

பஞ்சாப் ரயில் விபத்துக்கு காரணமான நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பஞ்சாப் அமைச்சர் நவ்ஜோத் சிங் சித்துவின் மனைவி விபத்து நடந்தபோது அதைப்பற்றி கவலைப்படாமல் அங்கிருந்து சென்றுவிட்டார் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் தயவுசெய்து இதை அரசியல் ஆக்காதீர் என சித்து வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தசரா விழா நேற்றுடன் கோலாகலமாக நிறைவ டைந்தது. இதை முன்னிட்டு நாட்டின் பல்வேறு பகுதிகளில் ராவணனை வதம் செய்யும் நிகழ்ச்சிகள் பிரம்மாண்டமாக நடந்தன.இதன் ஒருபகுதியாக பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நகருக்கு அருகில் உள்ள ஜோதா பதக் என்ற இடத்தில் ராவண வதம் நிகழ்ச்சி நடைபெற்றது.
அப்போது, தண்டவாளத்தில் நின்று நிகழ்ச்சிகளைப் பார்த்துக் கொண்டிருந்த பொதுமக்கள் மீது ரயில் மோதியதில் 60 பேர் அதே இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 80-க் கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
இன்று காலை அமிர்தசரஸ் மருத்துவமனைகளுக்கு அமைச்சர் சித்து வந்திருந்தார். ரயில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை பார்வையிட்ட பின் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
''எதிர்க்கட்சிகளின் இக்குற்றச்சாட்டை நான் முற்றிலுமாக மறுக்கிறேன். எனது மனைவி நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வந்திருந்தார். விபத்து நடந்தபோது அவரிடம் நான் தொலைபேசியில் தொடர்பு கொண்டேன். அவர் தான் மருத்துவமனையில் இருப்பதாக தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் கலந்துகொண்டுவிட்டு பிறகு அவர் வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்தார். வீட்டில் வந்திறங்குவதற்கு முன்பே அந்த சம்பவம் பற்றி அவருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்நிலையில் உடனே அவர் மருத்துவமனைக்கு விரைந்துள்ளார். அங்கு உயிரிழந்தவர்கள், பாதிக்கப்பட்டவர்கள் அனைவரையும் சென்று என் மனைவி கவுர் சந்தித்தார். தற்செயலாக நடந்து இந்த கோர விபத்து சம்பவத்தை அரசியல் ஆக்கிவிடாதீர்கள்'' என்று நவ்ஜோத் சிங் சித்து கேட்டுக்கொண்டுள்ளார்.
இதில் மாநில கலாச்சார அமைச்சரும் சித்துவின் மனைவி அந்நேரம் மருத்துவமனையில் நோயாளிகளை சந்தித்ததை உறுதி செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
39 பேர் அடையாளம்
ரயில் விபத்தில் உயிரிழந்த 61 பேரில் 39 பேரின் அடையாளம் கண்டறியப்பட்டுள்ளதாகவும் காயமடைந்த 70 பேரில் 7 பேர் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாகவும் அதிகாரிகள் இன்று தெரிவித்தனர். ரயில் விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக அருகிலுள்ள 7 மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை உயிரிழந்த 29 பேரின் உடல்கள் பிரேத பரிசோதனை முடிவடைந்துள்ளது.
சூழ்நிலையை கட்டுக்குள் கொண்டுவருவதற்காக ஒரு பெரும் போலீஸ் படைகள் அங்கு நிறுத்தப்பட்டுள்ளது. பஞ்சாப் முதலமைச்சர் அமீர்ந்தர் சிங் இன்று அந்த இடத்தை சென்று பார்வையிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விபத்துக்குள்ளான ரயில் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார். ரயில் ஓட்டுநரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
''கடந்த 20 ஆண்டுகளாக இதே காலி மைதானத்தில்தான் ராவண வதம் புராண நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. ஆனால் இப்படியொரு அசம்பாவிதம் வேறு எப்போதும இதுபோல நடந்ததில்லை. இச்சம்பவம் நேற்று மாலை 7.10க்கு இந்த ரயில் விபத்து நடந்தது'' என உள்ளூர் மக்கள் தெரிவித்துள்ளனர்.
ரயில்வேக்கு சொந்தமான இப்பகுதியில் 'ராவண வதம்' திருவிழா நடத்த எவ்வித அனுமதியும் பெறப்படவில்லை என மூத்த ரயில்வே துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இவ்விபத்துக்கு ரயில்வே துறை பொறுப்பேற்க முடியாது என ரயில்வே போர்டு சேர்மன் அஷ்வினி லோஹானி தெரிவித்துள்ளார். அமிர்தசரஸ் நகராட்சி நிர்வாகம் தங்களிடம் தோபி காட் மைதானத்தில் நிகழ்ச்சி நடத்த அனுமதி பெறப்படவில்லை என கூறியுள்ளது.
விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிபுரிய ரயில்வே ஹெல்ப்லைன் தெரிவித்துள்ள எண்கள்: 0183-2223171, 0183-2564485.