Published : 23 Oct 2018 04:51 PM
Last Updated : 23 Oct 2018 04:51 PM

சபரிமலை: அவமரியாதை செய்ய யாருக்கும் உரிமை இல்லை: ஸ்மிருதி இரானி அதிரடி பேச்சு

சபரிமலை கோயிலுக்கு சென்று வழிபாடு நடத்த அனைவருக்கும் உரிமை உள்ளது, மாதவிடாய் காலத்தில் சானிட்டரி நாப்கின் அணிந்து ரத்தம் சொட்ட நண்பர்கள் வீ்ட்டுக்குச் செல்வீர்களா, புனிதமான இடத்தை அவமரியாதை செய்ய யாருக்கும் உரிமை இல்லை என மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதிக்குக் கடந்த மாதம் 28-ம்தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால், இந்தத் தீர்ப்பு அளிக்கப்பட்டதில் இருந்து எதிர்ப்புத் தெரிவித்து, கேரளாவில் நாள்தோறும் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள் நடந்து வருகின்றன. 10வயது முதல் 50 வயது வரையிலான பெண்களை அனுமதிக்கமுடியாது என்று தொடர்ந்து போராட்டக்காரர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

சபரிமலை ஐயப்பன் கோயில் நடை, மாதாந்திர பூஜைக்காக கடந்த வாரம் திறக்கப்பட்டது. ஆனால், பெண்களை அனுமதிக்கக் கேரள அரசு தீவிரம் காட்டி போதுமான போலீஸ் பாதுகாப்பை உறுதி செய்திருந்தாலும் போராட்டக்காரர்கள் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் பெண்களை அனுமதிக்காமல் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

கோயிலுக்குள் வர முயன்ற பெண்கள் திருப்பி அனுப்பிவிடப்பட்டனர். இதனால், பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக பல்வேறு தரப்பினரும் மறு சீராய்வு மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

இந்த நிலையில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி சபரிமலை விவகாரம் தொடர்பாக அதிரடியாக பேசியுள்ளார். பிரிட்டிஷ் தூதரகம் சார்பில் மும்பையில் நடந்த நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறுகையில் ‘‘சபரிமலை ஐயப்பன் கோயில் தொடர்பாக உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை மத்திய அமைச்சர் என்ற முறையில் வரவேற்கிறேன். அதேசமயம் தனிப்பட்ட முறையில் எனது கருத்தை இங்கு தெரிவிக்கிறேன். சபரிமலை கோயிலுக்குச் சென்று வழிபாடு நடத்த அனைவருக்கும் உரிமை உள்ளது.

ஆனால் அவமரியாதை செய்ய யாருக்கும் உரிமை இல்லை. மற்றவர்களின் நம்பிக்கையை மதிக்க வேண்டும். மாதவிடாய் காலத்தில் சானிட்டரி நாப்கின் அணிந்து மாதவிடாய் ரத்தம் சொட்ட நண்பர்கள் வீட்டுக்குச் செல்வீர்களா? மாட்டீர்கள் அல்லவா?

அதே போன்ற மரியாதை கடவுளின் வீடான கோயிலுக்குச் செல்லும் போதும் இருக்க வேண்டும். இதுதான் வழிபாட்டுக்கும், மரியாதைக்கும் உள்ள வித்தியாசம். கோயிலுக்குச் சென்று வழிபாடு நடத்தும் உரிமை உள்ள அதேசமயம் மற்றவர்களின் உயரிய நம்பிக்கையை மதிக்க வேண்டும். இது எனது தனிப்பட்ட கருத்து. இதுபோலவே பார்சி கோயிலுக்குச் செல்லும்போது எங்கள் குடும்பத்தினரும் இதையே தான் பின்பற்றுகிறோம்’’ என பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x