் குழு மூலமும் மீட்புப்பணியில் ஈடுபட்டார். இதில் ஜினீஷ் மட்டும் வெள்ளத்தில்சிக்கிய 100 பேரைக் காப்பாற்றி இருப்பார், இவர்களின் கோஸ்டல் வாரியர்ஸ் 800-க்கும் மேற்பட்டோரைக் காப்பாற்றினார். ஆனால், ஜினீஷ் பெயர் அரசின் பதிவேட்டில் இல்லை. பதிவேட்டில் பதிவு செய்ய ஜினீஷுக்கு விருப்பமும் இல்லாமல் மீட்புப்பணியில் ஈடுபட்டார்.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை ஜினீஷும், அவரின் நண்பர் ஜெகனும் பைக்கில் செங்கனூர் சென்றனர். அப்போது, செங்கனூர்அருகே பழைய உச்சகடா பகுதியில் வந்தபோது, லாரி மோதியதில் ஜினீஷ் பலியானார். இதில் அவரின் நண்பர் ஜெகன் லேசான காயத்துடன் உயிர்தப்பினார்.

இடுப்புப்பகுதியில் பலமான காயம் ஏற்பட்டு உயிருக்குப் போராடி, ஜினீஷ் உதவிக் கேட்டு கூக்குரலிட்டபோது, நீண்டநேராக சாலையில் சென்றவர்கள் ஒருவர் கூட உதவிக்கு வரவில்லை, ஏறக்குறைய 45 நிமிடங்களுக்கு பின்புதான் ஆம்புலன்ஸ் வந்துள்ளது. ஆனால், சிகிச்சைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே ஜினீஷ் உயிரிழந்தார்.

இதுகுறித்து ஜினீஷ் நண்பர் ஜெகன் ஆங்கில நாளேடு ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது:

கடந்த வெள்ளிக்கிழமை நானும், ஜினீஷும்தான் பைக்கில் செங்கனூர் சென்றோம். நான் பைக்கை ஓட்டினேன். அப்போது பைக் மீது ஒரு லாரி உரசியபோது நிலைதடுமாறி திடீரென கீழே விழுந்தோம். நான் ஒருபுறம் தூக்கி வீசப்பட்டேன், ஆனால், சாலையில் விழுந்த ஜினீஷ் இடுப்புப்பகுதியில் அடிப்பட்டு உயிருக்குப் போராடினான். நானும் காயத்தால் அலறினேன்.

ஆனால், சாலையில் சென்ற வாகனங்கள் யாரும் நிறுத்தி எங்களுக்கு உதவில்லை. கேரள வெள்ளத்தின் போது நூற்றுக்கணக்கானவர்களை மீட்ட ஜினீஷ்க்கு உதவ யாரும் வரவில்லை.

அனைவருக்கும் உதவி செய்வதற்கு விரும்பும் ஜினீஷ்க்கு யாரும் உதவி செய்யவில்லையே எனக்கு அழுகை வந்தது. அதன்பின் 45 நிமிடங்களுக்குப் பின் ஆம்புலன்ஸ் வந்து ஜினீஷை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்கள். ஆனால், சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாகப் பலியானார் எனத் தெரிவித்தார்.

ஜினீஷின் தாய் செல்வி கூறுகையில், எனது மகன் ஜினீஷ் வெள்ளத்தில் சிக்கிய ஏராளமானோரைக் காப்பாற்றிவிட்டு வந்தபோது மிகவும் பெருமைப்பட்டேன். ஆனால், அவன் விபத்தில் சிக்கி உயிருக்காகவும், உதவிக்காகவும் போராடியபோது, ஒருவர் கூட உதவவில்லை என்ற போது வேதனையளிக்கிறது. என் மகன் இறப்பு பாடமாக இருக்கட்டும். இனிமேல், சாலையில் யாரேனும் விபத்தில் சிக்கி இருந்தால், அவர்களுக்கு வாகனத்தில் செல்பவர்கள் உதவி செய்யுங்கள் என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x