Published : 23 Oct 2018 09:49 PM
Last Updated : 23 Oct 2018 09:49 PM

ஐயப்பன் பிரம்மச்சாரி; கோயில் கதவைபூட்டுவேன் என்று கூறிய தந்திரி பிரம்மச்சாரியா?-பினராயி விஜயன் கேள்வி

 

ஐயப்பன் பிரம்மச்சாரி கடவுள், அது சரி,  கோயிலுக்குள் பெண்கள் நுழைந்தால், சன்னிதானத்தின் கதவைப் பூட்டுவேன் என்று கூறிய தந்திரி பிரம்மச்சாரியா என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்தச் சூழலில் முதல்வர் பினராயி விஜயன் திருவனந்தபுரத்தில் நிருபர்களுக்கு இன்று பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

சபரிமலைக்கு வரும் பெண் பக்தர்களைத் தடுக்கும் வகையில் சில கிரிமினல்கள் முகாம் அமைத்துத் தங்கி இருக்கிறார்கள். இனிவரும் காலங்களில் அது தடுக்கப்படும் பெண்கள் தடையின்றி வர அனுமதிக்கப்படுவார்கள். கோயில் என்பது அமைதியைத் தரும் இடமாக இருக்க வேண்டும், சாமி தரிசனம் செய்யவரும் பெண்களுக்கு எதிராக போராட்டக்களமாகவும், சத்தமிடும் இடமாகவும் இருக்கக்கூடாது.

நவம்பர் 17-ம்தேதி தொடங்கும் சபரிமலை மண்டல பூஜையின்போது, சபரிமலைக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை முறைப்படுத்தப்படும். திருப்பதி கோயிலில் கடைப்பிடிக்கப்படும் முறைபோல், பக்தர்கள் சாமி தரிசனம்செய்யும் அளவு முறைப்படுத்தப்படும்.

திருப்பதியில் பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு முன்பதிவு செய்வதுபோல், சபரிமலையிலும் முன்பதிவு முறை செயல்படுத்தப்படும். இதன் மூலம் நாடுமுழுவதும் இருந்து வரும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வது எளிதாகும்.

இந்த நடவடிக்கை மூலம் சந்தேகத்துக்குரிய பார்வையாளர்கள் வந்தால் அவர்கள் யாரென்பது கண்டுபிடித்துத் தடுக்க முடியும் எனத் தெரிவித்தார்.

இந்நிலையில், பத்தினம்திட்டாவில் இன்று நடந்த கூட்டத்தில் முதல்வர் பினராயி விஜயன், பேசினார். அப்போது சபரிமலை கோயிலுக்குள் பெண்கள் நுழைந்தால், கதவைப் பூட்டுவேன் என்று சன்னிதானத்தின் தந்திரி பேசியதற்கு கடும் கண்டனம் தெரிவித்தார். அப்போது அவர் பேசியதாவது:

சபரிமலை ஐயப்பன் நைஷ்டிக பிரம்மச்சாரி என்று பக்தர்களால் நம்பப்படுகிறது. அது உண்மைதான். அத்தன்காரணமாகவே பக்தர்கள் பிரம்மச்சாரியாகவே இருக்கிறார்கள். வடமாநிலங்களில் இருக்கும் சில கோயில்களில், பூஜை செய்யும் அர்ச்சகர்கள் கூட பிரம்மச்சாரியாக இருக்கிறார்கள். அதுதான் உண்மை. அவர்கள் திருமணம் செய்துகொள்ளக்கூடாது.

அப்படி இருக்கும்போது, பெண்கள் கோயிலுக்குள் நுழைந்தால் சன்னிதானத்தின் கதவை பூட்டுவேன் என்று கூறிய சபரிமலை ஐயப்பன் கோயில் தந்திரி பிரம்மச்சாரியா?. அவர் வாழும் இல்லறவாழ்க்கையை குறித்துநான் தவறாகச் சொல்லவில்லை. அதையும் கடந்து, பெண்களுடன் தவறான தொடர்பு இருந்தது. எர்ணாகுளத்தில் என்ன நடந்தது என்பது நமக்குத் தெரியும்.

தற்போது கோயில் தந்திரியாக இருக்கும் கண்டடரு மோகனரு, கடந்த 2006-ம் ஆண்டு ஒரு கும்பலால் கடத்தப்பட்டு, ஒரு பெண்ணுடன் இணைத்து புகைப்படம் எடுக்கப்பட்டது தெரிந்திருக்கும்.

சபரிமலை கோயில் என்பது திருவிதாங்கூர் தேவஸ்தான வாரியத்துக்குக் கட்டுப்பட்டது. எந்தவிதமான தனிநபருக்கும், குடும்பத்துக்கும் கட்டுப்பட்டது இல்லை.

இவ்வாறு பினராயி விஜயன் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x