Published : 26 Oct 2018 11:36 AM
Last Updated : 26 Oct 2018 11:36 AM

சபரிமலை விவகாரத்தில் கைது 1407; வழக்கு 440’ - கேரள அரசு நடவடிக்கை; பாஜக போராட்டம்

சபரிமலையில் பெண்கள் செல்ல எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியதாக 1407 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இன்றும் கைது நடவடிக்கைகள் தொடர்கின்றன. இதை எதிர்த்து பாஜக இன்று போராட்டம் நடத்த உள்ளது.

சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதிக்குக் கடந்த மாதம் 28-ம்தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால், இந்தத் தீர்ப்பு அளிக்கப்பட்டதில் இருந்து எதிர்ப்புத் தெரிவித்து, கேரளாவில் நாள்தோறும் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள் நடந்து வருகின்றன. 10வயது முதல் 50 வயது வரையிலான பெண்களை அனுமதிக்கமுடியாது என்று தொடர்ந்து போராட்டக்காரர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

சபரிமலை ஐயப்பன் கோயில் நடை, மாதாந்திர பூஜைக்காக கடந்த வாரம் திறக்கப்பட்டது. ஆனால், பெண்களை அனுமதிக்கக் கேரள அரசு தீவிரம் காட்டி போதுமான போலீஸ் பாதுகாப்பை உறுதி செய்திருந்தாலும் போராட்டக்காரர்கள் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் பெண்களை அனுமதிக்காமல் போராடம் நடத்தினர்.

கோயிலுக்குள் வர முயன்ற பெண்கள் திருப்பி அனுப்பிவிடப்பட்டனர். இதனால், பதற்றமான சூழல் ஏற்பட்டது. சபரிமலை ஐயப்பன் கோயில் திறந்து இருந்த 5 நாட்களே பம்பை, நிலக்கல், சபரிமலையில் போர்க்களம் போல் காட்சியளித்தது. கோயிலுக்கு செல்ல முயன்ற பெண்கள் இறுதி வரை அனுமதிக்கப்படவில்லை.

இந்தநிலையில் ஐயப்பன் கோயிலுக்குள் செல்ல முயன்ற பெண்களை தடுத்து பம்பை, சபரிமலை, நிலக்கலில் போராட்டம் நடத்தியது தொடர்பாக கேரள போலீஸார் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். போராட்டம் நடத்தியவர்களுக்கு எதிராக மாநிலம் முழுவதும் இதுவரை 1407 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கேரளா முழுவதும் இன்றும் கைது நடவடிக்கைகள் தொடர்கின்றன. திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, கோட்டயம், எர்ணாகுளம் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்றும் தேடுதல் வேட்டை நடந்துள்ளது. போராட்டம் நடத்தியது தொடர்பாக மொத்தம் 440 வழக்குகள் இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ளன.

கேரள அரசின் நடவடிக்கையை கண்டித்து இன்று போராட்டம் நடத்தப்போவதாக பாஜக அறிவித்துள்ளது. இதுகுறித்து கேரள மாநில பாஜக தலைவர் ஸ்ரீதரன் பிள்ளை கூறுகையில் ‘‘கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களால் நடத்தப்படும் இந்த அரசு, ஐய்யப்பன் கோயில் புனிதத்தை சீர்குலைக்க எண்ணுகிறது. இவ்வளவு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கேரளா முழுவதும் இன்று போராட்டம் நடைபெறும். நீதிமன்றத்தையும் அணுக முடிவு செய்துள்ளோம்’’ எனக் கூறினார். இதனிடையே பத்தனம்திட்டா உள்ளிட்ட இடங்களில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x