

உச்ச நீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகு ஐப்பசி மாத பூஜைக்காக திறக்கப்பட்ட சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நேற்று சாத்தப்பட்டது. கடந்த 5 நாட்களில் ஒரு பெண் கூட ஐயப்பனை தரிசிக்கவில்லை.
அனைத்து வயது பெண்களை யும் ஐயப்பன் கோயிலில் அனுமதிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு ஐயப்ப பக்தர்களும் பிற அமைப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனிடையே நீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகு முதன்முறையாக கடந்த 17-ம் தேதி ஐப்பசி மாத பூஜைக்காக கோயில் நடை திறக்கப்பட்டது.
எனினும், 10 முதல் 50 வயது வரையிலான பெண்கள் கோயிலுக்கு சென்றால் அவர்களை தடுத்து நிறுத்துவோம் என பக்தர்கள் அறிவித்தனர். கோயிலுக்கு செல்லும் முக்கிய வழிகளான நிலக்கல் மற்றும் பம்பை ஆகிய பகுதிகளில் கூடியிருந்த ஐயப்ப பக்தர்கள், பெண்கள் செல்வதை தடுத்து நிறுத்தினர்.
இந்நிலையில், மாதாந்திர பூஜையின் இறுதி நாள் என்ப தால் நேற்று ஏராளமான இளம் பெண்கள் கோயிலுக்கு செல்ல திட்டமிட்டுள்ளதாக போலீஸா ருக்கு தகவல் கிடைத்தது. இதை யடுத்து பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டது.
இதனிடையே, கேரளாவின் கோட்டயம் நகரைச் சேர்ந்த பிந்து டி.வாசு என்ற பெண், ஐயப்பன் கோயிலுக்கு செல்ல விரும்புவதாகவும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் நேற்று காலையில் போலீஸாரிடம் கோரிக்கை வைத்தார். இதை யடுத்து, போலீஸார் பிந்துவை தங்கள் ஜீப்பில் ஏற்றிக் கொண்டு பம்பையை நோக்கி புறப்பட்டனர். அப்போது போராட்டக்காரர்கள் அந்த ஜீப்பை தடுத்து நிறுத்தி கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் பிந்து தனது திட்டத்தைக் கைவிட்டார்.
இதுபோல ஆந்திராவைச் சேர்ந்த மேலும் 4 பெண்கள் நேற்று ஐயப்பன் கோயிலுக்கு செல்ல முயன்றனர். இதற்கு பக்தர்கள் கடும் எதிர்ப்பு காரணமாக அவர்களால் கோயிலுக்கு செல்ல முடியவில்லை.
கடந்த 5 நாட்களாக சுமார் 15 பெண்கள் ஐயப்பன் கோயிலுக்கு செல்ல முயற்சி செய்தனர். ஆனால், பக்தர்களின் கடும் எதிர்ப்பு காரணமாக ஒரு பெண் கூட ஐயப்பனை தரிசனம் செய்ய முடியவில்லை. அனைவரும் பாதியிலேயே திரும்பிவிட்டனர்.
கண்ணீர்விட்ட ஐஜி
ஐயப்பன் கோயிலுக்கு செல்ல விரும்பும் பெண்களின் பாதுகாப்பு பணிகளை கவனிப்பதற்கான பணியில் போலீஸ் ஐஜி எஸ்.ஸ்ரீஜித் ஈடுபடுத்தப்பட்டிருந்தார். ஸ்ரீஜித் சாதாரண உடையில் நேற்று காலையில் ஐயப்பனை தரிசனம் செய்தார். அப்போது அவரது கண்களில் கண்ணீர் வழிந்ததைப் பார்க்க முடிந்தது.
ஐயப்பன் கோயிலில் 5 நாள் பூஜை முடிந்ததையடுத்து, நேற்று இரவு நடை சாத்தப்பட்டது. முன்னதாக, ஐயப்பன் கோயில் வளாகத்தில் நேற்று இரவு பெண்கள் ஊடுருவி இருப்பதாக வதந்தி பரவியதையடுத்து, அவர்கள் கோயிலுக்குள் நுழைவதைத் தடுப்பதற்காக இந்து அமைப்பினர் மனித சங்கிலி அமைத்தனர். அடுத்தபடியாக கார்த்திகை மாத மண்டல பூஜைக்காக கோயில் நடை மீண்டும் திறக்கப்படும்.
ராகுல் ஈஸ்வருக்கு ஜாமீன்
உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக போராடியதால், ஐயப்ப தர்ம ஜன சேனா தலைவரும் சபரிமலை தந்திரி குடும்ப உறுப்பினருமான ராகுல் ஈஸ்வர் கடந்த வாரம் கைது செய்யப்பட்டார். அவருக்கு பத்தனம்திட்டா முன்சீப் நீதிமன்றம் நேற்று ஜாமீன் வழங்கியது.
திருவாங்கூர் தேவசம் வாரிய தலைவர் ஏ.பத்மகுமார் நேற்று கூறும்போது, "ஐயப்பன் கோயில் தொடர்பான மறு ஆய்வு மனு விசாரணையின்போது எத்தகைய நிலையை கடைபிடிப்பது என்பது குறித்து செவ்வாய்க்கிழமை (இன்று) ஆலோசனை நடத்த உள்ளோம்" என்றார்.
உச்ச நீதிமன்றம் முக்கிய முடிவு
உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தேசிய ஐயப்ப பக்தர்கள் சங்கம் சார்பில் அதன் தலைவர் ஷைலஜா விஜயன் கடந்த 8-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்தார். இதுபோல, நாயர் சர்வீஸ் சொசைட்டி உட்பட பல்வேறு தரப்பினர் சார்பிலும் மறு ஆய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்நிலையில் தசரா விடுமுறைக்குப் பிறகு நேற்று நீதிமன்றம் கூடியது. அப்போது, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் நீதிபதி எஸ்.கே.கவுல் ஆகியோ்ர் அடங்கிய அமர்வு இந்த மனுக்களை பரிசீலித்தது. பின்னர் நீதிபதிகள் கூறும்போது, “சபரிமலை ஐயப்பன் கோயில் தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி 19 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து செவ்வாய்க்கிழமை (இன்று) முடிவு செய்யப்படும்” என்றனர்.