Published : 12 Oct 2018 08:37 AM
Last Updated : 12 Oct 2018 08:37 AM

வார்த்தை விளையாட்டை தொடங்கினார் சசி தரூர்

‘தி பாரடாக்ஸிகல் பிரைம் மினிஸ்டர் நரேந்திர மோடி அண்ட் ஹிஸ் இந்தியா' (THE PARADOXICAL PRIME MINISTER NARENDRA MODI AND HIS INDIA) என்ற தலைப்பில் காங்கிரஸ் எம்.பி., சசி தரூர் புதிய புத்தகத்தை எழுதியுள்ளார். ‘சொல் வேறு, செயல் வேறு' என்று தலைப்பிலேயே பிரதமர் மோடியின் ஆளுமையை அவர் விமர்சனம் செய்துள்ளார். டெல்லியைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ‘ஆல்ப்' புத்தக நிறுவனம் வரும் 26-ம் தேதி இந்த புத்தகத்தை வெளியிடுகிறது.

இதுகுறித்து சசி தரூர் நேற்று முன்தினம் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், “எனது புத்தகம் 400 பக்கங்களைக் கொண்ட ‘Floccinaucinihilipilification' முயற்சி. இதை அறிய புத்தகத்தை முன்கூட்டியே பதிவு செய்யுங்கள்” என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த நீளமான ஆங்கில வார்த்தைக்கு அர்த்தம் புரியாமல் விழித்த ட்விட்டர்வாசிகள், கூகுள், அகராதிகளில் அர்த்தத்தைத் தேடி அலைந்தனர். 6 மணி நேரத்தில் 3,454 பேர் கூகுளில் அர்த்தம் தேடியுள்ளனர். ஆக்ஸ்போர்டு அகராதியின்படி இது ஒரு பெயர்ச்சொல். “மதிப்பே இல்லாதது என்று சிலவற்றை துச்சமாக மதிப்பிடுவது” என்பது இதன் அர்த்தமாகும்.

சசி தரூர் ட்விட்டரில் நேற்று வெளியிட்ட பதிவில், எனது பதிவால் ‘hippopotomonstrosesquipedaliophobia' (பயம்) ஏற்பட்டிருந்தால் என்னை மன்னித்து விடுங்கள்” என்று குறிப்பிட்டிருந்தார்.

புதிய வார்த்தையைப் பார்த்து ட்விட்டர்வாசிகள் குழம்பிவிடக் கூடாது என்பதற்காக அதற்கான அர்த்தத்தை, அடைப்புக் குறிக்குள் அவரே விளக்கியிருந்தார். நீளமான வார்த்தைகளைப் பார்த்து ஏற்படும் பயத்தைக் குறிப்பிடவே இந்த வார்த்தைப் பயன்படுத்தப்படுகிறது என்று விளக்கமளித்து கூகுள், அகராதி தேடலுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

இரண்டே, இரண்டு வார்த்தை களால் சமூக வலைதளத்தில் வார்த்தை விளையாட்டை சசி தரூர் தொடங்கி வைத்துள்ளார். அவர் பயன்படுத்திய வார்த்தைகளைவிட மிக நீளமான வார்த்தைகளைக் குறிப்பிட்டு ட்விட்டர்வாசிகள், சசி தரூருக்கு சவால் விடுத்து வருகின்றனர்.

‘தி லையிங் லாமா' என்ற பெயரில் உலாவரும் ட்விட்டர் பயன்பாட்டாளர் ஒருவர், “உங்கள் புத்தகத்தால் எனக்கு pneumonoultramicroscopicsilicovolcanoconiosis ஏற்படவில்லை. இந்த வார்த்தைக்கு நீங்கள் (சசி தரூர்) கூகுளைத் தேடுங்கள்” என்று சவால் விடுத்துள்ளார்.

மற்றொருவர், “இந்த புத்தகத் தைப் படிக்க அகராதி ஒன்றை இலவசமாகத் தர முடியுமா” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இன்னொருவர் “என்னால் ஓர் ஆங்கில அகராதியைத் தூக்கிச் சுமக்க முடியாது. நிச்சயமாக புத்தகத்தை வாங்கமாட்டேன்” என்று கிண்டலடித்துள்ளார்.

சசி தரூர் பயன்படுத்திய வார்த் தையை ஒரு குழந்தை உச்சரிக்க முயற்சிக்கும் வீடியோவை பதிவிட்டுள்ளார் ரேவதி.

இதற்குப் பதிலளித்துள்ள சசி தரூர், “குழந்தையிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்” என்று பணிவுடன் குறிப்பிட்டுள்ளார்.

“தயவு செய்து நிறுத்துங்கள் Tharoorjiiiiiiiiiiiiii. shashilogophobia பயத்தால் உங்கள் புத்தகத்தைப் படிக்க மக்கள் பயப்படக்கூடும்” என்று தெரிவித்துள்ளார் ஜெய விஜயன். இதற்குப் பதிலளித் துள்ள சசி தரூர், “ட்விட்டரில் மட்டுமே இந்த வார்த்தைகளைப் பயன்படுத்தியுள்ளேன். புத்தகத் தில் இவை எதுவுமே வராது” என்று உறுதியளித்துள்ளார்.

ஆங்கிலத்தில் நன்கு புலமை வாய்ந்த சசி தரூர் இதற்கு முன்பு lalochezia, farrago, rodomontade, webaqoof, snollygoster என்பன உள்ளிட்ட அரிதினும் அரிதான ஆங்கில வார்த்தைகளை ட்விட்டரில் அறிமுகப்படுத்திய பெருமைக்குரியவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x